Subscribe Us

header ads

பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்பு நவாஸ் பங்கேற்பு

இஸ்லாமாபாத்: நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு எதிர்ப்பு, எதிர்பார்ப்புக்கு இடையே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியா வருகிறார். கடந்த மூன்று நாட்களாக நீடித்த சஸ்பென்ஸ் இதன் மூலம் நேற்று முடிவுக்கு வந்தது. ராணுவ எதிர்ப்பு, தீவிரவாதிகள் மிரட்டலை ஒதுக்கிவிட்டு, நவாஸ் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். இந்தியாவின் 14வது பிரதமராக நரேந்திர மோடி நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் உள்ள வெளிப்புற முற்றத்தில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன.

மாலை 6 மணிக்கு தொடங்கும் விழா இரவு 7.45 மணி வரை நடைபெறும். மோடி பதவி ஏற்கும் விழாவுக்கு வருமாறு தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே, ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் ஆகியோர் வருவது 2 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது. நேபாளம், பூடான், மாலத்தீவு தலைவர்களும் வருவதை உறுதி செய்துள்ளனர். ஆனால், பாகிஸ்தானில் பல்வேறு எதிர்ப்பு மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக நவாஸ் ஷெரீப் வருவாரா என்பது உடனடியாக உறுதி செய்யப்படவில்லை. கடந்த 3 நாட்களாக கேள்விக்குறியாக இருந்த அவரது இந்திய பயணம் நேற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவுடன் நேசக்கரம் நீட்ட வேண்டும் என்ற கொள்கையுடன் நவாஸ் ஷெரீப், இந்தியா வருவதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ தகவலை நேற்று வெளியிட்டது. பாகிஸ் தான் ரேடியோவும் நவாஸ் ஷெரீப்பின் இந்திய பயணத்தை உறுதி செய்துள்ளது. நாளை இந்தியா வரும் ஷெரீப், பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர், 27ம் தேதி செவ்வாயன்று இரு நாட்டு பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக ஷெரீப், மோடி சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அன்று மதியம் ஷெரீப் பாகிஸ்தானுக்கு திரும்புகிறார். 

Post a Comment

0 Comments