Subscribe Us

மூன்றாவது போட்டியில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்

ஐக்கிய அரபு இராச்சியத்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.
 
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களைக் குவித்தது.
 
முதலாவது விக்கெட்டை 2 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி சார்பாக 2வது விக்கெட்டுக்காக 27.5 ஓவர்களில் 162 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. அதன் பின்னரும் அதிரடி ஆட்டம் தொடர அவ்வணி சிறப்பான நிலையை அடைந்தது.
 
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஹபீஸ் 136 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்களையும், அஹமட் ஷெஷாத் 89 பந்துகளில் 81 ஓட்டங்களையும், மிஸ்பா உல் ஹக் 26 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக திஸர பெரேரா 2 விக்கெட்டுக்களையும், நுவான் குலசேகர, லசித் மலிங்க இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
327 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.4 ஓவர்களில் 213 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
 
17 ஓட்டங்களைப் பெற்றிருந்த போதே முதலாவது, இரண்டாவது விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி, இணைப்பாட்டங்களைப் புரியத் தவறியிருந்தது.
 
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக திலகரட்ண டில்ஷான் 62 பந்துகளில் 59 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 51 பந்துகளில் 44 ஓட்டங்களையும், டினேஷ் சந்திமால் 53 பந்துகளில் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக உமர் குல் 3 விக்கெட்டுக்களையும், ஜுனைட் கான், சயீட் அஜ்மல், மொஹமட் ஹபீஸ் மூவரும் தலா 2 விக்கெட்டுக்களையும், ஷகிட் அப்ரிடி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
இப்போட்டியின் நாயகனாக மொஹமட் ஹபீஸ் தெரிவானார்.
 

இப்போட்டியின் முடிவில், 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments