Subscribe Us

header ads

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜக்ஸ் கலிஸ்


தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரரான ஜக்ஸ் கலிஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். நாளை ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியே தனது இறுதி டெஸ்ற் போட்டியாக அமையும் என அவர் அறிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தினமான இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் இந்த முடிவு இலகுவானதாக அமைந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக தென்னாபிரிக்க அணி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வரும் நிலையிலும், அவுஸ்ரேலியாவிற்கெதிரான தொடர் மிக விரைவில் இடம்பெறவுள்ள நிலையிலும் இந்த முடிவு கடினமானதாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

ஆனால் ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் இதுவெனத் தான் கருதுவதாக ஜக்ஸ் கலிஸ் தெரிவித்தார். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் இந்த முடிவை விடைபெறலாகக் கருதவில்லை எனக் குறிப்பிட்ட ஜக்ஸ் கலிஸ், 2015ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணிக்குப் பங்களிப்பை வழங்குவதற்கான தாகம் தன்னிடம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுவரை 165 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள ஜக்ஸ் கலிஸ், 44 சதங்கள், 58 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 55.12 என்ற சராசரியில் 13174 ஓட்டங்களைக் குவித்துள்ளார். பந்துவீச்சில் அவர் 292 விக்கெட்டுக்களை 32.53 என்ற சராசரியில் கைப்பற்றியுள்ளார்.

Post a Comment

0 Comments