Subscribe Us

header ads

சிறைக்கைதிகளுக்கு பாடசாலை

சிறைக்கைதிகளுக்கென்று தனியான முதலாவது  பாடசாலையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹோமாகம வட்டரக்க சிறைச்சாலை வளாகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைக்கவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே தெரிவித்தார்.

கல்வியமைச்சுடன் இணைந்தாக சிங்களமொழி மூலமான பாடசாலையாக இப்பாடசாலை அமைகிறதெனவும் அவர் கூறினார். 

குற்றச்செயலொன்றினால் கைதியொருவரின் கல்வி இடையில் தடைப்பட்டிருந்தால் அக்கல்வியை  தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.  8ஆம் தரத்திலிருந்து கற்பித்தல் ஆரம்பிக்கப்படும். இப்பாடசாலையின் மூலமாக  க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் வரை கல்வியை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. 

அரசாங்க பாடசாலைகள் போன்று சிறைச்சாலை பாடசாலையும் செயல்படும். பாட விதானம், ஆசிரியர் வளம்., இலவச பாடநூல், சீருடை அனைத்தும் கல்வி அமைச்சினால் வழங்கப்படும்.  குறிப்பாக  பாடசாலை நிர்வாகம் கல்வி அமைச்சின் கீழிருக்கும்.  கைதிகளை பாடசாலைக்கு பாடசாலை ஒழுங்கு விதிகளுக்கமைய அனுப்பி வைப்பதே சிறைச்சாலை திணைக்களத்தின் பொறுப்பெனவும் அவர் கூறினார்.

நாடெங்கிலுமுள்ள சிறைச்சாலைகளில் 16 வயது முதல் 30 வயது வரையான கைதிகளில் கல்வியை தொடர விரும்புவர்களிடம் விருப்பம் பெறப்பட்டு,  எழுத்துப் பரீட்சை   மூலம் 120 பேர்  தெரிவாகி இப்பாடசாலையில் அனுமதி  பெறுவதாகவும் அவர் கூறினார்.

பாடசாலை கல்விக்கு மேலதிகமாக கணினி, ஆங்கிலம், தமிழ்,  கொரியமொழி ஆகியன கற்பதற்கான வசதிகளும் இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அதற்கான நிலையங்களும் பாடசாலை வளாகத்தில் அமைகின்றது.

தமிழ் மூல பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கும் நோக்கம் இருந்தாலும்  தகுதியான தமிழ்க்  கைதிகள் போதுமானதாக இல்லை. எதிர்காலத்தில் அமையும்போது  வட, கிழக்கு மாகாணங்களில் அமையுமெனவும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments