அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலாவுக்கு சென்றபோது அங்குள்ள மண், கல் துகள்களை சேகரிக்க பயன்படுத்திய பை 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பு 26 கோடி ரூபா) அளவுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருப்பது, நிலாவில் மனிதர்களை களமிறக்கியது தான். 1969 ஆ-ம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அப்பலோ 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் ஒல்ட்ரின் ஆகிய இருவரை நிலாவுக்கு அனுப்பி வைத்தது.
நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அப்பலோ விண்கலத்திலிருந்து, நிலாவில் முதலில் கால்வைத்த நீல் ஆம்ஸ்ட்ரோங் தனது பெயரை வரலாற்றில் பொறித்துக்கொண்டார்.
அங்குள்ள மண், கல் துகள்கள் ஆகியவற்றை ஒரு பையில் எடுத்துக்கொண்டு இருவரும் பூமிக்கு திரும்பினர்.
பூமிக்கு விண்கலம் வந்ததும் அதிலுள்ள பொருட்கள் அனைத் தும் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், நிலாவின் மண், கல்களை சுமந்த அந்த பை பலரது கைகளுக்கு மாறி நியூயோர்க்கில் உள்ள தனியார் நிறுவனத்தின் வசம் வந்தது.
இந்நிலையில், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பையானது நேற்று ஏலம் விடப்பட்டது. பெயர் வெளியே தெரியாத நபர் ஒருவர் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் ஏலத்திற்கு பையை எடுத்துள்ளார்.
அந்த பையில் இன்னும் மண் துகள்கள் இருந்ததற்கான அடை யாளங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


0 Comments