மூன்று நாடுகளுக்கு இடையில் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்ற டயலொக் செரெண்டிப் சர்வதேச கிண்ண றக்பி தொடரின் கடைசி லீக் போட்டியில் போலந்தை மயிரிழையில் வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை றக்பி உயரிய நிலையை நோக்கி நகர்வதனை எடுத்துக்காட்டியுள்ளது.
இப் போட்டியில் இலங்கை 26 : 25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றபோதிலும் அது உலக றக்பியில் இலங்கையினால் பதிவு செய்யப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக அமைந்தது.
ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு எதிராக அதுவும் உலகத் தரப்படுத்தலில் தம்மைவிட 15 இடங்கள் முன்னிலையில் இருந்த நாடு ஒன்றுக்கு எதிராக இலங்கையினால் ஈட்டப்பட்ட முதலாவது வெற்றி இதுவாகும்.
இந்த வெற்றியானது டயலொக் செரெண்டிப் சர்வதேச கிண்ண றக்பி தொடரில் இலங்கைக்கு இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொடுத்தது.
இந்தத் தொடரில் உலகத் தரப்படுத்தலில் 44ஆவது இடத்துடன் களமிறங்கிய மடகஸ்கார் தனது இரண்டு போட்டிகளிலும் இலங்கையையும் (17 : 12), போலந்தையும் (25 : 21) வெற்றிகொண்டு சம்பியனானது.
போலந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான போட்டி கடந்த வெள்ளியன்று மின்னொளியில் ஆரம்பமாவதற்கு முன்னர் இடியுடன் கூடிய கடும் மழை பெய்தது. எனினும் போட்டி ஆரம்பித்தவுடன் இயற்கை அன்னை அமைதி அடைய போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்றது.
போட்டியின் ஒரு கட்டத்தில் போலந்து 15 : 3 என முன்னிலை வகித்தது.
எனினும் ரீஸா முபாரக் தனது இரண்டாவது பெனல்டியை இலக்கு தவறாமல் உதைத்ததைத் தொடர்ந்து 34ஆவது நிமிடத்தில் நிரோஷன் பெர்னாண்டோ மிகவும் அலாதியாக ட்ரை வைத்தார். இந்த ட்ரைக்கான மேலதிகப் புள்ளிகளை ரீசா பெற்றுக்கொடுத்தார்.
இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தபோது ரீஸா பெனால்டி ஒன்றை தவறவிட்டார். இடைவேளையின் பின்னர் 50ஆவது நிமிடத்தில் போலந்து அணி பெனல்டி ஒன்றின்மூலம் 18 : 15 என முன்னிலை அடைந்தது. ஆனால் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் போலந்து வீரர் ஒருவர் விதிகளுக்கு முரணான வகையில் விளையாடியதால் இலங்கைக்கு பெனல்டி வழங்கப்பட்டதுடன் அந்த வீரருக்கு மத்தியஸ்தர் மஞ்சள் அட்டையைக் காட்டி ஆடுகளத்திலிருந்து வெளியேற்றினார்.
இதனை நன்கு சாதகமாக்கிக்கொண்டு விளையாடிய இலங்கை அணி மீண்டும் நிரோஷன் பெர்னாண்டோ மூலம் ட்ரை ஒன்றை வைத்தது. அதற்கான மேலதிகப் புள்ளிகளைப்பெற்றுக்கொடுத்த ரீஸா முபாரக், 68ஆவது நிமிடத்தில் ட்ரொப் கோல் ஒன்றைப் போட்டு இலங்கையை 26 : 18 என முன்னிலையில் இட்டார்.
ஆட்டம் முடிவடைய ஓரிரு நிமிடங்கள் இருந்தபோது ஒரு கோல் மூலம் போலந்து புள்ளிகளைப் பெற்றபோதிலும் சற்று நேரத்தில் ஆட்டம் முடிவடைய நாமல் ராஜபக் ஷவின் தலைமையிலான இலங்கை அணியினர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.
இந்தத் தொடரில் 28 புள்ளிகளை ஈட்டிக்கொடுத்த ரீஸா முபாரக் அதிக புள்ளிகளைப் பெற்ற வீரருக்கான விருதை வென்றெடுத்தார்.
0 Comments