Subscribe Us

header ads

சிங்கள மக்களின் வாக்குகளால் கம்பஹாவுக்கு முஸ்லிம் பிரதிநிதியை தெரிவு செய்வோம் - பசில் ராஜபக்ஷ

இம்முறை கம்பஹா மாவட்டத்தில் சிங்களப் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் மூலமாவது முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை முதற் தடவையாக மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல், நிகழ்வு நீர்கொழும்பு, அவெந்ரா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை (22) இரவு இடம்பெற்ற பொழுதே பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற் கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மேல் மாகாண சபைக்கு கம்பஹா மாவட்டத்திலிருந்து 25 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் ஒரு சிறுபான்மை உறுப்பினரைத் தெரிவு செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே இம்முறை எமது வேட்பாளர்களில் நாங்கள் ஒரு முஸ்லிம் வேட்பாளரையே களத்தில் இறக்கியுள்ளோம். மற்றைய கட்சிகளைப் போன்று 3 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் போட்டு வாக்குகளைக் கொள்ளையிடும் முறை நம்மிடம் இல்லை.

கம்பஹா மாவட்டத்தில் இம்முறை போட்டியிடுகின்ற நீர்கொழும்பு பிரதிமேயர் சகாவுல்லா விற்கு முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் மாகாண அமைச்சர் நிமல் லான்சா ஆகியோர் இணைந்து வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கவுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வரும் பட்சத்தில் ஜனாதிபதிக்கு அடுத்ததாக நானே முன்வந்து பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன் இதனால் எனக்கும் பல எதிர்ப்புகள் வருகின்றன. இதனை நான் ஒருபோதும் பொருட்படுத்த மாட்டேன், நான் ஒரு நல்ல சிங்கள பெளத்தன் ஆவேன். எங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே முன்பிருந்தே நெருங்கிய தொடர்பு இருந்து வருகின்றது. எனது சகோதரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீன முஸ்லிம் மக்களுக்காக பாராளுமன்றத்தில் எதிர்கட்சியில் இருந்து கொண்டே குரல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி, அமைச்சர் அதாவுல்லா, புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ், வேட்பாளர் சகாவுல்லா மற்றும் மள்வானை தொழிலதிபர் எம்.எம்.ஏ. இஸ்மாயில், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் உரையாற்றிய தோடு அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், அநுர பிரியதர்ஷனயாப்பா, பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். அஸ்வர், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் உட்பட பல முஸ்லிம் பிரமுகர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments