நடந்து முடிந்த 05ம் ஆண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சை, சில பாடசாலைகளில் குளறுபடிகளை ஏற்படுத்தி மாணவ செல்வங்களின் மனநிலையை பாதித்திருப்பது கவலையளிக்கின்றது. அந்த மாணவர்கள் வகுப்பில் சரியான முறையில் எழுத தெரியாதவர்கள் என்ற காரணத்திற்காக பரீட்சையை எழுத விடாமல் அவர்களின் உள்ளத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் இருட்டறைக்குள் இட்டுச்செல்ல இந்த ஆசிரியர்களிற்கு ஏன் இப்படி ஒரு மனம்!
பாடசாலை ஆசிரியர்கள் என்றால் யார்? அவர்களின் பணி எவ்வாறானது என்று தெரிந்தவர்களா இவ்வாறு செய்தார்கள்? பத்துப்பதினொறு வயது கொண்ட உள்ளங்கள் ஏட்டுக்கல்வியை மட்டுமே அறிந்தவர்களாக, எத்தனையோ விடயங்கள் தமக்கு பிடித்திருந்தும் அவற்றை வீட்டிலேயே விட்டுவிட்டு தினமும் பாடசாலை நோக்கி வருகிறார்கள். பெற்றோர்கள் செய்யும் கடமையை விட பல படிகள் மேலே செய்யவேண்டியதும், வழிநடத்த வேண்டிய பொறுப்புகளுமே ஒவ்வொரு ஆசிரியர்களிற்கும் இருக்கின் றன.
கோபத்துடனும், சகிப்புத்தன்மை இன்றியும் கற்பிப்பது என்பது மாணவர்களிற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. அவர்களை தேற்றி உற்சாகம் கொடுக்க வேண்டியவர்கள் ஆசிரியர்களே.
நமது நாட்டின் கல்வித்துறை ஏட்டுக்கல்வியிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது பல மாணவர்களின் எதிர்கால வாழ்வியலிற்கு பெரிய ஒரு கரும்புள்ளி என்பது நாம் அறிந்த உண்மையே. அனுபவம்/ துறைசார் கல்வியையும் நமது மாணவர்கள் வேண்டி நிற்பதுதான் நாம் தினமும் காணும் நிதர்சனமான உண்மை. மாணவர்கள் எவ்வாறான விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்துகின்றார்கள், அது சரியா/ தவறா, அவர்கள் ஏங்கி நிற்கும் வழிகாட்டல்களையும், உற்சாகத்தை யும் நாம் வழங்கினோமா என்று நமது ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும். இது பின் தங்கிய மாவட்டம் / கிராமம் என்று வரும் போது கவலையளிக்கிறது. மாணவர்கள் வேறு துறைகளிலும் திறமையானவர்களாக இருந்தால் அத்துறை நமது வரையறைக்கு உற்பட்டதாக இருக்குமாயின் கல்வியில் மட்டுமல்லாது 100% விகித ஒத்துழைப்பை அவர்கள் விரும்பும் துறைசார் விடயங்களிலும் வழங்க வேண்டும். உலகமயமாதலின் விளைவு பல்வேறு பட்ட புதிய துறைகளையும்/ வேலைவாய்ப்புகளையும் உலகிற்கு தினமும் தந்த வண்ணமே இருக்கின்றது. இதை அறிந்து முறையாக மாணவர்களை வழிநடத்துவது காலத்தின் தேவையாகும்.
கற்பிப்பதில் மட்டுமே நாம் அனுபவம் கண்டுள்ளோம் என்று செல்பவர்களாக நீங்கள் இருப்பீர்களாயின், அந்த அனுபவத்திலும் கூட நீங்கள் கண்ட எத்தனையோ மாணவர்கள் இன்று வேறு துறைகளில் சாதிப்பவர்களாக அல்லது ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள் என்றால், அவர்களின் நடத்தையில் நீங்கள் பெற்ற அனுபவம் இன்றைய மாணவர்களிற்கு பெரிதும் உதவும், வழிகாட்டுங்கள், அது உங்கள் ஆசிரிய தொழிலில் ஓர் அனுபவ முதிர்ச்சியை தரும் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்து பெற்றோர்கள் பிள்ளை வளர்ப்பில் விடும் கவனக்குறைவுகள் ஏராளம். தமது நேரங்களை வீணான விடயங்களில் செலவழிக்காமல் குழந்தைகளுடன் செலவழியுங்கள். அவர்களின் தேவைகளிலும், முயற்சிகளிலும் நேர்த்தியாக வழிநடத்துங்கள். நமது ஒத்துழைப்பு இல்லாமல், குழந்தை சுயமாக கற்றுக்கொள்ள வேண்டும், உலகத்தை ஆழ வேண்டும் என்ற எண்ணங்கள் வெறும் பகல் கனவே.
சிறந்த ஆளுமை கொண்ட மனிதர்களாக உலா வருவதற்கு வழங்கப்பட வேண்டிய உந்துதல்களும், வழிகாட்டல்களும் பெற்றோர்களாகிய உங்களில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.


0 Comments