2013 ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு நாளே
மீதமிருக்கிறது. கொழும்பு வீதியில் அந்த பரப்பில் நிறைய வாகனங்கள் நிற்க
சுற்றிவர கூட்டம். எட்டிப்பார்க்க கிடைக்க கண் கிளிக் செய்தது ஒரு
புகைப்படத்தை அங்கே கரும் பச்சை கலர் ஆடையணிந்த ஆமித்தலைவரும், வெள்ளை கலர்
ஆடையணிந்த அரசியல் தலைவரும் கூடி கதைத்து கொண்டிருந்தனர். அடிக்கும்
வெயிலில் கூடவே வியர்வையில் குளித்து கொண்டிருந்தனர்.
புத்தளம்
களப்பு நினைத்திருக்காது இப்படி ஒரு விடயம் தனக்கு கிடைக்குமென்று. கதை
மட்டும் தானோ, காரியம் அவ்வளவுதான் என்றில்லாமல் காரியத்தை கண்ணுக்கு
குளிர்ச்சியாக காட்ட முன்னின்று உழைத்து இருப்பது தெளிவானது நேரலையின்
போது.
புத்தளம் சிறுக்கடல் கரையை விட்டு கொஞ்சம்
உள்வாங்கியது மக்கள் சந்தோஷத்திற்காக, நானும் வருகிறேன் என்றவாறு கரையை
பாதுகாக்க வந்திறங்கிய பெருங்கற்கள் அழகாக நேர்த்தியாக அடுக்கப்பட
அழகுபெற்றது களப்பின் ஓரம்.
பெருங்கடலின் மண்மணிகள் தம் சொந்தத்தில்
இணைய இன்பத்தோடு வந்தது. கரையிலிருந்து குறிப்பிட்ட தூரம் விசிரப்பட்டது
சிறுவர்களின் சில்மிசங்களுக்காக, விளையாடி மகிழ்வதற்காக.
காலைக்கதிரவன் சிரிக்க, பனிமூட்டமோ பகட்டு
சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தது. மக்கள், குளிரில் கைகட்டி நின்று
ரசிப்பதற்காக வேலையாட்களின் கால்களும் கைகளும் இயந்திரமாக சுழன்ற செய்தது
துன்பத்திலும் இன்பமாய் இனித்ததினாலோ.
எங்கோ வளர்ந்த பச்சை புற்கள் பிடுங்கி
வரப்பட்டு புது மனையில் குடிபுகுந்தன. எல்லோருமே குடும்பமாக வந்து பாசங்களை
பங்கு போட்டு கொள்வதற்காகவோ என்னவோ.
கரையோர
காட்சிகளை ரசித்து கொண்டே நடக்க இலகுவாக செங்கம்பளம் போல் ஒரு ஏற்பாடு.
அருமையானதொன்று, பொருத்தும் கற்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டு சிவப்பு
நிறமும், வெள்ளை நிறமும் பூசப்பட்ட போது கவர்ச்சி கண்ணை பறித்தது.
வாகனங்கள் இலகுவாக நிறுத்தப்பட நிறுத்தும்
இடங்கள், கழிவுகளை போடும் இடங்கள் என்பன நேர்த்தியாக
ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஏற்பாடு குழுவின் முயற்சியை மெச்சியே ஆகவேண்டும்.
சிறிய சிறிய தென்னை மரங்கள்
காட்சிப்படுத்தப்பட்டமை தென்னை புத்தளம் அன்னையின் ஒரு அம்சம் என்பதனை
ஊகிக்க செய்தது. இரவில் களப்பின் அழகை காண மின்விளக்குகள் மின்னியது. பழமை
மாறி புதுமை வந்தபோது களப்பு சும்மா அதிர்ந்துதான் போனது.
நமது ஊர் அழகு பெற்றது நமக்கு பெருமையே.
நமது ஊரை அண்டி வருவோர் நாற்றம் அடிக்கிறது, ஒழுங்கான இடம் இல்லையே என்று
ஏளனப்படுத்திய போது ஏற்பட்ட வலி மறந்து போனது கண்டு மனம் மகிழ்கிறது.
அவ்வாறு கதைக்க இனி இடம் இல்லை எனும் போது கணம் இனிக்கிறது.
மாற்றங்களை வேண்டியே நாமும் பயணிக்க
வேண்டியிருக்கிறது. அந்தவகையில் மாற்றங்களை நாம் வரவேற்கும் அதேவேளை
மாற்றங்களை பாதுகாக்கவும் வழிசெய்ய வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.
களப்போரத்தில்
மனக்களிப்புக்காக வருவோர் ஒழுக்கம் பேணி நடக்க வேண்டியது முக்கியமாக
கருதப்படுகின்றது. நம்மூர் இளசுகள் பொதுவாக இவ்வாறாக போக்கில் திரியலாம்.
“காணாத நாய்க்கு கறிசோறும் நெய்சோறுமாம்” அப்படி இருக்கக்கூடாது.
நமது வீட்டில் குப்பைக்கூளங்கள் இருந்தால்
கூட்டித் துப்பரவு செய்யும் நாம் சுற்றுச்சூழல் விடயத்தில் கவனக்குறைவாக
இருக்கக்கூடாது. கடல் அலையை இரசியுங்கள், காற்றை சுவாசியுங்கள் மண் வாசனையை
சுவாசிக்க மறக்காதீர்கள். மண்ணின் மகத்துவம் உயரச்செய்ய அக்கறை செலுத்தி
அதனோடு பயணிப்பது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.
இதனூடாக புத்தளத்தின் காலச்சாரம்
பாதிக்கப்படாதவாறு பார்த்துக்கொள்வதோடு இஸ்லாமிய விழுமியங்கள், பண்பாடுகள்
நேர்த்தியாக கையாளப்பட வேண்டும்.
புத்தளம் களப்பு – களிப்பு – மனதிருப்தி – மனமகிழ்ச்சி – உற்சாகத்தோடு..


0 Comments