Subscribe Us

header ads

உலகமே உச்சரிக்கும் பெயர் மலாலா எழுதிய டயரி (சுவாரஷயமான தொடர் 2) - Dilshan Mohamed


(சுவாரஷயமான தொடர் 1) : http://www.kalpitiyavoice.com/2017/08/dilshan-mohamed.html

14 JANUARY புதன்கிழமை – நான் மீண்டும் பாடசாலைக்கு போக மாட்டேன்
இன்று பாடசாலைக்கு போகும் போது எனக்கு கவலையாக இருந்தது. ஏனெனில் நாளை குளிர்கால விடுமுறை ஆரம்பிக்கவிருக்கிறது. எமது அதிபர் விடுமுறையை அறிவித்தார் ஆனால் பாடசாலை மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதை அவர் அறிவிக்கவில்லை. இப்படி அறிவிக்காமல் விட்டது இதுதான் முதன்முறை. 

முன்னரெல்லாம் எப்போது பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிவித்துவிடுவார்கள். மீண்டும் பாடசாலை ஆரம்பமாகும் திகதி பற்றி அறிவிக்காமல் இருப்பதற்குரிய காரணத்தை அதிபர் தெரிவிக்கவும் இல்லை. ஆனாலும் ஜனவரி 15 ஆம் திகதியின் பின்னர் பெண்கள் பாடசாலைகள் மூடப்படவேண்டும் என்று தாலிபான்கள் அறிவித்து இருப்பதே இதற்குரிய காரணம் என்று நான் நினைக்கிறேன்.


இந்த முறை மாணவிகள் எவருக்கும் விடுமுறை மகிழ்ச்சியாக இருக்கவில்லை. தாலிபான்களின் தடை உத்தரவினால் மீண்டும் நாம் பாடசாலைக்கு திரும்பமுடியாது என்பதே அதற்கு காரணமாகும். சில மாணவிகள் பெப்ரவரி மாதம் எப்படியும் பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பதில் நம்பிக்கையாக இருந்தார்கள். இன்னும் சில மாணவிகளின் பெற்றோர் சுவாத் மாகாணத்தில் இருந்து தங்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக வேறு மாநிலங்காளுக்கு இடம்பெயர்ந்து செல்வதற்கு தயாராக இருந்தார்கள்.

இன்றுதான் எங்களது பாடசாலையின் கடைசி நாள். அதனால் மைதானத்தில் வழமையை விட அதிகநேரம் விளையாடினோம். பாடசாலை மீண்டும் ஒருமுறை ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தாலும், ஒருவேளை மீண்டும் பாடசாலைக்கு வர கிடைக்காதவிடத்து என்று எண்ணி கடைசியாக ஒருமுறை எமது பாடசாலை கட்டிடங்களை பார்த்தேன்

JANUARY 15 வியாழக்கிழமை – இரவு முழுவதும் ஆட்டிலறி தாக்குதல்
அன்று இரவு முழுவதும் ஆட்டிலறி தாக்குதல் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்ததால் நான் மூன்று முறை நித்திரையில் இருந்து எழும்பினேன். என்றாலும் பாடசாலை இல்லையென்பதால் அன்று காலை பத்து மணிவரை படுத்திருந்தேன் . அதன் பின்னர் எனது நண்பிகள் சிலர் வந்திருந்தார்கள் அவர்களுடன் இணைந்து ஹோம்வேர்க் பண்ணினோம்.

இன்று ஜனவரி 15- தாலிபான்களின் தடை உத்தரவு ஆரம்பிக்க இருக்கும் இறுதி தினம். என்றாலும் நாம் எதுவுமே நடைபெறகூடாது என்கிற மாதிரி ஹோம்வேர்க் செய்துகொண்டு இருந்தோம்.

இன்று பிபிசி உருது சேவைக்காக எழுதிய டயரி குறிப்பு வெளியாகிய பத்திரிகையை வாசித்தேன். குல் மாக்கை என்ற எனது (புனை) பெயர் எமது உம்மாவுக்கு பிடித்து போனது. அவர் எனது தந்தையிடம் இவளுக்குரிய பெயரை குல் மாக்கை என்று மாற்றுவோமா என்று கேட்டார். எனது பெயரின் (மலாலா) அர்த்தம் “ கவலையான வலி “ என்று இருந்ததால் எனக்கும் குல் மாக்கை என்ற அந்த பெயர் பிடித்துத்தான் இருந்தது.

