Subscribe Us

header ads

புத்தளம் என்ன குப்பை தொட்டியா குப்பைகளை கொட்டுவதற்கு (அருவைக்காடு)


சுமார் கால் நூற்றாண்டாக புத்தளத்திற்கு ஒரு எம்.பி இல்லை, கேட்க பார்க்க ஆளில்லை என்ற காரணத்தினால் கண்டவரெல்லாம் தாங்கள் நினைத்ததை இங்கு செய்துவிட்டுப் போகிறார்கள் ஆகவே எமக்கு வாக்களியுங்கள்,  எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம்; என்ற ஆர்பரிப்போடு PPAF(புத்தளம் அரசியல் விழிப்புணர்வு அவயம்) என்ற அமைப்பு உணர்ச்சி வசப்படும் இளயவர்களையும், சுமாரான அரசியல் அறிவுடையோரையும் தம்பக்கம் இழுத்துக் கொண்டு கடந்த பொதுத் தேர்தலில் களத்தில் இறங்கியது.
புத்தளம் பிரதேச மக்களின், புத்தளம் தேர்தல் தொகுதியின் அல்லது ஆகக் குறைந்தது புத்தளம் நகரின் பிரச்சினைகளைவிட புத்தளம் பிரதேசத்தில் காணப்பட்ட அசாதாரண நிலைமையை பயன்படுத்தி பாரளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றின் மூலம் சுயலாபமடையும் வேலைதிட்டம் தவிர இவர்களின் களமிறங்களில் மதிமயங்க ஒன்றுமில்லை என்பது அன்று வெளிச்சமாகியது. அதை நாம் சொன்னபோது அது பலரிடையே நம் மீதான கோபமாக வெளிப்பட்டது. PPA யின் பொது தேர்தல் தோல்வியின் பின் உண்மையில் அவர்களுக்கு புத்தளம் மக்களின் மீது, பிரதேசத்தின் மீது அக்கறை இருக்குமானால், புத்தளம் பிரதேச மக்கள் எதிர்நோக்கும்  பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணும் முகமாக ஒரு அழுத்தக் குழு (Pressure Group) வாக அவர்கள் செயற்படுவதற்கான தேவையையும் ஒரு ஆலோசனையாக குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இப்போது அந்த PPA களத்தில் இல்லை போல் தெரிகிறது. தமது பெட்டி படுக்கைகளை எல்லாம் கட்டிக் கொண்டு  எங்கோ போய்விட்டார்கள் போலும்.
தற்போது புத்தளத்துக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்று கிடைத்துள்ளது, ஆனால் PPA சொன்னது போல் கண்டவரெல்லாம் தாங்கள் நினைத்ததை புத்தளத்தில் செய்துவிட்டுப் போகும்  நிலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதில் இப்போதய விடயம்தான் “கொழும்பு குப்பைகள்”. அந்த குப்பைகள் புத்தளத்தில் நிரந்தரமாக கொட்டப்படுவதற்கான முஸ்தீவுகள்.
இந்த குப்பை கொட்டும் திட்டத்திற்கான அராசாங்க ஏற்பாடாக புத்தளத்தில் உள்ள அறுவைக்காடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் சீமெந்து தொழிற்சாலயின் உற்பத்திக்காக தேவைப்படும் “சுண்ணக்கல் படிமங்கள்” இந்த அறுவைக்காட்டிலேயே கடந்த சுமார் 45(?) ஆண்டுகளாக அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அகழ்வினால் அப்பிரதேசத்தில் பாரிய பள்ளங்கள்  ஏற்பட்டுள்ளன. கொழும்பில் உருவாக்கப்பட்டு மலை, மலையாக குவிந்துவரும் “குப்பை” பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வழி (தெரிந்திருந்தும்) தெரியாமல், வழியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த பாரிய பள்ளங்களைப் பயன்படுத்தி குப்பைகளை வெறுமனே இடமாற்றுவதே இந்தத் திட்டம். இதற்கான பூர்வாங்க திட்டவரைவு முடிந்து, இந்த குப்பைகளை கொழும்பில் இருந்து புத்தளத்துக்கு கொண்டுவர கொழும்பு-புத்தளம் புகையிரத பாதை பயன்படுத்துவதற்கான இணக்கம் காணப்பட்டு, இந்த குப்பைகளை கொண்டுவருவதற்கான விஷேட கொள்கலன்களின் இறக்குமதிக்கான  ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து விட்டதாகவும் அறியக்கிடக்கின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் புத்தளம் பாராளுமன்ற பிரதிநிதி இது தொடர்பாக இதுவரை என்ன செய்துள்ளார் என்பதற்கு ஒன்றுமில்லை என்ற பதில் மிகப் பொருத்தமானது என நினைக்கின்றேன். ஆகவே அ.இ.ம.கா சின் தேசிய தலைவர் ரீசாட் பதியுத்தீனுக்கு இப்பிரச்சினை தொடர்பான பொறுப்பு இப்போது அதிகம் உள்ளது. அதை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டிய பொறுப்பு அ.இ.ம.கா புத்தளம் அமைப்பாளர் அலி சப்ரிக்கு  இப்போது இருக்கின்றது. அவருக்கு இது தொடபான தொடர் அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பு புத்தளம் மக்களுக்கு இருகின்றது. மக்களுடன் மக்களாக சேர்ந்து செயல்படும் தார்மீக கடமை அனைத்து பள்ளிவாயல், கோயில், விகாரை, தேவாலய நிருவாகங்களுக்கும், பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள், தொழில்சார் அமைப்புக்கள், சமய நிறுவனங்கள், பெண்கள் அமைப்புக்கள் என்று அனைத்துக்கும் இதில் பாரிய பங்குண்டு. ஆனால் இது எதுவும் “குப்பை கொட்டும்” திட்டம் முன்னேறும் அளவுக்கு நடை பெறுவதாகத் தெரியவில்லை, சில இளைஞர் குழுக்களின் விழிப்புணர்வு வேலைதிட்டம் தவிர -இளைஞ்சர் குழுக்கள் மேலுள்ள அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தும் வேலைதிட்டம் பற்றி சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கடந்த ரமலான் மாதத்தின் இறுதி பகுதியில் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் கலந்துடையாடல் ஒன்று நடைபெறுவதாகவும், அதில் மக்கள் விடுதலை முன்னணியின்(JVP)  லால் காந்தா முக்கிய பிரமுகராக கலந்துகொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்வத்துடன் சென்று பார்த்த போது அதிர்சியே காத்திருந்தது. திரு. லால் காந்தா, படப்பிடிப்பாளர் உட்பட நான்கு ம.வி.மு பிரமுகர்கள், மூன்று சிங்கள பொதுமக்கள்,  பெரிய பள்ளி பிரமுகர் ஒருவர், துறைசார் அனுபமிக்க ஒருவர்(ஓய்வு பெற்ற ஆசிரியர் முபாரக்), நிகழ்வுக்கான மொழிபெயர்ப்பாளர்( ஹிஸாம் ஹுசன்), என்னுடன் சேர்த்து இன்னும் நான்கு பொதுமக்கள், மொத்மாக 14 பேர். பாரிய எதிர்கால பிரச்சினை ஒன்று தொடர்பாக புத்தள மக்களின் தெளிவும், பங்குபற்றுகையும் மிகத் தெளிவாக உறுதி செய்யப்பட்ட நிகழ்வாகவே அதை கருத வேண்டும்.
லால் காந்தா தன் கட்சி கண்னோட்டத்தில் இப்பிரச்சினை பற்றி அறிமுக உரை நிகழ்த்திய பின் இந்த குப்பை பிரசினையை எப்படி முகம் கொள்வது என்ற கலந்துரையாடலில் ஆலோசனை, கருத்துப்பரிமாறல் என்ற விடயங்களுக்கு இடமில்லாதவகையில் ஆசிரியர் முபாரக் அவர்கள் தன் கடந்தகால அனுபவத்தையே முதன்மை படுத்தினார். அதாவது புத்தளம் நுரைச்சோலை அனல்மின்சார நிலையம் தொடர்பான விடயங்களைக் கூறி, அது எப்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, அதாவது இத்திட்டத்தை மூர்க்கமாக எதிர்த்த புத்தளம் அரசியல்வாதிகள் எவ்வாறு சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள், அங்கு எவ்வளவு தொகை பணம் கைமாற்றப்பட்டது என்ற விடயங்களை ஞாபக மூட்டி, இந்த “குப்பை” பிரச்சினையில் அப்படியான விடயங்கள் குறுக்கிடாமல் இருக்கவும், அதே நேரத்தில் என்ன விடயமாக இருப்பினும் ஒன்றில் லஞ்சம் வாங்குவது அல்லது கொடுப்பது என்ற நிலையில் காரியமாற்றிய ராஜபக்ச அரசாங்கம் இப்போது இல்லை என்பதால் இந்த “குப்பை” எதிர்ப்பு போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இழக்க முடியாது என்றார். ஆகவே அரசாங்கத்தின் முன்னெடுப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான எல்லா ஏற்பாடுளும் செய்யப்பட்டுள்ளதாகவவும்,  வழக்காளிகளாக சில பொதுமக்கள் முன் வந்தால் போதுமானது என்றும். இந்த வழக்காடலுக்கும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களுக்குமான நிதியை அரச சார்பற்ற நிறுவனம்(NGO) ஒன்றின் மூலம் பெறலாம் என்றும் கூறினார்.
மொழிப்பெயர்ப்பாளர் தன் கருத்தாக  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் தேர்தல் மாவட்டத்தில் புத்தளம் தேர்தல் தொகுதியில் மாத்திரம்தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிக மக்கள் வாக்களித்ததாகவும் ஆகவே வாக்களித்த மக்களுக்கே இந்த பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் கடப்பாடு உள்ளதாகவும் கூறினார். இவரின் கருத்து எந்தளவு சாத்தியமானது என்பது சம்பந்தமாக ஆராய்வது நேர விரயமே. ஆகவே இந்த குப்பை கொட்டும் விடயத்துக்கெதிராக ஆசிரியர் முபாரக் அவர்களின் வழக்காடல்(litigation) சம்பந்தமாக சற்று பார்ப்பது பொருத்தமாகும்.
முபாரக் ஆசிரியர் பங்குகொண்ட முன்னைய திட்டங்களில் ஒன்றான “நீர் வழங்கல்” அரச சார்பற்ற அமைப்பொன்றினால் நடைமுறைபடுத்தப்படுத்தப்பட்ட போது அதன் திட்ட முகாமையாளராக(?) கடமையாற்றிய அவரும் அவரின் கீழ் கடமையாற்றிய அவர் குடும்பதின் இரண்டு முக்கிய நபர்களுமே பொருளாதார ரீதியில் அதிகம் பயனடைந்தாக ஒரு குற்றச்சாட்டும் காணப்படுகின்றது.  வருங்காலத்தில் இப்படியான தவறுகள் நடைபெறாது காரியங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கையோடு இப்போது நம் முனுள்ள விடயத்தை அணுகுவது அவசியமாகும்.
அறுவைக்காட்டில் கொழும்பு குப்பை கொட்டப்படுவதற்கு இங்கு காணப்படும் பாரிய பள்ளங்கள் மேல் கொங்க்ரீட்(concreet) தரை அமைப்பப்பட்டு ஒருவகை நிலக்கீழ் அறைபோன்ற அமைப்பில் கட்டப்படும் அறைகளில்(Chambers) பாதுகாப்பாக இந்த குப்பைகள்  வைக்கப்படுமாம். இப்படி பாதுகாக்கப்படுவதால் அப்பிரதேசத்தின் சூழல் சுற்றாடலுக்கு நீண்டகாலத்தில் பாதிப்பு ஏற்படாது என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளதாம். இதற்கு ஆதரவாக  சூழல் பாதிப்பு அளவீட்டு அறிக்கை (Enviornmental Impact Assessment Report) பெறப்பட்டு அது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் லால் காந்தா அவர்களின் கூற்றுப்படி அப்படி ஒன்றும் நடை பெறவில்லை என்றும், அப்படியே அது நடந்திருந்தாலும் அது பொதுமக்கள் விளங்கிக்கொள்ளும் அளவு  அந்த அறிக்கை இலகுபடுத்தப்பட்டிருக்கும் என்பது சந்தேகமே என்றார்.
