நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகப்பூர்வமாக முன்வைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜயதாச ராஜபக்ஸ தொடர்பில் எழுந்த சர்ச்சைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு நேற்று பிரதமர் தலைமையில் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இந்த விடயத்திற்கான தீர்வை அறிவிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்றைய தினம் அவர் குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது உத்தியோகப்பூர்வமாக அவரை பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் ஐ.தே.கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு விரோதமாக கருத்து வெளியிட்டமை, மற்றும் ஊழல்கள் குறித்த விசாரணைகளை தாமதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments