பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள
நியூசிலாந்து அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் அணி 3-0 என்ற கணக்கில்
கைப்பற்றியுள்ளது.
கான் ஷாகெப் ஒஸ்மான் அலி மைதானத்தில் இடம்பெற்ற 3ஆவது போட்டியில்
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில்
ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 307 ஓட்டங்களைக் குவித்தது.
முதலாவது விக்கெட்டுக்காக 66 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, அதன் பின்னர் 3
விக்கெட்டுக்களை இழந்து 101 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், 4ஆவது
விக்கெட்டுக்காக 130 ஓட்டங்களையும், 6ஆவது விக்கெட்டுக்காக 34 பந்துகளில்
பிரிக்கப்படாத 75 ஓட்டங்களையும் பகிர்ந்தது.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக றொஸ் ரெய்லர் 93 பந்துகளில்
ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களையும், கொலின் முன்ரோ 77 பந்துகளில் 85
ஓட்டங்களையும், அன்ரன் டேவ்சிச் 38 பந்துகளில் 46 ஓட்டங்களையும், ரொம்
லத்தம் 73 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக மகமதுல்லா 2 விக்கெட்டுக்களையும்,
றூபெல் ஹொசைன், சொஹக் கஸி, அப்துர் ரஸாக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும்
கைப்பற்றினர்.
308 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி
49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
முதலாவது விக்கெட்டுக்காக 7.4 ஓவர்களில் 61 ஓட்டங்களைக் குவித்த அவ்வணி,
அதன் பின்னர் 3 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களுடன் தடுமாறிய
போதிலும், 4ஆவது விக்கெட்டுக்காக 73 ஓட்டங்கள் பகிரப்பட்டதோடு, தொடர்ந்து
வந்த வீரர்கள் தங்கள் பங்களிப்புகளை வழங்கி அணிக்கு வெற்றியைப் பெற்றுக்
கொடுத்தனர்.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக ஷம்சுர் ரஹ்மான் 107 பந்துகளில்
96 ஓட்டங்களையும், நயீம் இஸ்லாம் 74 பந்துகளில் 63 ஓட்டங்களையும், நசீர்
ஹொசைன் 38 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும், மொமினுல் ஹக் 33
பந்துகளில் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக மிற்சல் மக்லநகன் 2
விக்கெட்டுக்களையும், கொரே அன்டர்சன், நேதன் மக்கலம், அன்ரன் டேவ்சிச்
ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ஷம்சுர் ரஹ்மானும், இத்தொடரின் நாயகனாக முஷ்பிக்கூர் ரஹீமும் தெரிவானர்.

0 Comments