Subscribe Us

header ads

Valued Added Tax 15% : சவூதி அரேபியா : 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்ட வாட் வரி (VAT)


சவூதி அரேபியாவில் மதிப்பு கூட்டு (VAT) வரியை 15 சதவிகிதமாக அதிகரிக்க மே 11 அன்று, அரசானை கிடைத்ததை அடுத்து, நேற்று முதல் (ஜூலை 1) சவூதி அரேபியா முழுவதும் உள்ள சரக்கு மற்றும் சேவைகளுக்கு 15 சதவிகிதம் VAT அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VAT -ல் பதிவு செய்த வரி செலுத்துவோர் தங்களது நிறுவனத்தின் தயார் நிலைகுறித்து உறுதி செய்யவும், அரசின் வரி உயர்வு பற்றிய அனைத்து இடைக்கால விதிகள் பற்றி அறிந்துகொள்ளவும், வரி உயர்வுக்கான இடைக்கால விதிமுறைகள் பற்றிய வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சவூதியின் ஜகாத் மற்றும் வருவாய் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பொருட்களுக்கான வரி விலைப்பட்டியலில் கடையின் பெயர், பொருள் வாங்கிய தேதி, வரி எண் மற்றும் VAT ஆகியவை இடம்பெற்றுள்ளதா? என பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கவனிக்க வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கண்ட விபரங்கள் வரி விலைப் பட்டியலில் இல்லையென்றால் ஆணையத்தின் இணைய தளத்திலோ அல்லது VAT அப்ளிகேஷன் மூலமாகவோ புகாரளித்து இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆணையம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

வரி செலுத்துவோர் சவூதியின் வரி விதிமுறைகள் பற்றி மேலும் பல தகவல்களைப் பெறவும் இந்த விதிகளை சரியான முறையில் பின்பற்றவும் உதவி தேவைப்படுவோர், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லலாம் அல்லது 19993 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து ஒருங்கிணைந்த அழைப்பு மையத்தின் மூலமாக ஆணையத்தை அணுகலாம் அல்லது ஆணையத்தின் வாடிக்கையாளர் சேவைக்கான ட்விட்டர் கணக்கின் மூலம் உதவிகோரலாம்.

ஜுலை 1 முதல் இணைய வணிகம் (e-commerce) மூலமாக சவூதி அரேபியாவிற்கு வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 15 சதவிகித VAT விதிக்கப்படும் என சவூதி கஸ்டம்ஸ் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சவூதி சுங்கத்துறை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில்,” சுங்கத்துறை மூலமாக ஜூலை 1, 2020 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு சவூதிக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் உட்பட இணைய விற்பனை நிலையங்களின் (e-stores) மூலம் நடைபெறும் அனைத்து விற்பனை, கொள்முதலுக்கு 15 சதவிகித VAT விதிக்கப்படும்” என அறிவித்திருந்தது.

சவூதிக்குள் இறக்குமதியாகும் வரி விதிக்கக்கூடிய அனைத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கும் இந்த வரி உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக வரி உயர்வு?

கொரோனா பாதிப்பு மற்றும் எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்டும் விதத்தில், VAT வரியை 5 சதவிகிதத்திலிருந்து மூன்று மடங்கு உயர்த்தி 15 ஆக நிர்ணயிக்க இருப்பதாக கடந்த மே மாத துவக்கத்தில் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments