Subscribe Us

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுவாரசிய விவாதம்..!

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் வளர்ப்பு நாய் திருட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு எம்பிக்கள் நாடாளுமன்ற விவாதத்தின் போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்கள் நாய், பூனை, கோழி, கிளி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை தங்களது வாழ்வின் ஒரு பகுதியாகவே கருதுகின்றனர். இதற்காக மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் பல்வேறு சலுகைகள், ஏற்பாடுகளையும் செய்து தருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அந்நாட்டின் நாடாளுமன்றத்தில், சுற்றுசூழல், உணவு மற்றும் உள்ளூர் விவகாரங்கள் துறை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் விலங்குகள் மேம்பாடு குறித்து பேசப்பட்டது. 

அப்போது விலங்குகள் நலத்திட்ட எம்பிக்கள் இங்கிலாந்து அரசிடம் வளர்ப்பு நாய்கள் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து எம்பிக்கள் குழு தலைவர் நீல் பாரிஷ் கூறுகையில், ‘வளர்ப்பு நாய்களை குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடையவர்களின் உதவியுடன் திருடிச் செல்கின்றனர். இது குறித்து அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். மக்களிடமும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். மேலும் இவ்வாறு வளர்ப்பு நாய்களை திருடிச் செல்லும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து இங்கிலாந்து பல்கலை கழகத்தின் குற்றவியல் துறை சார்பில் தனியாக வெப் சைட் தொடங்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த இணையதளத்தில் கடந்த 10 ஆண்டுகளில் உரிமையாளர்களிடம் இருந்து 30 ஆயிரம் வளர்ப்பு நாய்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் 49 சதவீதம் நாய்கள் தோட்டங்களில் இருந்தும், 13 சதவீத நாய்கள் வீடுகளில் இருந்தும் திருடு போய் உள்ளன என்கிறது அந்த இணையதளம்.

Post a Comment

0 Comments