முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் காங்கிரஸ்
என்னும் அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரைக்கும் அதன்
வளர்ச்சி பயணத்தில் சொல்லொன்னா துயரங்களையும், இடையூறுகளையும், சதிகளையும்
எதிர்கொண்டதுடன் அதனை பாதுகாப்பதற்கு தொடர்ந்து போராடவேண்டி உள்ளது.
அந்த போராட்டத்தில் பலர் மரணித்தும் உள்ளார்கள்.
அதனாலேதான் முஸ்லிம் காங்கிரசின் பயணம் ஒரு போராட்டம் என்றும், அதில் கலந்து கொள்கின்றவர்கள்
அனைவரும் போராளிகள் என்றும் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களினால் போற்றப்பட்டார்கள்.
மறைந்த தலைவரின் காலத்தில் சிங்கள தேசிய
கட்சிகளின் முஸ்லிம் முகவர்களினால் மட்டுமல்ல, தமிழ் ஆயுத இயக்கங்களாலும் முஸ்லிம்
காங்கிரசை வளர்த்தெடுப்பதில் பாரிய நெருக்கடிகளும், உயிர் இழப்புக்களும் ஏற்பட்டது.
ஏன் தலைவர் அஸ்ரப் அவர்களைகூட கொலை செய்வதற்கு
ஈ.என்.டீ.எல்.எப் என்னும் இயக்கம் எடுத்த முயற்சிகளும் மயிரிழையில் தோல்வி கண்டது.
முஸ்லிம் பிரதேசங்களில் தலைவர் அஸ்ரப் அவர்கள்
தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றால், அங்குள்ள முஸ்லிம் முகவர்களினால் மின்சாரம்
துண்டிக்கப்படுவதும், கூக்குரல்களும், கல்லெறிகளும் மேற்கொள்ளப்பட்டு கூட்டங்கள்
பல குழப்பபட்டதுண்டு.
சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரசில் இருந்து
வெளியேற்றப்பட்ட பின்பு, முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக இருந்த அக்கரைப்பற்றில்
கூட்டம் நடாத்துவதில் தலைவர் அஸ்ரப் அவர்கள் பாரிய இடையூறுகளை எதிர்கொண்டார்.
அக்கரைப்பற்றுக்கு செல்ல முடியாத நிலைமை தலைவர் அஸ்ரப்க்கு இருந்தது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டம்
நடைபெற்றாலும், அங்கு மின்சார கம்பிகளுக்கு சைக்கள் செயின் எறியப்பட்டு அதன்பின்பு
கூட்டத்துக்கு கல்லெறிகளும், கூக்குரல்களும் செய்யப்பட்டு கூட்டங்கள் இடைநடுவில் குழம்பிய
ஏராளமான வரலாறுகள் முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ளது.
இவ்வாறு மின்சாரத்தை துண்டித்து கூட்டத்தை
குழப்பும் கலாச்சாரத்தை சேகு இஸ்ஸதீனே உருவாக்கினார். பின்னாட்களில் அதனை அதாஉல்லா
இன்றைய தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு எதிராக பின்பற்றினார்.
இத்தனை இடையூறுகளையும் தாண்டித்தான் தேசிய
அரசியலில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சியடைந்தது.
கூட்டத்தை குழப்புவதற்கு ஆயிரக்கணக்கில் ஆக்கள்
தேவையில்லை. ஒரு சிறு குழுவினர்களே போதும். பணம் வழங்கினால் வேலையை கற்சிதமாக
செய்து முடிப்பார்கள். ஆனால் இந்த கூலிக்கு வேலை செய்கின்ற குழுக்களுக்கும், முஸ்லிம்
காங்கிரசுக்கு வாக்களிக்கும் மக்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை.
அன்று தலைவர் அஸ்ரப் எதிர்கொண்ட அதே சவாலை
இன்றைய தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றார். இது அரசியலில்
பழகிப்போன விடயமாகும்.
எனவே, இவ்வாறு அரசியல் என்றால் என்னவென்றும், களநிலவரம்
எப்படி என்றும், மு.கா இன் கடந்தகால பயணம் எவ்வாறானது என்றும் அறிந்துகொள்ளாத
முகநூல்வாதிகள் சிலர், மு.கா க்கு எதிரான கருத்துக்களை பதிவிட வேண்டும் என்பதற்காக,
கூட்டங்களில் ஏற்படுகின்ற சில சலசலப்புக்களை வீட்டுக்குள் இருந்துகொண்டு
முகநூல்களில் பதிவிடுகின்றார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பதனை தேர்தல்
பெறுபேறுகளின் பின்பே இவர்களுக்கு உணர்த்தப்படும்.
0 Comments