Subscribe Us

அக்கரைப்பற்று பனங்காட்டு பாலத்தின் களப்பில் மூழ்கிய சகோதரர்கள் மரணம் : தேடிச்சென்ற படகும் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது

(சுகிர்தகுமார்)

அக்கரைப்பற்று பனங்காட்டு பாலத்தின் அருகே களப்பில் தவறி வீழ்ந்த இரு சகோதரர்களும் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நாவற்காடு பிரிவைச் சேர்ந்த  ஞானசேகரம் ஜெயந்திவாசன் (25),   ஞானசேகரம் ஜனார்த்தனன் (21) ஆகிய இரு சகோதரர்களுமே மரணமடைந்தவர்கள்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில்; இடம்பெற்றுள்ளது. சுழியோடிகளினதும் பொதுமக்களின் உதவியோடும் இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சம்பவ தினம்  தீபாவளி நாளை கொண்டாடுவதற்காக தங்களது நண்பர்களுடன் சேர்ந்து இரு சகோதரர்களும் சென்றுள்ளனர்.  இந்நிலையில் பாலத்தருகே நிற்கும்போது மரணமடைந்தவர்களில் ஒருவரிடமிருந்த தலைக்கவசம்; களப்பினுள் தவறி விழுந்துள்ளது. அதனை எடுப்பதற்காக மூத்த சகோதரர் முயற்சித்த வேளையிலேயே நீரில் மூழ்கியுள்ளார். அண்ணன் நீரில் மூழ்குவதை அவதானித்த தம்பியும் களப்பினுள் குதித்தபோதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு சகோதரர்களும் மிகவும் நெருக்கமுடையவர்கள் என்பதுடன் எவ்வேளையிலும் ஒன்றாகவே இருப்பவர்கள். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னரும் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஒன்றாகவே விபத்துக்குள்ளானவர்கள். இளையவர் அண்மையிலேயே வெளிநாட்டில் இருந்து வீட்டிற்கு திரும்பியவர் என்பதுடன்  முன்தினம் குடும்பத்தாருடன் இருவரும் ஆலயம் ஒன்றிற்கு சென்று தீபாவளி வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


இது இவ்வாறிருக்க களப்பில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட தோணி ஓன்றும் கவிழ்ந்த போதிலும் அனைவரும் தப்பித்துக் கொண்டனர் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments