Subscribe Us

கற்பிட்டிக் குடாவின் தலை - கற்பிட்டி பட்டிணம்

கொழும்பு – புத்தளம் பாதையில் புத்தளத்திலிருந்து 2 கி.மீ. துரத்தில் உள்ள பாலாவி சந்தியிலிருந்து ஆரம்பமாகும் 40 கி.மீ. நீளமான கற்பிட்டி பாதை பாலாவி, உப்பளம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் கரம்பை மத்திய அலை ஒலிபரப்பு நிலையம், நுரைச்சோலை அனல் மின் நிலையம், விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை கடந்து பல கிராமங்களினுடே சென்று கற்பிட்டி பேருந்து நிலையத்தில் முடிவடையும். 40 கி.மீ. நீளம் கொண்ட கற்பிட்டிக் குடாவின் அந்தத்தில் தலை போன்று அமைந்திருக்கும் கற்பிட்டி பட்டிணம் உண்மையில் இக்குடாவின் தலையாகவே திகழ்கின்றது.

நில தோற்றத்தில் மட்டுமல்லாது கல்வி, சமயம் , கலாச்சாரம், பண்பாடு, அரசியல், பொருளாதார என பல துறைகளிலும் தலையாகவே திகழ்ந்தது. இவ்வாறு கம்பீரமாக இருந்து வந்த எமது கற்பிட்டி சமகாலத்தில் சகல துறைகளிலும் ஒரு சறுக்கலை சந்தித்து வருகிறது என்றால் அதற்க்கு நிச்சயம் மாற்றுக்கருத்துக்கள் இருக்காது.

பாலாவி சந்தியிலிருந்து ஆரம்பமாகி கற்பிட்டி வரைக்கும் உள்ள இந்த 40 கி.மீ இடைவெளியில் இருக்கின்ற பல கிராமங்களும், குக்கிராமங்களும் வளர்ச்சி அடைந்து வரும் வேலையில் எமது ஊர் மட்டும் பின்னடைவை எதிர்கொள்வதை நாம் நிச்சயம் ஆய்வு செய்து பார்க்கவே வேண்டும்.

கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 31 கிராம சேவகர் பிரிவில் 8 கிராம சேவகர் பிரிவைக் கொண்ட ஊரே அல்லது நகரமே கற்பிட்டி. வளப் பங்கீடுகளும் , ஆளணி பங்கிடுகளும் சமமாக பகிரப்பட்டு வந்த போதிலும் கற்பிட்டி நகர மத்தியில் வளர்ச்சியில் ஒரு தேக்க நிலை அல்லது மந்த நிலை காணப்படுகிறது. மாம்ப்புரி, நுரைச்சோலை, பாலகுடா மற்றும் சிறு கிராமங்களுடன் ஒப்பீடு செய்யும் போது இது நன்றாகவே உணரப் படுகிறது.

இதற்கான காரணங்களை தேடிப் பார்க்கின்ற போது சில முக்கிய இடங்களில் நிலவுகின்ற நீண்ட கால (தலைமைப் பதவி) வெற்றிடங்கள். மனித, பௌதீக வளங்களை சரியான முறையில் பயன்படுத்த தெரியாதவர்களாக இருக்கும் அப்பாவி பொதுமக்கள். பொதுநலம் கொண்டவர்களை அடக்கி ஆழ நினைக்கும் சில சுயநல தீய சக்திகள். சமூக விவகாரங்களில் மூக்கை நுழைக்க தயங்கும் கல்விமான்கள். திரைமறைவில் இயங்க விரும்பும் தகைமை உடையவர்கள் என பட்டியலிடலாம்.

நீண்ட கால (தலைமைப் பதவி) வெற்றிடங்கள்; இங்கு பாடசாலைகள், அரபு மதுரசாக்கள், பள்ளிவாயல்கள், அதிகாரமிக்க அரசியல்வாதிகள், வர்த்தக சங்கங்கள் போன்ற பல பொது நிருவாக அலகுகளுக்கு ஆளுமை உள்ள தலைமைகள் எமது ஊரைப் பொறுத்த மட்டில் குறைவு... மொத்தமாக இல்லை என்றும் சொல்ல முடியாது. ஒரு சிலர் தம்மால் முடிந்ததை அல்லாஹ்வின் உதவியோடு செய்து கொண்டு செல்கிறார்கள். இவ்வாறான பொது நிருவாக அலகுகளுக்கு சரியான தலைமைகளும் தொண்டர்களும் / உறுப்பினர்களும் வந்தால் மேல சொன்ன ஏனைய குறைபாடுகளை இலகுவில் நிவர்த்தி செய்து செழிப்பான கற்பிட்டியை உருவாக்க முடியும்.

இங்கு தலைமைத்துவம் என்பதன் மூலம் கருதப் படுவது என்ன என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும், தலைமைத்துவம் என்றால் என்ன?
தலைமைத்துவம் என்பது, “வற்புறுத்தல், வலுக்கட்டாயமில்லாத வழிமுறைகளினூடாக மக்களைச் செயற்பட ஊக்குவிப்பதன் மூலம் ஒரு திட்டமிட்ட திசையில் நகர்த்திச் செல்லும் செயன்முறையாகும். அத்திசை நீண்ட கால குறிக்கோளை நோக்கியதாகவோ அல்லது குறுகிய கால குறிக்கோளை நோக்கியதாகவோ அமையலாம்.”
ஒரு குழுவின் தலைவர் என்பவர், ஒரு குறித்த அந்தஸ்து வழங்கப்பட்டு, அதற்குப் பொருத்தமான முறையில் செயற்படவேண்டும் என எதிர்பார்க்கப்படும் அங்கத்தவராவார். அத்தோடு, தமது குழுவின் இலக்குகளை அமைப்பதிலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதிலும் செல்வாக்குச் செலுத்த வேண்டிய ஒருவராகவும் இருக்கிறார்.

இவ்வாறு ஒரு குடும்பம், ஒரு குழுமம், ஒரு கிராமம், ஒரு ஊர் என ஒரு சமூகம் கூட்டுத் தலைமைத்துவப் பண்புகளை பெற்றிருக்கின்ற பொழுது அந்த ஒவ்வொரு நிருவாக அலகும் தத்தமக்குரிய வேலைதிடங்களை திட்டமிட்டு, ஒழுங்கமைத்து வெற்றிகரமாக செயற்படுத்த முடியும். இவ்வாறு கட்டமைக்கப்பட்ட ஒரு தலைமைத்துவத்தின் கீழ் முழு ஊரும் / முழு சமூகமும் வரும் போது “கல்வி, சமயம் , கலாச்சாரம், பண்பாடு, அரசியல், பொருளாதார என பல துறைகளிலும் எழுச்சிகண்ட ஒருமுகப்படுத்தப்பட்ட மக்கள் சக்தியினை / ஒரு ஊரினை உருவாக்க முடியும்.

இந்த அடிப்படையில் இஸ்லாமிய நெறிமுறைக்குட்பட்ட பொது அமைப்பினதும் ஊரை வழி நடத்தக்கூடிய தலைமைத்துவத்தினதும் அவசியம் உணரப்படுகிறது. அந்தவையில் கற்பிட்டியில் உள்ள சகல மஹல்லாக்களையும் இணைத்து, சகல தரப்பினரும் உள்வாங்கப்பட்டு ஒரு “ஷூரா சபையினை” (ஆலோசனை சபை ) பள்ளி வாசல் நிர்வாகங்களுக்கு புறம்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். கற்பிட்டியில் உள்ள உலமாக்கள், படித்தவர்கள், புத்திஜீவிகள், இளைஞர், வியாபாரிகள், மீனவர்கள் பிரதி நிதிகள், ஆட்டோ சங்க , ஏனைய தொழில் சார் அமைப்பின் பிரதிநிதிகள், மாதர் பிரதி நிதிகள் , அரசியல், சமய இயக்கப் பிரதி நிதிகள் என சகல தரப் புகளையும் கொண்ட நிரந்தரமான ஆலோசன சபை நாம் அமைத்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் மிகச் சரியாக , ஆழமாக ஆராயப் பட்ட தீர்வுகளை, வழிகாட்டல்களை வழங்க கூடிய சரியான தலைமைத் துவத்தை எமது ஊர் பெற்றுக்கொள்ளும்.

கற்பிட்டியை பொறுத்தவரையில் இஸ்லாமிய நெறிமுறைக்குட்பட்ட புதிய ஒரு தலைமைத்துவ கட்டமைப்புனை வேண்டி நிற்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த அசம்பாவித சம்பவம் எடுத்து காட்டுகிறது. இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையிலும் ஒன்றுபட முடியாத நிலைமையில் எமது ஊரின் அரசியல் தலைமைகள் இருந்து கொண்டு எல்லோரும் தனித்தனியாகவே நின்றுகொண்டு ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். சகல தரப்பினரையும் இணைத்து ஒருமுகப்படுத்தி பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதனை செய்ய எமது ஊருக்கு மேல கூறிய “ஷூரா சபை” (ஆலோசனை சபை) கட்டாய தேவையாக உள்ளது.

இந்த “ஷூரா சபை” (ஆலோசனை சபை) உதகுமாகுமானால், அதனை சமூக உணர்வோடு இஸ்லாமிய நெறிமுறைக்குட்டு சரியான முறையில் திட்டமிட்டு வழிநடத்தினால் இன்று கற்பிட்டியில் இருக்கும் பல பொது அலகுகளில் இருக்கும் நிருவாக சீர்கேடுகளை, தலைமைத்துவ வெற்றிடகளை நிவர்த்தி செய்யலாம். உரியவர்களை உரிய இடத்தில வைத்து இந்த “ஷூரா சபை” யின் நெறிபடுத்தலின் கீழ் வைத்து நிருவகிக்க முடியும். அது மாத்திரம் இன்றி பிற மத மக்களுடனும் சரியான உறவுமுறைகளை பேணமுடியும்.

உளத்தூய்மையோடு அல்லாஹ்வுக்காக எந்த பிரபலங்களும், புகழ்ச்சிகளும் எதிர்பார்க்காமல் கற்பிட்டியில் உள்ள தனி நபர்களும் அமைப்புகளும் அல்லது இயக்கங்களும் இவாறான ஒரு கூட்டு முயற்ச்சியை மேற்கொள்ள முன்வர வேண்டும். முன்வருபவர்கள் தத்தமது அடையாளத்தை செல்வாக்கை அல்லது நிகழ்ச்சி நிரலை அரசியலை முன்னிலைப்படுத்தாது உளத்தூய்மையோடு சமூக எழுச்சிக்காக செயற்பட வேண்டும்...

இதனை செய்து வெற்றி கொண்டால் இன்ஷாஅல்லாஹ் கற்பிட்டிக் குடாவின் தலையாக கற்பிட்டி என்றும் இருக்கும்...

Samsham Shafeek
 

Post a Comment

0 Comments