இந்த டயரி குறிப்பின் பத்திரிக்கை பிரதியை காட்டி மிக நன்றாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னதாக எனது தந்தை கூறினார். இதை எழுதியது எனது மகள் என்று நான் காட்டிக்கொள்ளவில்லை என்றும் ஒரு புன்னகையுடன் கடந்துவிட்டதாகவும் தந்தை சொன்னார்.

18 JANUARY வெள்ளிக்கிழமை – எந்தவொரு பொலிசாரும் காண்பதற்கு இல்லை

எங்கள் பாடசாலைக்குரிய பாதுகாப்பு அரசாங்கம் வழங்கும் என்று எனது தந்தை கூறினார். பிரதம மந்திரியும் இந்த விடயம் தொடர்பாக (பாராளுமன்றத்தில் ) பேசியிருந்தார். எனக்கு ஆரம்பத்தில் சந்தோசமாகவே இருந்தது ஆனாலும் இவை பிரச்சினைக்குரிய தீர்வாக இருக்காது என்று நினைத்தேன். இங்கு சுவாத் மாநிலத்தில் இன்ன இன்ன இடங்களில் ஒவ்வொரு நாளும் இத்தனை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள், இத்தனை இராணுவ வீரர்கள் கடத்தப்பட்டார்கள் என்ற செய்தியை தினம் தினம் கேட்கிறோம். ஆனாலும் எங்கேயும் போலீசார் இருந்ததை கண்டதில்லை.

எமது பெற்றோரும் பெரும் பயத்திலேயே இருந்தனர். தாலிபான்கள் (தமது) வானொலியில் பெண் பிள்ளைகள் மீண்டும் பாடசாலைக்கு போகலாம் என்று அறிவிக்கும் வரை உங்களை நாங்கள் பாடசாலைக்கு அனுப்புவது ஆபத்து என்று கூறினார்கள். இராணுவமும் எமது கல்வி நடவடிக்கைக்கு தடையாகவே இருக்கிறது.

இன்று எமக்கு பக்கத்தில் வசிக்கும் ஒரு சிறுவன் பாடசாலைக்கு போயிருக்கிறான். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படப்போகிறது என்று அதிபர் அவனை திருப்பி அனுப்பிவிட்டார். ஆனாலும் அவன் வீடு திரும்பிய போது எந்தவித ஊரடங்கு சட்டமும் அமுலில் இருக்கவில்லை. ஆனாலும் இராணுவம் பாடசாலைக்கு அருகாமையில் இருக்கும் ஒரு வீதி ஊடாக முன்னேறி இருந்தததால் பாடசாலை மூடப்பட்டது.

19 JANUARY திங்கட்கிழமை – பங்கருக்குள் இராணுவம்

ஐந்து பாடசாலைகள் சேதமடைந்து இருந்தன. அவற்றுள் எமது வீட்டுக்கு அருகில் இருக்கும் பாடசாலையும் ஒன்று. ஏற்கனவே இந்த பாடசாலைகள் மூடப்பட்டு இருக்கின்ற நிலையில் ஏன் பாடசாலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது என்று எனக்கு புதிராக இருந்தது.இத்தனைக்கும் தாலிபான்களின் தடை உத்தரவுக்கு பின்னால் யாரும் பாடசாலைக்கு செல்லவும் இல்லை.

இன்று நான் எனது நண்பி ஒருத்தியின் வீட்டுக்கு போயிருந்தேன். சில நாட்களுக்கு முன்னாள் மௌலானா சாஹ் தவ்ரானின் மாமாவை யாரோ கொலை செய்துவிட்டதாக அவள் கூறினாள். ஒருவேளை தாலிபான்கள் பாடசாலைக்கு சேத விளைவித்ததால் ஏற்பட்ட கோபமாகவும் இருக்கலாம் என்று அவள் கூறினாள்.

யாரும் தாலிபான்களுக்கு துன்பம் தருவது இல்லை. ஆனால் அவர்கள் பாதிக்கப்படும்போது அதனை பாடசாலைகளில் காட்டிவிடுகிறார்கள். இதற்கு எதிராக இராணுவம் எதுவும் செய்வதும் இல்லை. அவர்கள் மலைகளில் உள்ள பங்கர்களில் இருந்துகொண்டு ஆடுகளை அறுத்து சாப்பிட்டுக்கொண்டு சந்தோசமாக இருப்பார்கள்.


