புற்றுநோயால் பாதிப்படைந்து தலைமுடியை இழக்கும் நோயாளிகள் இறுதி
நாட்களில் தாழ்வு மனப்பான்மையின்றியும், மகிழ்ச்சியாகவும் வாழும் பொருட்டு
சென்னை மாநிலக்கல்லூரியில் மாணவிகள் முடி தானம் செய்தனர்.
புற்றுநோயால்
பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முடியினை தானமாக அளிக்கும் ‘கேன் கட் – கேன்
ஹெல்ப்’ எனும் நிகழ்ச்சி சென்னை மாநிலக்கல்லூரி கருத்தரங்கு கூடத்தில்
நேற்று நடந்தது. நுங்கம்பாக்கம் ‘பிரிஜ் டா‘ சலூன், கல்லூரி நிர்வாகத்துடன்
இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியைச்
சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்
கல்லூரி மாணவிகளிடம் புற்றுநோயாளிகளின் துயரங்கள் குறித்தும், அவர்களின்
சூழ்நிலைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சி
முடிவில் சில மாணவிகள் முடிகளை தானம் செய்ய முன்வந்தனர். உடனே அவர்களின்
பெயர் பதிவு செய்யப்பட்டு, தயாராக இருந்த முடி வெட்டுபவர்களைக்கொண்டு
மாணவிகளின் முடி 6 அங்குலம் அளவிற்கு வெட்டப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது.
ஏராளமான
மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் கேட்டு தானம் தருவதாகவும் கூறினர்.
சிலர் தங்களின் பெற்றோரையும் அழைத்து வருவதாகவும் கூறினர். இதுகுறித்து
‘பிரிஜ் டா’ சலூன் உரிமையாளர் ஆர்.மேனகா கூறியதாவது, புற்றுநோயாளிகளுக்கு
மருத்துவமனைகளில் ‘ஹீமோ தெரபி’ எனும் சிகிச்சை அளிக்கப்படும்போது
நோயாளிகளுக்கு தலைமுடி வேரோடு உதிர்ந்துவிடும்.
ஏற்கனவே
புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு தலைமுடியும் இல்லாது போகும்போது
மிகவும் கவலை அடைகிறார்கள். இதனால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு
வெளியிடங்களுக்கு செல்லவே தயங்குகிறார்கள்.
அதுபோன்ற
பாதிப்படைந்த நோயாளிகளுக்கு இலவசமாக விக் வழங்குவது என்றும் அதற்காக முடி
தானத்தை ஊக்கப்படுத்துவதற்காகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள எல்லா கல்லூரிகளுக்கும் சென்று புற்றுநோய் பாதிப்பு
பற்றியும், முடிதானம் பற்றியும் எடுத்துக்கூறுகிறோம். இதில்
விருப்பமுள்ளவர்களிடம் இருந்து அவர்களுடைய கூந்தலில் இருந்து 6 அங்குலம்
அளவுக்கு மட்டும் முடி தானமாக பெறுகிறோம்.
தானமாக
பெற்ற இந்த முடி சேமிக்கப்பட்டு ‘விக்’காக மாற்றி, வரும் பிப்ரவரி
4–ந்தேதி உலக புற்றுநோயாளிகள்தினத்தன்று, முடி இழந்த புற்றுநோயாளிகளுக்கு
இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என கூறினார்.


0 Comments