Subscribe Us

header ads

யாழ். பெண்ணுக்கு ஸாம்பியாவில் எச்.ஐ.வி. தொற்றிய கதை

(திண்ணனூரான்)

இல்லற உரிமைக்கு என இயற்றப்பட்ட சட்டமே திருமணமாகும். திருமணத்தால் ஏற்பட்ட சோகத்தின் வடிவம் இங்கு பேசப்படுகின்றது. இங்கு பேசப்படும் கதை பெற்றோர்களுக்கு பெரும் அறிவை வழங்கும் பெரும் கதையாகும்.


 நான் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கிராமம் ஒன்றில் பிறந்தவள். இப்போது எனக்கு வயது 53ஐ தொட்டு விட்டது. இருபது வயதில் மகன் ஒருவரும் இருக்கின்றார். எனது இருபத்தாறவது வயதில் திருமணம் முடித்தேன்.


எனது கணவர் ஸாம்பியாவில் 1978 இலிருந்து வங்கியொன்றில் பதவி வகித்தார். பெரும் சம்பளம் பெற்றவர். எனது திருமணம்1986 இல் சொந்த கிராமத்து ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. திருமணம் முடிந்து இரு கிழமைகள் முடிவடைந்ததும் அவர் ஸாம்பியாவிற்குச் சென்றுவிட்டார். நான் 1987 இல் ஸாம்பியாவிற்கு சென்று அவருடன் குடும்பம் நடத்தினேன்.


ஸாம்பியா சென்றதும் தான் எனது கணவரின் மறுமுகம் தெரியவந்தது. பெரும் குடிகாரர். இரவு பத்து மணியளவில் வீடு திரும்புவார். குடி அவரோடு இணைந்து இருக்கும். மது வெறியில் என்னை திட்டுவார். அடிப்பார். உறவுகள் இல்லாத ஊரில் எவரிடம் சொல்லி அழுவது. நானே அழுது என் துன்பத்தை நீக்கிக் கொள்வேன். இலங்கையில் எனது பெற்றோருக்கு எனது சோகத்தை
சொல்லவில்லை.


1993 இல் மீண்டும் இருவரும் இலங்கைக்கு வந்தோம். நான் அப்போது கர்ப்பிணியாக இருந்தேன். இலங்கை வந்து பத்து நாட்களின் பின்னர் எனது கணவருக்கு இனம் புரியாத நோய் தாக்க அதிரடியாக தொடர் இருமலும் அவரை தாக்கியது.


அவரின் நிலைக் கண்டு அதிர்ந்துப் போய் விட்டேன். அவரின் குடி அவரின் ஈரலையும் கரைத்துவிட்டது. திடீரென ஒருநாள் மயக்கம் வந்து நிலத்தில் விழுந்துவிட்டார். அவரின் உடலில் பெரும் நடுக்கம் தொத்திக் கொண்டது. அவரின் உடல் நிலை அதிர்வுகள் என்னை அதிர வைத்தது. அசந்து போனேன்.


எனது மனம் சிதைந்த நிலையில்ல எனது அக்காவுடன் கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தோம். பிரபல டாக்டர் ஒருவரை அவ்வைத்தியசாலைக்கு வரவழைத்து அவரின் ஆலோசனையுடன் சிகிச்சைகளையும் அவருக்கு வழங்கினேன். அப்போது எனது கணவரின் குருதி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.

பின்னர் இரு நாட்கள் சென்றதன் பின்னர் எனது குருதியும் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் இரு வாரங்களை தொலைத்ததன் பின்னர் டாக்டர் எனது கணவரை விரைவாக ஸாம்பியாவுக்கு அனுப்பி அங்கு சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார். என்னை எனது சகோதரர்கள் வாழும் கனடாவுக்கு போகுமாறு கூறினர். டாக்டரின் ஆலோசனைப்படி எனது கணவர் ஸாம்பியாவுக்கு சென்றார். 1993 இல் எனக்கு ஆண் குழந்தை கிடைத்தது. பின்னர் எனது குழந்தையுடன் ஆறு மாதத்தின் பின்னர் மீண்டும் ஸாம்பியாவுக்குச் சென்றேன்.

ஸாம்பியாவில் மீண்டும் அடியும் உதையும் ஏச்சுப் பேச்சும் எனக்கு கிடைத்தது. பெரும் சிரமத்தோடு 1999 வரை அவரோடு வாழ்ந்தேன். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கணவர் ஸாம்பியாவில் இறந்தார். அவரை பல நோய்கள் தாக்கி இருந்தன. மது அவரை உச்சக் கட்டத்துக்கு இழுத்துச் சென்று இருந்தது.


