அன்புள்ள பெற்றோர்களே! உங்கள் மகள்மார் சிறுமியாக இருப்பினும் ஒரு குறித்த வயதினை அடைந்து விட்டால் அவர்களுடைய போட்டோக்களினை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

கடலிலும், குளங்களிலும் நீராடிவிட்டு வருகின்ற உங்கள் அப்பாவி சிறுமிகளை/சிறுமிகளுடன் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் சந்தோசத்திற்காக பகிர்ந்து கொள்கின்றீர்கள். ஆனால் அவ்வகையான போட்டோக்களில் விழுகின்ற ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமானது என்பதை உணர மறந்துவிடுகின்றீர்கள்.


நாம் போதைக்கும், ஆபாசப் படங்களுக்கும் அடிமையாகிய மனித மிருகங்கள் வாழும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நீங்கள் யோசிக்காமல் பதிவிடுகின்ற இவ்வகையான போட்டோக்கள் உங்கள் பிள்ளைகளுக்கே விணையாக வந்து முடியலாம்.

உங்கள் பிள்ளைகளின் விருப்பங்கள், பொழுதுபோக்குகள் என்பவற்றினை தொடர்ச்சியாக பதிவிடுவதிலிருந்து தவிர்ந்திருங்கள். ஏனெனில் இதன்மூலம் நீங்கள் யாரோ ஒருவருக்கு மறைமுகமாக தகவல் கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். அவற்றினை அறிந்து கொண்ட ஒருவரினால் உங்கள் பிள்ளைகளுடன் இலகுவாக நெருங்கிப் பழகிட முடியும்.


மேலும் "எனது மகள் இத்தனையாம் வகுப்பில், இந்த டியூசனில், இத்தனை புள்ளிகளை எடுத்திருக்கின்றாள்" போன்ற பகிர்வதற்கு முக்கியமற்ற உங்கள் பிள்ளைகளின் அடைவுகளை தொடர்ச்சியாக பதிவிடாதீர்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளினை பகிரங்கப்படுத்துகின்றீர்கள் என்பதை உணருங்கள். இதனை வைத்துக் கொண்டு யாரோ ஒருவர் உங்கள் பிள்ளைகளினை ஏதோவொன்றுக்காக பின்தொடர வாய்ப்பிருக்கின்றது.

இப்படியெல்லாம் நடக்கலாமா என்று நீங்களும், நானும் ஒரு காலத்தில் ஆச்சரியப்பட்ட அனைத்து விடயங்களும் அன்றாடம் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. எமது பிள்ளைச் செல்வங்களை பாதுகாப்பது எமது பொறுப்புக்களில் மிகப் பெரியதும், கடினமானதுமான பொறுப்பாக இன்று மாறியிருக்கின்றது.

ஷியான் யாக்கூப்,
மருத்துவ பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.


madawala news