ஷார்ஜாவின் வருடாந்திர விற்பனைத் திருவிழா ஜூலை 22 ஆம் தேதி
துவங்குவதையொட்டி ஷாப்பிங் மால்கள் மற்றும் சில்லறை விற்பனையகத்தில் 75
சதவிகிதம் வரையில் தள்ளுபடி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 21 ஆம் தேதிவரையில் நீடிக்கும் இந்த விற்பனைத் திருவிழா கடுமையான
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெறும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜா வர்த்தக மற்றும் நிறுவன சபை (SCCI) இதுகுறித்து வெளியிட்டுள்ள
அறிக்கையில்,” இந்த நிகழ்விற்கான அனைத்து நடவடிக்கைகளும்
செய்யப்பட்டிருக்கிறது. இந்த விற்பனைத் திருவிழாவில் பங்கேற்கவும்,
பிரத்யேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அளிக்கவும் ஷாப்பிங் மால்கள்
மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் தங்களது ஒப்புதலைத் தெரிவித்துள்ளன.
சஹாரா சென்டர் (Sahara Centre), அல் வஹா மால் (Al Waha Mall), சிட்டி
சென்டர் ஷார்ஜா (City Centre Sharjah), ஸவாயா வாக் (Zawaya Walk), ஸீரோ 6
மால் (Zero 6 Mall) மற்றும் ஷார்ஜாவின் முன்னணி சில்லறை வர்த்தக
ஸ்தாபனங்களும் இந்த விற்பனை திருவிழாவில் பங்கேற்கின்றன” எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய SCCI அமைப்பின் தலைமை இயக்குனர் முகமது அகமது அமின்
அல் அவாதி (Mohammad Ahmed Amin Al Awadi),” வர்த்தகத்துறை கொரோனா
தாக்கத்தை எதிர்த்து நிலைபெற பல்வேறு நடவடிக்கைகளை SCCI எடுத்துள்ளது. இந்த
விற்பனை காலம் சில்லறை வர்த்தகத்தை முன்னேற்றுவதுடன், குறிப்பாக வர்த்தகத்
துறையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரவும், விற்பனை மற்றும் சந்தைகளை
ஊக்குவிக்கவும் உதவும்” என்றார்.
“அதிக பார்வையாளர்கள் மற்றும் வாங்குபவர்களை ஈர்க்க உதவும் வகையில்
மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள சில்லறை ஸ்தாபனங்களுக்கு இந்த
விற்பனைத் திருவிழாவில் பங்கேற்கும் கட்டணத்தில் விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மகுதிகளில் உள்ள சில்லறை கடைகளுக்கு பங்கேற்கும்
கட்டணத்தில் 50 சதவிகித தள்ளுபடி அளிக்கப்பட்டிருக்கிறது” என அல் அவாதி
தெரிவித்தார்.
“இந்த விற்பனை திருவிழாவை முன்னிட்டு SCCI கள ஆய்வினை மேற்கொண்டு, இதில்
பங்கேற்கும் அனைத்து மால்கள் மற்றும் கடைகளில் கொரோனா முன்னெச்சரிக்கை
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கிறது” என SCCI அமைப்பின்
பொருளாதார உறவு மற்றும் சந்தைப்படுத்தல் துறையின் இயக்குனர் இப்ராஹீம்
ரஷீத் அல் ஜர்வான் (Ibrahim Rashid Al Jarwan) தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த விற்பனைத் திருவிழாவானது
குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோரின் நலனுக்காகவும், ஷார்ஜாவை
விற்பனைத் துறையில் முதன்மைப்படுத்தும் விதமாக சில்லறை வர்த்தக
ஸ்தாபனங்கள், ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளுக்கு ஆதரவும்
அளிக்கப்படுகிறது.
0 Comments