Subscribe Us

header ads

பீட்சாவை ஏன்டா உலகுக்கு அறிமுகப்படுத்தினோம் என நொந்த இத்தாலியர்கள் - நியாண்டர் செல்வன்



பீட்சாவை ஏன்டா உலகுக்கு அறிமுகப்படுத்தினோம் என இத்தாலியர்கள் நொந்து நூடில்ஸ் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.
 
ரொட்டியை தந்தூரி அடுப்பில் வைத்து மேலே இறைச்சி, சீஸை வைத்து உண்ணும் வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்றாலும் அமெரிக்க கண்டம் கண்டுபிடிக்கபட்டு, அங்கிருந்து தக்காளி ஐரோப்பாவுக்கு அறிமுகம் ஆனது. 16ம் நூற்றாண்டில் இத்தாலியர்கள் வட்டமான ரொட்டியின் மேல் தக்காளி, சீஸ், இறைச்சி, காய்கறிகளை வைத்து அடுப்பில் சுட்டு உண்ண ஆரம்பித்ததுதான் பீட்சாவின் அபிசியல் துவக்கமாக கருதப்படுகிறது.
 
மீனவர்களின் மனைவியர் பீட்சாவின் மேல் போட்ட தக்காளி சாஸின் பெயர் மரினாரா- Marinara (மரினா- கடல் சார்ந்த இடம்). மார்க்கரிட்டா எனும் நேபில்ஸ் அரசிக்கு சமைத்த பீட்சாவின் பெயர் மார்கரிட்டா. இந்த இரண்டும் தான் பாரம்பரியமான இத்தாலிய பீட்சாவாக கருதப்படுகிறது. பீட்சாவுக்கு இத்தாலியர்கள் தனி மரியாதை கொடுப்பார்கள். இத்தாலிய வீடுகளில் போனால் பீட்சா சமைக்க ஓவன் இருக்காது. சாதா சமையல்காரரும் அதை சமைக்கமாட்டார்.
 
 பரோட்டா மாஸ்டர் என நாம் ஸ்பெஷலாக கடைகளில் நியமிப்பது போல அவர்களும் பீட்சாவை மட்டும் சமைக்க கடைகளில் ஒரு மாஸ்டரை வைத்து இருப்பார்கள். அவர் விறகு அடுப்பில் தான் பீட்சா சமைப்பார். விறகு அடுப்பு மூட்ட நேரம் ஆகும் என்பதால் பெரும்பாலும் டின்னருக்கு தான் பீட்சா கிடைக்கும்
 
பீட்சாவை சுட்டதும் சுடச்சுட எடுத்து பரிமாறுவார்கள். வெட்டி ஸ்லைஸ் எல்லாம் போட்டுக்கொடுக்கமாட்டார்கள். கூட்டமாக உட்கார்ந்து நாலைந்து பேர் ஒரே பீட்சாவை உண்ணும் கதையும் கிடையாது. ஒருவருக்கு ஒரு பீட்சாதான். கத்தியால் நாமே வெட்டி, முள்கரண்டியில் எடுத்து சாப்பிடவேண்டும். அல்லது மடித்து சுருட்டி பீடாபோல கையால் எடுத்தும் விழுங்கலாம்.
 
நார்வே, மற்றும் அமெரிக்காவில் உறையவைத்த கமர்சியல் பீட்சாக்கள் (Frozen pizza) விற்பனை கல்லாகட்டுகிறது. நார்வேஜியர்கள் தான் இத்தாலியை விடவும் அதிகமாக பீட்சா சாப்பிடுபவர்கள். அதிலும் சூப்பர்மார்கட்டுகளில் போய் கிரான்டியோசா (Grandiosa) எனும் உறையவைத்த பீட்சாவை வாங்கிவந்து அவர்களே ஓவனில் வைத்து எடுத்து சாப்பிடுவார்கள். நார்வேயின் தேசிய உணவாக அறிவிக்கலாம் என பலரும் கருத்து தெரிவிக்கும் பிராண்டு கிரண்டியோசா. 
 
அமெரிக்காவில் உறையவைத்த பீட்சாவின் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. சமைக்க யாருக்கும் நேரமில்லை. பெரிய பீட்சாவை வாங்கினோமா, ஓவனில் வைத்து எடுத்தோமா, பெப்ஸி/கோக்குடன் குடும்பமாக அமர்ந்து சாப்பிடோமா, முடிந்தது கதை. எதுக்கு சமையல்?
 
பல அமெரிக்க மளிகை கடைகளில் 40% விற்பனை பீட்சாவின் மூலமே வருவதால், நம்ம ஊரில் பரோட்டா செலுத்தும் ஆதிக்கத்தை அங்கே பீட்சா செலுத்தி வருகிறது
 
அதனால் இத்தாலிக்கு போனால் நேபிள்ஸில் மரபான ஒரு கடைக்கு போய் அவர்க்ள் விறகு அடுப்பில் செய்துகொடுக்கும் மார்கரிடா/மரினாரா பீட்சாவை உண்ணவும். அதுதான் அந்த உணவுக்கு நாம் கொடுக்கும் மரியாதை.
 
~ நியாண்டர் செல்வன்

Post a Comment

0 Comments