Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (வறுமையில் கல்வி) கவிதை தொகுப்பு.


Mohamed Nizous

கொப்பி வாங்குவதில்
கொழுந்து விடும் பிரச்சினை
பழைய கொப்பியில்
பக்கங்கள் மிஞ்சினால்
எஞ்சிய பக்கங்களில்
எழுதுவார் புது விடயம்.

ஒற்றை ரூளில்
ஓரளவே எழுதலாம்
கணக்குக் கொப்பியில்
கனக்க எழுதலாம்
ஆதலால் பாடங்களுக்கு
அதுவே வாங்குவார்

கவர் வாங்குவதற்கு
காசு தட்டுப்பட
கலண்டர் பேப்பர்கள்
கை கொடுத்து உதவும்.

செய்து பார்க்க பேப்பரின்றி
சேர்த்து வைத்த கலண்டரில்
பென்சிலால் எழுதி
பின்னர் அழித்து
செய்யும் பேப்பர் வாங்கும்
செலவை சமாளிப்பார்.

ஒரு ட்ரவுஸர்
இரு சேர்ட்டு
இரவில் கழுகி
எப்படியோ காயவைக்க
உறவுகள் உதவும்
உடை பிரச்சினை தீரும்.

கடனுக்கு வாங்கிய
காலைச் சாப்பாடு
சீனியுடன் அரங்கேறும்
சில நேரம் அதுவுமில்லை

பழைய சைக்கிள்
பலமாக இசை அமைக்கும்
இளைத்து இளைத்து
எப்படியோ ஓட்டுவார்

இடை வேளை நேரம்
இரையும் வயிறு
கூட்டாளிமாரு
கூட்டாகச் சேர்ந்து
காசு சேகரித்து
கண்டீனில் வாங்கும் போது
விலக வழியின்றி
விடாமல் படிப்பது போல்
பாசாங்கு செய்து
பார்ப்பார் புத்தகத்தை.

தாகம் வந்தால்
தண்ணீர் குடிப்பதற்கு
கொப்பியைத் தூக்கி
குறுக்கால் வைத்து
பிஞ்சதை மறைத்த படி
பின்னால் செல்வார்.

பார்ட்டி பயணம்
பல்வேறு செலவு வரும்
விருப்பம் இல்லையென்று
விலகி ஒதுங்குவார்.

கஷ்டம் என்பார்
கஞ்சன் என்பார்
காதில விழுவதை
கஷ்டப்பட்டு விழுங்குவார்.

இத்தனையும் தாங்கி
இதற்கு மேலும் தாங்கும் போது
உள்ளே வெறி எழும்பும்
உயர்ந்து வாழ்வேன் என
அந்தத் தீப் பொறி
அர்த்தராத்திரியில் விழித்து
விடாது படிக்க வைக்கும்
வெற்றியைத் தேடித் தரும்
கஷ்டப்படும் மாணவர்காள்
காலம் கனிந்து வரும்
ஏழ்மைக்குப் பயந்து
இடையில் படிப்பு விடாதீர்.

Post a Comment

0 Comments