இந்த குப்பையால் புத்தளம் சூழல் சுற்றாடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நப்புபவர்கள் கூறுவதாவது; இந்த கொங்க்ரீட் தரை அமைப்பு மூன்று தொனை மரதின் உயரத்தை ஒத்த ஆழத்தில் போடப்படுவதாகவும், இந்த கொங்கிரீட்டின் பருமன்(thickness) மிக அடர்த்தியானது என்றும் ஆகவே குப்பைகள் நெடுங்காலம் சேமித்துவைக்கப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றத்தில் இருந்து கசிவுகள் ஏதும் தரைக்கு கீழ் செல்லாது என்றும் கூறுகிறார்கள். இதில் இரண்டு பிரச்சினை உள்ளதாக தெரிகின்றது.  ஒன்று இவர்கள் சொல்வது போன்று கசிவுக்கும் அது நிலத்தடி நீருடன் கலக்கும் வாய்ப்பும் இல்லை என்றால் அதில் யாருக்கும் பிரசினையில்லை. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக அல்லது எதிர்பார்க்காத காரணத்தினால் அந்த ஆழத்தின் அடியிலோ அல்லது பக்க சுவர்களிலோ வெடிப்பு ஏற்பட்டு அதன் மூலம் கசிவு ஏற்படால் என்ற வினாவுக்கு அவர்களிடம் பதில் இல்லை. ஆகவே சந்தேகமான விடயம் சூழல் சுற்றாடலை பாதிக்கும், அது மக்களின் அப்பிரதேசத்தில் உள்ள மக்களுடன் அனைத்து ஜீவராசிகளையும் பாதிக்கும் என்ற ரீதியில் இந்த உத்தரவாதம் ஏற்றுக் கொள்ளமுடியாதது.  இரண்டாவது  அறுவைக்காட்டு சுண்ணக்கல் அகழ்வு தரையை (ஒருவகை குண்டுகளால்) வெடிக்க பண்ணியே நடைபெறுகிறது. ஆகவே அது தரையின் அடிப்பகுதியை எப்போதும் பலவீனமான நிலையிலேயே வைத்திருக்கும், அதாவது இந்த மென்மையான பகுதியின் மேல் பாரம் ஏற்றப்படும் போது, அது கொங்க்ரீடாக இருந்தால் என்ன, வெறும் குப்பையாக இருந்தால் என்ன, ஒப்பீட்டளவில் அந்த தரையின் தாங்குசக்தி குறைந்தே கணப்படும் என்பது சராசரி அறிவாகும். இதை  விஞ்ஞான பூர்வமாக ஒரு கலாநிதி ஆதாரங்கள், புள்ளிவிபரங்களுடன் வெளியிட்டுள்ளதாகவும் அறியக்கிடக்கின்றது. (இந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட  இளைஞ்சர் குழு தாமதமின்றி பெற்றுக் கொள்வது அவசியமாகும்)
ஆகவே  நாம் முன்வைக்க வேண்டிய கேள்வி;  இப்போது பெறப்பட்டிருக்கும் EIA அறிக்கை அறுவைக்காட்டில் கொட்டப்படும் குப்பையால் சூழல் சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றால் அதே தொழிற் நுட்பத்தை பாவித்து கொழும்பில் அல்லது இலங்கையின் வேறு இடங்களில் ஏன் இந்த குப்பை கொட்டப்பட முடியாது என்பதாகும்.  இது கொழும்பில் உருவாக்கப்பட்ட குப்பை என்பதால் ஹம்மாந்தோட்டைக்கோ, பொலநறுவைக்கோ அல்லது கிளிநொச்சிக்கோ கொண்டு செல்ல முடியாது என்றால் அதை புத்தளம் கொண்டுவருவது எந்த வகையில் நியாயம்? மற்றய ஊர்களுக்கு உள்ள அதே உரிமை புத்தளத்துக்கும் உண்டு. புத்தளத்தில் உருவாக்கப்படும் குப்பைகளை   நாம் எங்கும் கொண்டு செல்ல கேட்கவில்லை. ஆகவே எங்கோ உருவாக்கப்படும் குப்பையும் இங்கு வருவதற்கான தேவையும் இல்லை. அதை அனுமதிக்கவும் முடியாது.
அதைவிடவும் வடமத்திய மாகாணாத்தின் அநுராதபுரம் பிரதேசத்தில் எப்பாவெல(Eppawela) என்ற இடம் உள்ளது, அங்கே பொஸ்பேட் (Phosphate) அகழ்வு நடைபெறுவதும் அதை செய்துவரும் அமெரிக்க நிறுவனம் அந்த அகழ்வை துரிதப்படுத்தி ஒரு 30 வருடத்துக்குள் முழு பொஸ்பேட்டையும் அகழ்ந்தெடுக்கும் முகமாக அரசாங்கத்துக்கு பணத்தை காட்டி காரியத்தை சாதிக்க ஒப்பந்தம் ஒன்று செய்ய முற்பட்ட போது அதற்கு எதிராக மக்களும், சூழல் சுற்றாடல் சம்பந்தமான காரியங்களில் கரிசனையுள்ள தன்னார்வ  நிறுவனங்களும் இந்த ஒப்பந்ததிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு “புளங்குளம எதிர் செயலளர், தொழில்விருத்தி அமைச்சு(Bullangkulama  v. The Secretary Ministry of Industrial Develpoment) அல்லது  Eppawela Case(எப்பாவெல வழக்கு) என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சூழல் சுற்றாடல் சம்பந்மான வழக்காகும். இந்த வழக்கின் தத்துவார்த்த வாதாட்டங்களின்(logical contentions)  அடிப்படைகள் இன்றும் சூழல் சுற்றாடல் சம்பந்தமான வழக்குகளுக்கு ஒரு முன்னுதாரணமாக பாவிக்கப்படுகின்றன. ( இளைஞ்சர் குழுவும், சூழல் சுற்றாடலில் ஆர்வம் உள்ளோரும் இந்த வழக்கின் முக்கிய விடயங்களை அறிந்து வைத்திருப்பது பயனுள்ளதாகும்)
இந்த வழக்கின் ஏற்றுக் கொள்ளப்பட்ட அடிப்படைகள் இவைதான்;  ஒரு நாட்டின் அரசாங்கத்துக்கு அந்நாட்டின் வளங்களை மக்களின் நலன் கருதி பாவணைக்கு உட்படுத்தலாம். அந்த வளங்களை விற்று நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு செய்யலாம். அந்த வளங்களைவிற்று மக்கள் நல திட்டங்களில் முதலிடலாம். ஆனால் இந்த  வளங்கள் என்பது இன்றுள்ள மக்களுக்கு மாத்திரம் உரியவை அல்ல இனி இங்கே பிறக்கப்போகும் மக்களுக்கும் உரியது. அதன் பயனை எதிர்கால சந்ததியினரும் அனுபவிக்க ஏற்பாடு செய்வது அரசாங்களின் கடமையாகும்.  எப்பாவெல பொஸ்பேட் வளம் சுமார் 90 ஆண்டுகளுக்கு மக்கள் பயன் பெறும் வகையில் அகழ்வு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் போது அதை 30 வருடங்களுக்குள் சுரண்டி எடுப்பது எதிர்கால சந்ததியினரின் “வள அனுபவிப்பு உரிமை” யில் கைவைக்கும் செயலாகும் என்ற விடயமாகும்.
புத்தளம் “குப்பை” விடயம் நேரடியாக இந்த வழக்குடன் தொடர்பு படாவிட்டாலும் இந்த வழக்கின் அடிப்படைகள் சூழல் சுற்றாடல் தொடர்பாக எதிர்கால சந்ததியினருக்கு இருக்கும் “அனுபவிக்கும் உரிமை” யை (right to enjoyment) நிச்சயிக்க பயன்படுத்த முடியும்.   அதாவது ஒரு நாட்டின் வளம் அல்லது இப்போது கண்டுபிடிக்கப்பட்ட வளம் இப்போதைய  சந்ததியினருக்கு(Generation) மாத்திரம் எப்படி சொந்தமாக முடியாதோ அதே  நியாய நோக்கின் அடிப்படையில் இப்போதய மாசற்ற சூழல் சுற்றாடல் எதிர்காலத்தில் மாசடையும் முகமாக செயல் படுவது எதிர்கால சந்ததியினரின் மாசற்ற சூழல் சுற்றாடலை அனுபவிக்கும் உரிமையில் கைவைப்பதாகும்.
இந்த அடிப்படையிலேயே சுமார் 10 வருடங்களுக்கு முன்னால் ரியோ(Rio) வில் நடந்த “பூகோள மாநாடு”(Earth Conference) டில் சூழல், சுற்றாடல் கட்டாயமாக பாதுகாக்கப் வேண்டும் இல்லாவிடால் ஏற்கனவே வெப்ப வெளியேறத்தால் பாதிக்கப்பட்டுள்ள பூகோளம் இன்னும் வேகமாக வெப்பமாகி மனிதனுடன் சேர்த்து அனைத்து உயிரினங்களும் விரைவில் அழிந்துவிடும் என்ற முன்னெச்சரிக்கையோடு  பலவகை “விதி”(Principle/Rule)கள் முன்மொழியப்பட்டு அவை இன்று பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளன. அதில் ஒன்றே, “Polluter Pays Principle” (மாசுபடுத்தியவரே அதன் பாதிப்பை (செலவை) ஏற்றல் விதி), அதாவது சூழலுக்கு பங்கம் விளைவிப்பவர் அதனால் ஏற்படும் நட்டத்தை பொறுப்பெடுத்தல் என்ற அம்சமாகும்.
இந்த விடயத்தை அப்படியே கொழும்பு குப்பை விடயத்தில் பொருத்திப் பார்த்தால் இந்த குப்பைக்கு சொந்தக் காரர்களான கொழும்பு மக்கள், அங்கு செயல்படும் தொழிற்சாலைகள் தான் இந்த சூழல் மாசாவதை பொறுத்துக் கொள்ள வேண்டும், அதாவது அவர்களின் நடத்தையால் அவர்களின் பிரதேசம் மாசடைவதை பொறுத்துக் கொள்ள வேண்டும் அல்லது அவர்களின்  நடத்தையில்  மாற்றம் வேண்டுமே அல்லாமல் எமது தலையில் அவற்றைக் கட்டமுடியாது. அவர்களினால் தட்டிக்கழிக்கப்படும் அவர்களின் பொறுப்பை  நாம் ஏற்க முடியாது.
அவர்களின் நடத்தையில்  மாற்றம் என்பது அவர்கள் இப்போது பாவிக்கும் பொலிதீன் உறைகள் (Polythene Bags), ப்லாஸ்டிக் போத்தல்கள்(Plastic Bottles), இவை போன்ற அழிக்கவே முடியாத பொருட்களை பாவிப்பதை தவிர்ப்பது. மேலும் சமையல் மீதங்களை அல்லது சயல் பொருட்களின் தோல், விதை, தும்பு, சிரட்டை என்பவகைகளை வீட்டில் புதைப்பது அல்லது இயற்கை பசளையாக (Compost) மாற்ற  அவற்றை கொள்கலன் களில் அடைத்து வைப்பது, மழைதண்ணீரை கொள்கலன்களில் தேக்கி வைத்து மரம் செடி கொடிகளுக்கு பாவிப்பது, பொருட்களை சுற்ற செய்திதாள்களை பாவிப்பது அல்லது மீண்டும், மீண்டும் பாவிக்கக்கூடிய பெட்டிகளை பாவிப்பது  என்ற மாற்று நடவடிக்கைகளை குறிப்பிடலாம்.
இந்த நடவடிக்கை கொழுப்புக்கு மாத்திரம்தான் என்பதல்ல  நம் புத்தளத்தில் (எல்லா ஊர்களிலும்) இவை அறிமுகமாக வேண்டும். தெருவில் குப்பைகளை எறிவதை  நிறுத்த வேண்டும். சமயல் மீதங்களை மரத்தடியில் புதைக்கும் போது அது மரத்துக்கான சத்துணவாக மாறும் எனப்து சிறு பிள்ளைக்கும் தெரியும் விடயம். நம் நடத்தையின் சிறு சிறு மாற்றம் சூழல் சுற்றாடலில் பாரிய அனுகூலங்களை கொண்டுவரும்.
இவை போக நாம் அரசாங்கத்தை கோரவேண்டிய விடயம் இதுவே; அறுவைக்காட்டில் குப்பை புதைக்க பெறப்பட்ட EIA அறிக்கை போன்று எமக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு அறிக்கைகள் வேண்டும். அதில் ஒன்று அறுவைக்காட்டில் போன்று அல்லது அதற்கு ஒத்ததாக மூலப்பொருட்கள் அகழ்தெடுக்கும் பிரதேசங்களில் இருந்தும்(உ+ம் எப்பாவெல), புத்தளம் போன்ற கடலை அண்டிய பிரதேசத்தில் இருந்தும், மிக பலமான மலைகள் உள்ள பகுதியில் இருந்தும்( உ+ம் குருநாகல்), ஆறு, கடல், வனவிலங்குகள் வாழும் இயற்கைகாட்டு வளங்கள்  அனைத்தும் கொண்ட பகுதியில்(உ+ம் யால) இருந்து ஒரு அறிக்கையுமாக பல அறிக்கைகள் பெறப்பட்டு அந்த பிரதேசங்கள் எதிலுமே இந்த குப்பை கொட்ட முடியாத அளவு பாதிப்பு உள்ளது ஆகவே பாதிப்புகள் இல்லை அல்லது குறைந்தது( என்று சொல்லப்படும்) அறுவைக்காட்டு பிரதேசத்துடன் அவைகளை ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும். அல்லது ஏதாவது  நாடொன்றுக்கு  இதை பணம் கொடுத்து ஏற்றுமதி செய்யும் நிலைமையுண்டா என்பதையும் ஆராய வேண்டும் (ஆனால் இப்படியான நடவடிக்கையை உலக  க்ரீன் பீஸ் (Green Peace) அமைப்பு அனுமதிக்காது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்)
-முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்.

Post a Comment

0 Comments