
ரோம் பிரகடனத்தில் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட மறுத்ததன் காரணமாக
இலங்கையை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை
காணப்படுகின்ற போதும் மஹிந்த ராஜபக்ஷ அரசு அதற்கான வழியை
ஏற்படுத்தியுள்ளதாக ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க
தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (18.11.13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது,
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை
இலங்கை செயற்படுத்தினால் சர்வதேசத்தில் இருந்து இவ்வாறு அழுத்தம் வராது.
ஐக்கிய நாடுகள் சபை இதனை அடிக்கடி கூறி வருகிறது.
சார்ள்ஸ் இளவரசருடன் நின்று படம் ஒன்றை எடுத்துக் கொள்ளவென இலங்கை
அரசாங்கம் 10-14 பில்லியன் நிதி செலவிட்டு சாதனை படைத்துள்ளது.
மாநாட்டிற்கு செலவிடப்பட்ட பணம் எவ்வளவு என அரசாங்கம் இன்னும் கூறவில்லை.
பஸ், கார் உள்ளிட்ட வாகன போக்குவரத்திற்கு மாத்திரம் 4300 மில்லியன்
ரூபா செலவிடப்பட்டுள்ளது. வந்தவர்களை உபசரிக்க 3000 மில்லியன், அவர்களுக்கு
அழைப்பு விடுக்க 500 மில்லியன், ஊடகவியலாளர் ஒருவருக்கு 100,000 என பணம்
செலவிடப்பட்டுள்ளது.
மாநாடு ஆரம்ப நிகழ்விற்கு 400 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. பொதுவாக
நோக்கின் 10-14 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை ´சோகம்´ வரி
என்ற பெயரில் அறவிட்டுக் கொள்வர்.
54 நாடுகளில் 21 நாட்டுத் தலைவர்களே வந்திருந்தனர். இதில் ஒரு
தலைவருக்கு 70 கோடியை அரசாங்கம் செலவிட்டுள்ளது. இத்தொகை பிழை என்றால்
சரியான தொகையை கூறவும்.
அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்காத, விவசாய ஓய்வூதியம்
வழங்காத, வைத்தியசாலைகளுக்கு மருந்து வழங்காத அரசாங்கம் மாநாட்டிற்கு
கோடிக்கணக்கில் பணம் செலவிட்டது எவ்வாறு?
சனல் 4 ஊடகவியலாளர்கள் சிறிகொத்தவிற்கு வந்ததாகக் குற்றம்
சுமத்தப்படுகிறது. அரசாங்கம் அவர்களுக்கு விசா வழங்கி நாட்டுக்கு
அழைத்ததுதான் குற்றம்.
இதேவேளை, இன்று (18) கூடவிருந்த ஐதேக தலைமைத்துவ சபை கரு ஜயசூரியவிற்கு
ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாக எதிர்வரும் 27ம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
0 Comments