மாஜித் அலி அல் ஹகமி என்பவர் சவுதி பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த வீரர், இவரும் சக வீரர்களைப் போல் புனித ஹஜ் பாதுகாப்பு மற்றும் உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
அரபா தினத்தில் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சற்று தூரத்தில் ஒரு முதிய ஹஜ் யாத்ரீகர் நடக்க முடியாமல் உட்காருவதும் எழுந்து நிற்பதுமாக தவித்துக் கொண்டிருப்பதை கண்டார். அவரருகே சென்று குடிக்க நீர் வழங்கியும், தலையின் மீது குளிர்ந்த நீரை ஊற்றியும் ஆசுவாசப்படுத்தினார். அவருடைய பிரச்சினை குறித்து விசாரித்தார் ஆனால் முதிய ஹஜ் பயணியால் உருது மொழியில் மட்டுமே பதிலளிக்க முடிந்தது.
உருது மொழி அறியாத சவுதி வீரர் அவருடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு சைகை மொழியில் அவருடன் உரையாடி, உங்களுக்கு உதவ நானிருக்கின்றேன் என்ற நம்பிக்கையை ஊட்டி அவருடன் சிறிது தூரம் கையை பிடித்துக் கொண்டு நடந்தார் ஆனாலும் முதிய ஹஜ் பயணி நடக்க சிரமப்படுவதை அறிந்து அவரை தன் கைகளில் தூக்கியவராக நடக்கத் துவங்கினார்.
அரபாவிலிருந்து மெட்ரோ ரயில் நிலையம் வரை அவரை சுமந்து சென்றார், செல்லும் போது ஹஜ் யாத்ரீகர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய அந்த வீரருக்காக துஆ செய்தவராக வந்ததை பாதுகாப்பு வீரர் உணர்ந்து கொண்டு இத்தருணத்தை ஏற்படுத்திதந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இதற்கான நற்கூலியை வேண்டியவராக மெட்ரோ ரயிலிலும் அவர் அருகில் அமர்ந்தவராக முஜ்தலீபா வரை பயணம் செய்தார்.
முஜ்தலீபாவில் முதிய ஹஜ் பயணி அன்றைய இரவை கழிக்கவும், தொடர்ந்து பாதுகாப்புடன் எஞ்சிய ஹஜ் கிரிகைகளை நிறைவேற்றவும் மாற்று ஏற்பாடுகளை செய்துவிட்டுமே அங்கிருந்து சென்றார் சவுதி வீரர்.
அரபாவில் முதிய ஹஜ் யாத்ரீகருக்கு உதவிய நிகழ்வுகளை யாரோ ஒருவர் பதிவு செய்து போட்டோவாகவும், வீடியோவாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற சவுதி வீரருக்கு பாராட்டுக்களும், துஆக்களும், வாழ்த்துக்களும் குவிய சவுதி பாதுகாப்பு படை வீரரோ "இப்புனிதமான நாளில் இச்சேவையை செய்ய பல்லாயிரக்கணக்கான வீரர்களிலிருந்து அல்லாஹ் என்னை தேர்வு செய்துள்ளது மிகவும் பாக்கியம் பொருந்திய ஒன்று, என்னுடைய இடத்தில் வேறு எந்த சவுதி பாதுகாப்பு வீரர் இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பார்கள் என தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார் மாஜித் அலி அல் ஹகமி.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments