Subscribe Us

19 வயதின் கீழ் உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி : இங்கிலாந்தையும் வென்றது இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இன்று  நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் வென்றது.

டுபாயில் இன்று நடைபெற்ற பரபரப்பான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களைப்பெற்றது. ஜொனதன் டெட்டர்ஸல் 95 ஓட்ங்களையும் அணித்தலைவர் வில் ரோட்ஸ் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் அனுக் பெர்னாண்டோ 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.   ராஜபக்ஷ 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பினுர பெர்னாண்டோ 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓட்டங்களில் 3 ஆவது விக்கெட்டையும் இழந்து நெருக்கடிக்குள்ளானது.

அணித்தலைவர் குஷல் மெண்டிஸ் (0), துமிந்து (17), பானுக்க ((3) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்மிழந்தனர். எனினும் சதீர சமரவிக்ரம 89 பந்துகளில் 82 ஓட்டங்களையும் திலக்ஷ சுமணசிறி 42 பந்துகளில் 49 ஓட்டங்களையும் பெற்று அணியை பலப்படுத்தினர். 49.5 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது இலங்கை அணி.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஜோஷ் ஷா, ரோட்ஸ், ரொப் சேயர் ஆகியோர் தலா இரு விக்கெட்களை வீழ்த்தினர். 

இத்தொடரில் இலங்கை அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வென்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது. தனது முதல் போட்டியில் நியூஸிலாந்தை இலங்கை வென்றிருந்தது.

இதேவேளை நேற்று நடைபெற்ற ஏனைய போட்டிகளில் கனடாவை தென்னாபிரிக்கா 45 ஓட்டங்களால் வென்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தை நியூஸிலாந்து 12 ஓட்டங்களாலும் ஸிம்பாப்வேயை மேற்கிந்தியத் தீவுகள் 167 ஓட்டங்களாலும் வென்றன.

Post a Comment

0 Comments