Subscribe Us

லயன் எயாரில் பயணித்தோரை அடையாளம் காண ஏற்பாடு

14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார் - அன்டனோவ் 24' ரக உள்நாட்டு பயணிகள் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட ஆடைகளை காட்சிப்படுத்தி உயிரிழந்தவர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி மற்றும் 12ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் இந்த ஆடைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. இதன்போது 72 ஆடைகள், அடையாளம் காண்பதற்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இதனால், 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் லயன் எயார் விமானத்தில் பயணித்து உயரிழந்த பயணிகளின் உறவினர்கள் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் குறித்த இரு தினங்களில் யாழ். விளையாட்டரங்குக்கு வருகை தந்து உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார் - அன்டனோவ் 24' ரக உள்நாட்டு பயணிகள் விமானத்தின் நொருங்கிய பகுதிகளில் கடந்த மே மாதம் மீட்கப்பட்டன.

வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து இந்த விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் மீட்கப்பட்டன. விமானத்தின் என்ஜின், மோட்டர் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள், உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகள், ஆடைகள் போன்றன மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படைக்குச் சொந்தமாக கப்பலொன்றின் உதவியுடன் இந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பலாலி விமான நிலையத்திலிருந்து கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி 48 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் மற்றும் இரு உக்ரேனிய விமானிகளுடன் இரத்மலானைக்கு போகப் புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்டு 10 நிமிடங்களின் பின் ராடார் திரையிலிருந்து மறைந்துபோனது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இருப்பினும், இதன் மர்மம் இன்னும் பூரணமாகத் துலங்காத நிலையில் மேற்படி விமானத்தின் பாகங்களை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளர்.

இதற்கமைய மேற்படி கடற்பகுதிக்கு கடந்த மே மாதம் சென்ற அதிகாரிகள் அங்கு ஆய்வுகளில் ஈடுபட்டதை அடுத்து அங்கிருந்து விமானத்தின் பாகங்களை மீட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments