Subscribe Us

header ads

தாழமுக்கம் புத்தளம் நோக்கி நகர்கிறது – வளிமண்டலவியல் திணைக்களம்

 முல்லைத்தீவுக்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கம் தற்போது புத்தளம்
நோக்கி மிகவும் மெதுவாக நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால் வடபகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடர்ந்தும் காணப்படுமென திணைக்களத்தின் வானிலை அதிகாரி எம்.சாலிஹின் குறிப்பிட்டார்.
வடபகுதியிலும், மன்னார் வளைகுடா பகுதியிலும் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும், 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் மழையினால் சுமார் 100 பேர் இடம்பெயர்ந்து, தற்காலிக இடங்களில் தங்கியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாகவும் மூன்றாவது நாளாக இன்றும் கடுங்காற்றுடன், பலத்த மழை பெய்துவருவதாக எமது செய்தியாளர் கூறினார்.
கிளிநொச்சி மாவட்டத்திலும் கடுங்காற்று வீசுவதாகவும், மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுகின்றார்…
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்ததாக யாழ். பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்
திருகோணமலை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக, கரையோர பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்டத்திலும் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
புத்தளம் மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படும் சீரற்ற வானிலை காரணமாக 300க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது

Post a Comment

0 Comments