நவாஸ் ஷெரீப்பின் தாயாருக்கு மோடி அழகிய சால்வையை பரிசாக தந்தனுப்பினார். அந்த சால்வையை தனது பாட்டியிடம் தந்தை ஒப்படைத்து விட்டதாக
கூறி, நரேந்திர மோடிக்கு மகள் மரியம் நன்றி தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி கடந்த 26-ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த
கண்கவர் விழாவில் நாட்டின் 15-வது பிரதமராக பதவி ஏற்ற விழாவில்,
இந்தியாவின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட
தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது வரலாற்று நிகழ்வாக அமைந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு, டெல்லியில் தங்கிய பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ் ஷெரீப், அங்கு ஐதராபாத் பவனில் பிரதமர் நரேந்திர மோடியை
நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது பரஸ்பரம் அவர்கள் இருவரும்
தாயார்களின் நலம் குறித்து விசாரித்துக்கொண்டனர். இந்த சந்திப்பு, இரு
தரப்பிலும் இருந்து வந்த தொடக்க கட்ட சிக்கல்களை அகற்றியிருப்பதுடன்,
இனிமையான சந்திப்பாக அமைந்து விட்டதை, சந்திப்புக்கு பிந்தைய தகவல்கள்
வெளிப்படுத்துகின்றன.
இதுபற்றி நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “(நேற்று
முன்தினம்) மாலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேசினேன். அவர்
சில உணர்வுமயமான தகவல்களை பரிமாறிக்கொண்டார். நவாஸ் ஷெரீப்ஜி, தான்
இஸ்லாமாபாத்தில் வசித்தாலும், வாரம் ஒரு முறை தனது தாயாரை சென்று பார்த்து
வருவதாக கூறினார்.
இந்த முறை, அவர் தனது தாயாருடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, எனது
தாயார் எனக்கு இனிப்பு ஊட்டிய காட்சியை டி.வி.யில் பார்த்து
இருக்கிறார்கள். அந்த காட்சிகள் நவாஸ் ஷெரீப்ஜி மற்றும் அவரது தாயாரை நெகிழ
வைத்துள்ளது. அதுவும் இந்த காட்சியைப் பார்த்து விட்டு தனது தாயார்
உணர்வுமயமாகி விட்டதாக நவாஸ் ஷெரீப்ஜி என்னிடம் கூறினார்” என
தெரிவித்துள்ளார்.
சந்திப்பு முடிவின்போது நவாஸ் ஷெரீப்பின் தாயாருக்கு நரேந்திர மோடி ஒரு
அழகிய சால்வையை பரிசாக தந்து அனுப்பினார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் நாடு திரும்பிய
கையோடு, நவாஸ் ஷெரீப் தனது தாயாரை சென்று பார்த்து நலம் விசாரித்ததுடன்,
நரேந்திர மோடி தந்து அனுப்பிய அழகிய சால்வையை தனது தாயாரிடம் ஒப்படைத்தார்.
இதற்காக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம், நரேந்திர மோடிக்கு நன்றி
தெரிவித்துக்கொண்டார். இதுபற்றி அவர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில்,
“பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, எனது பாட்டிக்கு நீங்கள் தந்து அனுப்பிய
அழகிய சால்வைக்கு மிகவும் நன்றி. அதை எனது தந்தை, பாட்டியிடம் நேரில்
சந்தித்து வழங்கிவிட்டார்” என குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல, அந்த
சால்வையின் படத்தினையும் வெளியிட்டுள்ளார்.

0 Comments