இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட பயங்கரவாத
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவில் உள்ள
வெளிநாட்டுத் துணைத் தூதரகங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலொன்றை
முறியடிப்பதில் மலேசிய புகித் அமான் விசேட கிளையின் பயங்கரவாத
ஒழிப்புப்பிரிவு பெரிதும் உதவியுள்ளதாக மலேசிய ஆங்கில நாளிதழ் 'த ஸ்டார்'
தெரிவித்துள்ளது.
மேற்படி, இலங்கையர் மலேசிய கீபொங் நகரில் உள்ள வீடொன்றில் கடந்த புதனன்று
தடுத்து வைக்கப்பட்டதாகவும் ஏனைய மூன்று சந்தேக நபர்களும் பயங்கரவாத
ஒழிப்புப் பிரிவினர் வழங்கியிருந்த தகவலின் அடிப்படையில் சென்னையில் வைத்து
இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் அது மேலும்
குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அல் - கொய்தா அமைப்புடன்
மறைமுகமாக தொடர்புகளை வைத்துள்ளதாக நம்பப்படும் குறித்த இலங்கையர்
இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் இடம்பெற்றிருந்த பயங்கரவாத செயற்பாடுகளில்
ஈடுபட்டிருந்ததன் பேரில், தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இடம்
பிடித்துள்ளார்.
மலேசியாவில் வெளிநாட்டவர்களுடன் இணைந்து அவர் பயங்கரவாத வலையமைப்பொன்றை
இயக்கி வந்துள்ளதுடன் அங்கு கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம்
தலைமறைவாகியிருந்து வந்துள்ளதாக பொலிஸார் நம்புவதாகவும் கடந்த வருடம்
டிசம்பர் தொடக்கம் பொலிஸார் அவரது செயற்பாடுகளையும் தொடர்புகளையும்
கண்காணித்து வந்ததன் மூலம் அவரது நடமாட்டங்களை பின்தொடர்ந்து அவதானிக்கத்
தொடங்கியதாகவும் தகவலறிந்த வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.
மலேசியாவுக்குள் நுழைவதற்கு போலியான கடவுச்சீட்டொன்றை பாவித்திருந்த அவர்
வெளிநாட்டு மண்ணில் பல்வேறு தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த
போதிலும் மலேசிய தாக்குதல் இலக்கொன்றாக இருக்கவேயில்லை. பிரஸ்தாப
இலங்கையரை தாங்கள் கைது செய்துள்ளமையை ஊர்ஜிதப்படுத்திய பிரதி பொலிஸ்மா
அதிபர் தாடுக் செரி மொஹித் பக்ரி ஸினின் இது பற்றி மேலும்
குறிப்பிடுகையில், பிராந்தியத்திலும் சர்வதேச மட்டத்திலும் இடம்பெறக்கூடிய
தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் பொருட்டு தாங்கள் வெளிநாட்டு
முகவரமைப்புக்களுடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றப் போவதாகவும்தெரிவித்தார்.
மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒன்றிணைக்கப்பட்ட
நடவடிக்கையொன்றை அடுத்து கடந்த மாதம் 29 ஆம் திகதி இலங்கையரொருவர்
சென்னையில் கைது செய்யப்பட்டதுடன் குறித்த கைது நடவடிக்கைகள்
தொடங்கியிருந்தன.
மேற்படி, இலங்கையரான சாஹிர் ஹுசைன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கென ஆட்களை
திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் இதற்கு முன்னரும்
பாங்கொக்கிலும் சிங்கப்பூரிலும் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் நாளொன்று
கழிந்த நிலையில் அவரது சகாக்கள் இருவர் சென்னையில் வைத்து கைது
செய்யப்பட்டதாகவும் அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.


0 Comments