என்றும் இல்லாதவாறான பெருமளவான உதவிகோரலுடன் Coluche இன் சொத்தில்
உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனமான Les Restos du Cœur அது ஆரம்பிக்கப்பட்ட
காலத்திலிருந்து இந்தக் குளிர்காலத்திற்காக 29வது தடவையாகத்
திறக்கப்பட்டுள்ளது. இத் தொண்டு உணவு நிறுவனம் கடந்த ஆண்டு ஒன்பது
இலட்சத்து அறுபதினாயிரம் பேரின் தேவைகளை நிறைவேற்றி உள்ளது. இது அதற்கு
முந்திய வருடத்தை விட 11சதவீதம் அதிகமானது.
இம்முறை மிகவும் தயார்ப்படுத்தப்பட்ட நிலையில் வறுமையிலிருக்கும் ஒரு
மில்லியன் பேருக்காவது உதவ வேண்டும் என்ற இலக்கோடு திறக்கப்பட்டுள்ளது.
"மக்களின் பொருளாதார வளம் முன்னேற்றம் அடையவேயில்லை. இது இன்னமும் மூன்று
அல்லது நான்கு வருடங்களிற்கு இப்படியே நீடிக்கும். இப்போது உதவி
கோருபவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தவர்கள். இவர்கள் வேலை
இழந்து ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களின் பின்னர் அவர்களிற்கான உதவித்தொகை
மிகவும் குறையும் போது எம்மை நாடி வருகிறார்கள்." என இவ்வமைப்பின் தலைவர்
ஒலிவியே பேர்த் தெரிவித்துள்ளார்.
மிகவும் அவசரமான நிதிப்பற்றாக்குறையுடன் திறக்கப்பட்டுள்ள
இவ்வமைப்பிற்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் 2014ம் ஆண்டிற்கான நிதியுதவி
10சதவீதத்திற்கும் மேலாகப் பற்றாக்குறையுடனேயே கிடைக்கும் என அச்சம்
தெரிவித்துள்ளனர். இதன் பிரதான சேவையாக உணவுப் பொருட்கள் வழங்குவதே
நடைபெறுகின்றது. சென்ற ஆண்டு இவ்வமைப்பு தனது 2069 சேவை மையங்களில் 130
மில்லியனுக்கும் அதிகமான உணவுகளை வழங்கி இருந்தது. தனிப்பட்ட நபர்களின்
அனுசரணையுடன் உணவுப் பொருள் விரயமாவதை தடுப்பதற்கான பிரச்சாரத்தையும்
(Lutte contre le gaspillage de nourriture) மேற்கொண்டு பல்பொருள்
அங்காடிகளிலும் சந்தைகளிலும் உணவுப் பொருட்களை இயன்றவர்களிடம் இருந்து
பெறவும் உள்ளது.



0 Comments