22 JANUARY வியாழக்கிழமை – மிகவும் ஆபத்தான தருணம்

பாடசாலை மூடப்பட்டு கிடந்தத்தால் வீட்டில் இருப்பதும் சோம்பலாக இருந்தது. நிலைமை மோசமடைவதால் எனது நண்பிகளில் சிலர் சுவாத் பகுதியை விட்டும் சென்றுவிட்டனர். நான் வீட்டில் இருந்து வெளியேறவில்லை. அன்று இரவு மௌலான சாஹ் தவ்றான் பெண்கள் யாரும் வேட்டை விட்டு வெளியேற கூடாது என்று அறிவிப்பை செய்தார்.

மேலும் எந்தவொரு பாடசாலையாவது பாதுகாப்பு அரணாக பாதுகாப்பு படைகளால் பாவிக்கப்பட்டால் அந்த பாடசாலைகளை நிர்மூலமாக்குவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

ஹாஜி பாபா பகுதியில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலைக்கு பாதுகாப்பு படைகள் வந்து இறங்கிருப்பதாக எனது தந்தை சொன்னார். அல்லாஹ்தான் அவற்றை பாதுகாக்கணும். நாளை மூன்று கள்வர்களுக்கு கசையடி கொடுக்கபோவாதாகவும் விரும்பியோர் வந்து பார்வையிடலாம் என்றும் மௌலானா சாஹ் தவ்றான் வானொலியில் அறிவித்தார்.

நாங்களே இங்கு பாதிக்கப்பட்டு இருக்கும் போது ஏன் மக்கள் இவற்றை பார்வையிட போகிறார்கள் என்பாத்து எனக்கு புதினமாக இருந்தது. இராணுவம் இவ்வாறான நடவடிக்கைகளை ஏன் தடுப்பதில்லை என்றும் ஆச்சரியமாக இருந்தது. எங்கயாச்சும் ஒரு இராணுவ வீரன் நிற்கும் போது வழமையாக ஒரு தலிபான் உறுப்பினரும் பக்கத்தில் நிற்பதை நான் கண்டிருக்கிறேன். ஆனாலும் தாலிபான் உறுப்பினர் நிற்கும் இடத்தில் இராணுவம் வழமையாக போவது கிடையாது.

24 JANUARY சனிக்கிழமை – கௌரவ அறிவிப்பு பலகையில் பெயர் இல்லை

வழமையாக எமக்குரிய பரீட்சைகள் விடுமுறை முடிந்ததும் ஆரம்பிக்கும். ஆனால் இந்தமுறை தாலிபான்கள் பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதித்தால்தான் பரீட்சை சாத்தியமாகும். எதற்கும் சில பாடங்களுக்கு தயாராகுமாறு எங்களுக்கு சொல்லப்பட்டது என்றாலும் எனக்கு படிக்க ஆர்வமிருக்கவில்லை.
நெற்றில் இருந்து கல்வி நிறுவனங்களுக்குரிய பாதுகாப்பை இராணுவம் கையில் எடுத்திருந்தது. பல பாடசாலைகள் சேதமாக்கப்பட்டு, இன்னும் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்ட பின்னரே இவற்றின் பாதுகாப்பு பற்றி இராணுவம் சிந்தித்து இருக்கிறது. இவர்கள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை இங்கு ஏற்பட்டிருக்காது.
எந்த பாடசாலையில் இராணுவம் இருக்கிறதோ அந்த பாடசாலை தாக்குதலுக்கு உள்ளாகும் என்று முஸ்லிம்கான் ( தாலிபான் பேச்சாளர்) அறிவித்தார். பாடசாலைக்குள் இராணுவ பாதுகாப்பு இருப்பது எமக்கு முன் எப்போதும் இல்லாதவாறு பயமாக இருந்தது. எமது ஒரு பாடசாலையில் ஒரு அறிவிப்பு பலகை இருக்கும் அதன் பெயர் கௌரவ அறிவிப்பு பலகை. ஆண்டு இறுதி பரீட்சையில் அதிக மார்க் வாங்கும் மாணவிகளின் பெயர் அதில் பொறிக்கப்படும். இந்த வருடம் எந்தவொரு மாணவியின் பெயரும் அந்த பலகையில் இருக்காது.
(தொடரும் )
மொழி பெயர்ப்பு - தில்ஷான் முஹம்மத்

Post a Comment

0 Comments