Subscribe Us

header ads

ஆடி காரை விட்டுவிட்டு ஆம்புலன்ஸைக் கடத்திய தொழிலதிபர்! - குடிபோதையில் நடந்த நள்ளிரவு ஆட்டம்


சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மதுபோதையில், தன் ஆடி கார் என்று நினைத்து மருத்துவமனை ஆம்புலன்ஸை வீட்டுக்கு ஓட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, ‘நேற்று (ஞாயிறு) நள்ளிரவு பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது தொழிலதிபர் மித்தில் நடன நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். 

அங்கு அவரின் பெண் தோழி நடனமாடும்போது காயமடைந்ததையடுத்து அவரை ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்கள் குடிபோதையில் இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டது. 

இதைத் தொடர்ந்துதான் ஆடி காருக்குப் பதிலாக அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு தேனாம்பேட்டில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளார். 

தேனாம்பேட்டை மருத்துவமனையில் மித்திலின் தோழியை அனுமதித்துவிட்டு நள்ளிரவு 1.30 மணியளவில் அங்கு இருந்து ஆம்புலன்ஸிலேயே புறப்பட்டுள்ளார். 

இதையடுத்து ஆயிரம் விளக்கில் உள்ள மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸைக் காணவில்லை என்று அம்மருத்துவமனை அதிகாரிகள் தேடத் தொடங்கியுள்ளனர். காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

போலீஸார் காணமல்போன ஆம்புலன்ஸைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தபோது மித்திலின் உதவியாளர் ஆம்புலன்ஸை கொண்டுவந்து தேனாம்பேட்டை மருத்துவமனையில் நிறுத்திவிட்டு “என் முதலாளி மித்தில், தன் ஆடி காருக்குப் பதில் ஆம்புலன்ஸை வீட்டுக்கு எடுத்துவந்துவிட்டார்” என்று கூறியுள்ளார். 

அந்த ஆம்புலன்ஸின் கண்ணாடி மட்டும் உடைந்த நிலையில் இருந்துள்ளது. அதை நான் சரி செய்து கொடுத்துவிடுகிறேன் என்று மித்தில் தரப்பில் தெரிவித்துள்ளனர். 

ஆனால், இது எங்கள் ஆம்புலன்ஸ் இல்லை தேனாம்பேட்டை மருத்துவமனைக்குச் சொந்தமானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் கொண்டு செல்லப்பட்டது. 

அது எப்படி காரை மறந்துவிட்டுச் செல்ல முடியும் என்று போலீஸார் விசாரணை நடத்தியதில்தான் நள்ளிரவு குடிபோதையில் நடந்த குளறுபடிகள் தெரியவந்துள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால் மித்தில் தூங்கி எழுந்து ’தன் வீட்டு முன்பு ஏன் ஆம்புலன்ஸ் நிற்கிறது?’ என்று கேள்வியெழுப்பியது தான்!

-Vikatan

Post a Comment

0 Comments