Subscribe Us

எரியும் தர்காவில், சாம்பலாகும் புத்தரின் புனிதம்...!

(நவாஸ் சௌபி)

எரியுண்ட  அழுத்கம தர்கா நிலத்தின் மீது
எஞ்சிக் கிடப்பது சாம்பல் மேடுகளல்ல
புத்தரின் போதனைகள்தான்.

காவியின் பெயரால்
நாவுகளில் தீயச் சுமந்தவர்கள்
பள்ளிகள் கடைகள் வீடுகள் என்று
தங்கள் நாவுரசி
மூட்டிய இனவாத நெருப்பு
புத்தரின் மீது தாவியே எரிந்தது.

வெட்டி வீழ்த்தையிலும்
முக்காட்டை மூடிய எமது உம்மாக்களின்
முந்தானைப் பிடவையைப் பார்த்து
வெட்கித்து தலைகுனிந்து அவிழ்ந்த காவியை
மேல் கூசாது அணிந்து
வாளோடு நின்ற புத்தரின் புதல்வர்கள்
நாட்டின் தர்மத்தின் மீதும் இரத்தத்தைப் பூசினர்.

எங்களில் இருந்து சீறிப் பாய்ந்த இரத்தத்தை
காவியால் துடைத்துக் கொண்டு
நிற்பவர்கள் மீது சத்தியமாகச் சொல்கிறோம்
நீங்கள் கொழுத்தியது எங்களை அல்ல
புத்தரின்  புனிதத்தைத்தான்.

பிறந்து ஐம்பது நாட்களும் ஆகாத
குழந்தையின் துடி துடித்துப்போன உயிருக்காக
தாயின் முலையிலிருந்து வற்றிப்போன பாலிலும்
இந்த இழப்பின் துயர் உறைந்துகிடக்கிறது
புத்தரின் முகத்திலும் அதன் துயர்...!!

Post a Comment

0 Comments