(பிஸ்ரின் முஹம்மத்)
பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த நான்கு தேரர்களும் மற்றும் இருவரும் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 9 ஆம் திகதி கொழும்பு, கொம்பனித் தெருவில் ஹோட்டல் ஒன்றில் வைத்து வட்டரேக்க விஜித்த தேரரை அச்சுறுத்தியமை மற்றும் கடந்தமாதம் 12 ஆம் திகதி புனித அல்குர்ஆனை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர், விதாரன்தெனியே நன்த தேரர், ஆரியவங்ச கம சமித்தி தேரர், கிரிகல்பொத்தே சன்திரானந்த தேரர் மற்றும் பானலிவேவல, கங்கானம் பத்திரகே குணவர்தன ஆகியோரே நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரனைகளை முன்னெடுத்து வந்துள்ளதுடன். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர திசாநாயக்கவால் இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில கருத்து தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றம் நான்கு தேரர்களுக்கும் மேலும் இருவருக்கும் தலா ஒருஇலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணை வழங்கி விடுதலை செய்ததுடன் இதன் பின்னர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது. மீண்டும் இந்த வழக்கு அடுத்த மாதம் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


0 Comments