அவர் இறந்ததன் பின்னர் இலங்கைக்கு குழந்தையோடு திரும்பினேன். இலங்கை வந்ததன் பின்னர் திடீரென எனது சகோதரி என்னை எஸ்.டீ.டீ. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு எனது குருதி பரிசோதிக்கப்பட்டது.


மூன்று நாட்களின் பின்னரே எனக்கு டாக்டரின் தகவல் கிடைத்தது. எனக்குள் எச்.ஐ.வி. தொற்று வாழ்வதாக தெரிவித்தார். அதிர்ந்துப் போனேன். என் விதியை எண்ணி அழுதேன். 1993 இல் தனியார் வைத்தியசாலை டாக்டர் எனது கணவரிடம் பணம் பெற்றுக் கொண்டு  அவருக்குள்ளும் எனக்குள்ளும் எச்.ஐ.வி. இருப்பதை எனக்கு சொல்லவில்லை.


ஆனால் இதன் விபரம் எனது சகோதரிக்கு எப்படியோ தெரிந்திருந்துள்ளது. அதன்  காரணமாகவே நான் நாடு திரும்பியதும் என் சகோதரி என்னை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தினார். இவ்விடயத்தை பின்னர் தெரிந்துக் கொண்டேன்.


எனது கணவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிந்தும் அவர் உரிய வகையில் சிகிச்சை பெறவில்லை. உண்மையிலேயே டாக்டர் எங்களுக்குள் எச்.ஐ.வி. தொற்று வாழ்வதை என்னிடம் கூறி இருந்தால் நான் எனது கணவரை சிகிச்சைப் பெற வைத்திருப்பேன். இறுதியில் டாக்டரின் பண ஆசையானது எனது கணவரை நான் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது கணவரின் சாவுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் அந்த  டாக்டர்.


இந்நிலையில் நான் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டேன்.  ஸாம்பியாவிலிருந்து இலங்கை வருகையில் நான் 17 இலட்சம் ரூபாய் பணத்துடனே வந்தேன். மகனை படிக்க வைத்தேன். வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வாழ்ந்தேன். எனது கணவர் மூலமே எனக்கு எச்.ஐ.வி. தொற்று பரவியுள்ளது. 

அவர் ஸாம்பியாவில் தனது திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் அந்நாட்டில் வாழ்ந்த ஆபிரிக்க நீக்ரோ இனத்து பெண்களுடன் தொடர்பை வைத்திருந்தார். அதை அவரால் கைவிட இயலவில்லை. எங்களை பரிசோதனை செய்த டாக்டரும் வயது முதிர்வால் இறந்துவிட்டார்.


இப்போது எவரினதும் உதவியும் இல்லை. கையில் பணமும் இல்லை. எனக்கு நல்ல எண்ணம் கொண்டோர் உதவ முன்வர வேண்டும். ஒதுக்கப்பட்ட கல்லாக பொசிட்டிவ் வுமன் நெட்வேர்க் அமைப்பின் ஆதரவில் வாழ்கின்றேன். எனக்கு மறுவாழ்வை வழங்கியவர் இவ் அமைப்பின் தலைவி திருமதி பிரின்சி மங்கலிகாவாவார். இவர் மூலமாக எனக்கு நல்ல உள்ளங்கள் உதவி புரிய முன்வர வேண்டும். 

இருண்டதோர் உலகில் வாழும் என்னை வெளிச்சம் காணும் உலகுக்குள் அழைத்துச் செல்ல  முன்வர வேண்டும். இந்த  அமைப்பின் தலைவி தொலைபேசி எண் 071 9184196 ஊடாக தொடர்பு கொள்ளலாம். என கண்ணீரோடு  தெரிவித்தார். அவரது கண்ணீருக்குள் ஆயிரம் சோகங்கள் தூங்குகின்றன.

இந்த உலகுக்கு என்ன சொல்ல எண்ணுகிறீர்கள் என நாம் கேட்டதற்கு, "பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு மணமகனையோ, அல்லது மணமகளையோ தெரிவு செய்யும்போது தவறாது கொழும்பு எஸ்.டீ.டீ. வைத்திய பிரிவில் இருவரினதும் குருதி பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.

 இல்லாவிடில் நாகரீகம் என்ற மாயைக்குள் அழிவு பாதையில்  மிதக்கும் இவ் உலகம் அநியாயமாக பலரை எச்.ஐ.வி. தொற்றுக்குள் மட்டுமல்லாது பல்வேறு தொல்லைகளுக்கும் இளம் தம்பதியினர் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்" என்றார் என்றார் அத்தமிழ் பெண்.  அவரின் வாழ்க்கை பலருக்கு அறிவுரை வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Post a Comment

0 Comments