முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவுக்கு அத்தனகல்ல தொகுதியை வழங்கி அவரை அரசியலுக்கு கொண்டு வர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அத்தனகல்ல தொகுதியை பொறுப்பேற்று அரசியலுக்கு வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மூலம் விமுக்தி குமாரதுங்கவை வலியுறுத்தி வந்துள்ளார்.
பண்டாரநாயக்கவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை தொடர்ந்தும் ராஜபக்ஷவினரின் இருப்புக்காக கட்சியில் தக்க வைத்திருப்பதே மகிந்த ராஜபக்ஷவின் தந்திரத்தின் நோக்கம் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், விமுக்தி குமாரதுங்க அல்லது யசோதரா ஆகியோரில் எவரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என பத்திரிகை ஒன்றின் நேர்காணலில் கருத்து தெரிவித்த சந்திரிக்காவின் மூத்த சகோதரியான சுனேத்ரா பண்டாரநாயக்க கூறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மீண்டும் அரசியலுக்கு வருவதை அவரின் இரண்டு பிள்ளைகளும் எதிர்த்து வருவதாகவும் சுனேத்ரா குறிப்பிட்டிருந்தார்.
இதனடிப்படையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யோசனை ஒரேயடியாக நிராகரிக்கப்பட்டு விட்டதாக பேசப்படுகிறது.
விமுக்தி குமாரதுங்க, கால்நடை மருத்துவ நிபுணராக இங்கிலாந்தி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments