நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக
பால்மாவிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவருகின்றது. கடந்த
ஒருவாரகாலமாக தலைநகர் கொழும்பு உட்பட நகரப்பகுதிகளில்
பசுப்பாலுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இதனால்
பாவனையாளர்கள் பெரும் பாடுபடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
திடீரென பால்மாவிற்கும் பசுப்பாலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட காரணம்
என்ன என்று அறியாது மக்கள் நாள்தோறும் திண்டாடிவருகின்றனர்.
எந்தவொரு கடைகளிலோ அல்லது பல்பொருள் விற்பனை நிலையங்களிலோ
பால்மாக்களை பெறமுடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
முன்னொருபோதும் இல்லாத வகையில் இந்த திடீர் தட்டுப்பாடு தொடர்பில்
அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
சந்தையில் அங்கர், நெஸ்பிரே, ரத்தி உட்பட பால்மா வகைகள் முற்றாக
இல்லாத நிலை காணப்படுகின்றது. ஒருபோதும் இல்லாதவாறு
பசுப்பாலிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.
பக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட பசுப்பால் கொழும்பு உட்பட
நகரப்பகுதிகளில் பெறமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்த பால்மா தட்டுப்பாட்டிற்கும், பசுப்பால் தட்டுப்பாட்டிற்கும்
காரணம் என்ன என்பது குறித்தோ அதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை என்ன
என்பது தொடர்பிலோ நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை இதுவரை
பகிரங்கமாக விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இது குறித்து நுகர்வோர்
பாதுகாப்பு அதிகார சபையிடம் வினவியபோது, உலக சந்தையில்
பால்மாக்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் உள்ளூரிலும் பால்மா
விலையினை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் கோரிக்கை
விடுத்துள்ளன. ஆனால் தற்போதைய நிலையில் அந்த அதிகரிப்புக்கு அனுமதி
வழங்க முடியாது என்று நாம் அறிவித்துள்ளோம். இதனாலேயே பால்மா
நிறுவனங்கள் பால்மாக்களை இறக்குமதி செய்வதை குறைத்துள்ளன.
இதனாலேயே சந்தையில் பால்மாக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாம் விலை அதிகரிப்பிற்கு இணங்கினால்தான் பால்மா நிறுவனங்கள்
போதியளவு பால்மாக்களை இறக்குமதி செய்ய முடியும் என்று
அறிவித்துள்ளன. இதுவே தற்போதைய பால்மா தட்டுப்பாட்டிற்கு
காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பசுப்பால் தட்டுப்பாட்டிற்கு அரசாங்கத்தின் கீழுள்ள மில்கோ
நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும்
பணிப்பகிஷ்கரிப்பும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. கொழும்பில் மில்கோ
நிறுவன தொழிற்சங்க ஊழியர்கள் கடந்த 09 ஆம் திகதி முதல்
பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தில்
குதித்துள்ளனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் 200
மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று மில்கோ நிறுவனத்தின்
தலைவர் சுனில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். கடந்த சில
தினங்களுக்கு முன்னர் கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்றினை நடத்திய
மில்கோ நிறுவனத்தின் தலைவர், தொழிற்சங்கங்கள் தக்க காரணமின்றி
பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பெரும் நஷ்டம்
ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மில்கோ நிறுவன ஊழியர்கள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் உபதலைவர் ,
பொருளாளர் ஆகியோரை விலக்குமாறு கூறியே போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் டி.எம்.
ஜயரத்தினவிடமும் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். தமது கோரிக்கைகளை
நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
உடனடியாக மில்கோ நிறுவன ஊழியர்களின் போராட்டமும்
கைவிடப்படுவதற்கான சூழ்நிலை காணப்படவில்லை. எனவே
பசுப்பாலிற்கான தட்டுப்பாடும் நீடிக்கும் என்றே
எதிர்வுகூறவேண்டியுள்ளது. பசுப்பாலிற்கு தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளமையினால் தலைநகர் கொழும்பிலும் நகரப்பகுதிகளிலும்
உள்ள ஆலயங்களின் தேவைக்குக்கூட பால் இல்லாத நிலை
ஏற்பட்டிருக்கின்றது. இந்து ஆலயங்களில் அபிஷேகங்கள்
செய்வதற்கும் பால் இல்லாத நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக கவலை
தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் அங்கர் பால்மாக்களை பொன்டேரா நிறுவனம் உற்பத்தி செய்து
வருகின்றது. நெஸ்பிறே போன்ற பால்மாக்களை நெஸ்லே நிறுவனம் உற்பத்தி
செய்து வருகின்றது. தற்போது இந்த நிறுவனங்களினால் உற்பத்தி
செய்யப்படும் பால்மாக்கள் பதுக்கப்பட்டுள்ளதாகவும்
குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஏனெனில் அடுத்த வருட ஆரம்பத்தில்
பால்மாக்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கும்
என்ற எதிர்பார்ப்பில் வர்த்தகர்கள் பால்மாக்களை பதுக்கியும்
வைத்துள்ளனர். இதனாலேயே பால்மாவிற்கு பெரும் தட்டுப்பாடு
ஏற்பட்டிருக்கிறது.
அண்மையில் வத்தளை உட்பட இரு இடங்களில் பெருந்தொகையில் பதுக்கி
வைக்கப்பட்ட அங்கர் பால்மா பக்கெட்டுக்கள்
கைப்பற்றப்பட்டிருந்தன. இதேபோல் பெருமளவான பால்மா
பக்கெட்டுக்கள் பதுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு
முன்னர் பொன்டேரா நிறுவனத்தின் உற்பத்திப்பொருட்களில் டி.சி.டி.
இரசாயனப்பதார்த்தம் கலந்துள்ளதாக குற்றச்சாட்டு
எழுந்திருந்தது. இதனையடுத்தும் பால்மா பொருட்களுக்கு
தட்டுப்பாடான நிலை ஏற்பட்டிருந்தது. சந்தையிலிருந்து இந்தப்
பால்மா உற்பத்திப் பொருட்கள் அகற்றப்பட்டிருந்தன.
இந்தப் பிரச்சினைக்கு பரிசோதனைகள் மூலம் தீர்வு
காணப்பட்டதையடுத்து அங்கர் பால்மா உட்பட அந்த நிறுவனத்தின்
உற்பத்திப் பொருட்கள் சந்தையில் கிடைத்திருந்தன. ஆனால் தற்போது சகல
பால்மா வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை பாரதூரமான
விடயமாகும்.
மக்கள் பால்மாக்களையும் பசுப்பாலையும் பெற்றுக்கொள்வதற்கு
அலையவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் பிரச்சினைக்கு
அரசாங்கமானது தீர்வொன்றினை காணவேண்டும். பால்மா உற்பத்தி
நிறுவனங்கள் விலை அதிகரிப்பினை கோரியுள்ளன. விலை அதிகரிப்புக்கு
அனுமதி வழங்கப்படாமையினால் பால்மாக்களுக்கு சந்தையில்
தட்டுப்பாடு நிலவுகின்றது என்று காரணம் கூறுவதற்கு நுகர்வோர்
பாதுகாப்பு அதிகாரசபையோ அல்லது அரசாங்கமோ தேவையற்றதாகும்.
நாட்டில் பால்மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது என்றால் அந்தப்
பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் முழு முயற்சியையும்
எடுக்கவேண்டும். இதனைவிடுத்து சந்தையில் பால்மா இல்லாத நிலையில்
மக்கள் அலைந்து திரிகையில் இந்தப் பிரச்சினையைக் கண்டும் காணாதுபோல்
இருப்பது தவறான செயற்பாடாகும்.
சந்தையில் பால்மா தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில்
பால்மா நிறுவனங்களை அழைத்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை
பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அவர்களுக்குரிய பிரச்சினை என்ன
என்பதை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை காண்பதற்கு முயற்சிக்க
வேண்டும். இல்லையேல் அந்த முயற்சி பயனளிக்காவிட்டால் மாற்று நடவடிக்கைகள்
மூலம் பால்மா தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பது
இன்றியமையாததாகும். அத்துடன் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் பதுக்கல்
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படவேண்டும். இதன் மூலமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றை காணலாம்.
பால்மா தட்டுப்பாட்டை தொடர்ந்தும் நீடிக்கவிடுவது பதுக்கல்
வியாபாரத்திற்கும் துணைபோவதாக அமையும். எனவே நாடு தழுவிய ரீதியில்
ஏற்பட்டுள்ள இந்தப் பால்மா பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண அரசாங்கம்
முன்வரவேண்டும் என்று கோருவதுடன் எதிர்காலத்தில் இத்தகைய தட்டுப்பாடு
ஏற்படாதவகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்த
விரும்புகின்றோம்.


0 Comments