வளர்ந்து நிற்கும் தொழில்நுட்ப உலகின் வணிக ரீதியிலான விமானப்போக்குவரத்து வரலாற்றிலேயே மலேஷியா எயார்லைன்ஸின் எம்.எச். 370 விமானம் விடை புரியாத புதிராக மர்மமாகி இன்றுடன் சுமார் இரு வாரங்களாகின்றன.
இவ்விமானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட வேளையில் 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் அடங்கலாக மொத்தமாக 239 பேருடன் அதிகாலை 1.22 மணியளவில் மர்மமானது.
செய்மதிகள், ரேடர் கருவிகள் என பல்லாயிரக்கணக்கான கண்காணிப்பு
சாதனங்களைத் தாண்டி சுமார் 2 வாரங்களாக மர்மத்தை தாங்கி நிற்கின்ற எம்.எச். 370 விமானம் குறித்து இன்று வரையில் எதுவித அதிகாரபூர்வ ஆதாரங்களும் கிடைக்காமை பெரும் ஏமாற்றமாகவே உள்ளது.
இந்நிலையில் நேற்று தெற்கு இந்து சமுத்திரத்தில் அவுஸ்திரேலியாவின்
பேர்த்துக்கு அண்மையில் செய்மதிப் படங்கள் மூலம் 2 பொருட்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இது மர்மமான விமானத்தின் சிதைவாக
இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் ஆஸி. பிரதமர் டொனி அபோட் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் ஒரு பாகம் 78 அடி நீளமானது எனவும் மற்றையது சிறியளவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட போதிலும் பின்னர் விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என அதன்பால் விசாரணைகள் திரும்பியுள்ள நிலையில் இந்த பாகங்கள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளன.
ஏனெனில், மர்மமான விமானம் எங்கோ ஓரிடத்தில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என எப்.பி.ஐ.யும் தகவல் தெரிவித்திருந்தது. விமானம் ரேடரில் சிக்காமல் இருக்க 5 ஆயிரம் அடி உயரத்தில் மிகத் தாழ்வாகப் பறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தரையிறக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலப்பரப்பிலுள்ள 26
நாடுகளில் போயிங் 777 விமானம் தரையிறக்கக்கூடிய 634 விமான ஓடுபாதைகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. போயிங் 777 விமானத்தினை தரையிறக்க குறைந்தது 5,000 அடி நீளமான ஓடுபாதை தேவை. அவசர நேரத்திலே இவ்வாறான ஓடுபாதைகளில் தரையிறக்கப்படும்.
இதேவேளை, ரேடர் தொடர்பினை நிறுத்தியதன் பின்னர் விமானம் சில மணிநேரங்கள் பறந்துள்ளமையினால் மலேஷியா தவிர்ந்த வேறு சில நாடுகளின் வான்பரப்பிலும் விமானம் பறந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.'அவை உண்மை. ஆனால் அது குறித்த தகவல்களை தற்போது வெளியிடும் சுதந்திரம் எமக்கு இல்லை' என மலேஷியாவின் பாதுகாப்பு மற்றும் பதில் போக்குவரத்து அமைச்சர் ஹுஸெய்ன் ஹிஸாமுதீன் குறிப்பிட்டுள்ளார்.
விமானம் காணாமல்போனமை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரையில் சாத்தியமான கோணத்திலமைந்துள்ள விசாரணைகள் கீழ்வருமாறு அமைந்துள்ளன.
விமானிகள் உள்நோக்கத்துடன் செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. இதனால் மர்மமான விமானத்தின் 18,356 மணிநேர பறப்பு அனுபவமிக்க பிரதான விமானி ஷஹாரி அஹமட் ஷா (53) மற்றும் இணை விமானி பாரிக் அப்துல் ஹமீத் (27) ஆகியோரின் பின்னணி குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பிற்கான சமிக்ஞைகளை
நிறுத்தியுள்ள விதம், போயிங் 777-–200 ஈ.ஆர் மாதிரி பற்றி கைதேர்ந்தவர்களினாலேயே மேற்கொள்ளக்கூடியதாக உள்ளமையே விமானிகள் விமானக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 9/11 அமெரிக்கா மீதான தாக்குதல் போன்றவற்றுக்காக தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் இதுவரையில் எந்தவொரு இயக்கமும் விமானம் குறித்து பொறுப்பேற்கவில்லை. எப்.பி.ஐ.யும் இது தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகின்றனர்.
அத்துடன் தவறுதலான இராணுவத் தாக்குதல், தொலைத்தொடர்பு குறைந்த பிரதேசத்தில் விமானம் தரையிறக்கி மறைத்து வைத்தல், ஒட்சிசன் வாயுக் குறைவினால் விமானத்திலுள்ளவர்கள் மரணம், தீ விபத்து என பல வாறான கொள்கையளவிலான சந்தேகங்களை யும் அடிப்படையாகக்கொண்டே தற் போது தேடுதல்கள் இடம்பெற்று வரு கின்றது.





0 Comments