இலங்கையில் உள்ள தெஹிவளை மிருகக்காட்சி
சாலையிலிருந்து கொண்டு வரப்படவுள்ள ஏழு மலைப் பாம்புகளுக்கு
(அனக்கொண்டாக்கள்) இந்தியாவில் உள் திருவனந்தபுர மிருகக்காட்சிசாலை நாளை
மறுதினம் (வியாழன்) முதல் வாசஸ்தலமாக விளங்கவுள்ளதாக இந்திய ஆங்கில
நாளிதழ் த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையிலிருந்து
சென்னைக்கு நாளைய தினம் விமான மூலம் எடுத்து வரப்படவுள்ள இந்த
அனக்கொண்டாக்களை தென் பிராந்திய விலங்கு தொற்றுநோய் தடுப்பு மையத்தைச்
சேர்ந்த அதிகாரிகள் பரிசோதிக்கவுள்ளனர். இந்த மலைப்பாம்புகளின் சுகாதார
சான்றிதழ் கடந்த வெள்ளியன்று கிடைக்கப் பெற்றதாக குறித்த
மிருகக்காட்சிச்சாலை மிருக வைத்தியர் ஜேக்கப் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
விசேடமாக வடிவமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட முற்றிலும் அரக்கு
முத்திரையிடப்பட்டு மூடப்பட்ட ட்ரக் வண்டியொன்றிலேயே இந்த மலைப்பாம்புகள்
நானள எடுத்து வரப்படவுள்ளன. மிருகக்காட்சி சாலை இயக்குநர் தலைமையிலான
குழுவொன்று இவற்றைப் பொறுப்பேற்கவென சென்னைக்குச் செல்லவுள்ளனர்.
திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டதும் இரண்டு வயதான ஆண்
அனக்கொண்டாவும் மூன்று வயதான ஏனைய ஆறு பெண் அனக்கொண்டாக்களும் ஆயத்தமாக
வைக்கப்பட்டுள்ள தொற்று நோய்த்தடுப்பு மையக் கூண்டுகளில் குறைந்த
பட்சம் ஒரு மாத காலத்திற்கு விடப்படவுள்ளன. அதன் பின்னரே அவை
மிருகக்காட்சிசாலையில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

0 Comments