இலங்கையின் முதற் தர தேசிய வங்கியாக 1939ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி உதயமாகியது தான் நாளைய உலகை வெற்றி கொள்ளும் நவீனத்துவ வளர்ச்சியின் அடையாளமாக இன்று திகழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை வங்கி.
இது தோற்றம் பெற்ற காலத்தில் ஏறத்தாழ பதினாறு வங்கிகள் இயங்கிக்கொண்டிருந்தன. இவை அனைத்தினது சேவைகளும் அக்காலத்தில் நம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த பெருந்தோட்டத்துறைக்கு வழங்கப்பட்டன. இதனால் கிராமியத்துறையை 80% மேற் கொண்டிருந்த நம் நாட்டில் இவ்வங்கிகளின் சேவைகள் கிராமியத்துறையைச் சென்றடையவில்லை. இதனைக் கருத்திற்கொண்ட அரசு 1961ஆம் ஆண்டு இலங்கை வங்கியை அரசுடமையாக்கி அரச வங்கியாக மாற்றியது. இதனைத் தொடர்ந்து இலங்கை வங்கியின் கிளைகள், நகரங்கள், பட்டினங்கள் என கிராமங்களுக்கு கூட விஸ்தரிக்கப்பட்டு திறக்கப்பட்டன. இதனால் இலங்கை வங்கியின் சேவைகள் விவசாயத்துறை, கைத்தொழிற்றுறை, வியாபாரத்துறை, சேவைத்துறை என பலதரப்பட்டவர்களுக்கும் கிடைக்கலாயிற்று. இதன் மூலம் இலட்சோப இலட்சம் மக்கள் பயன்பெறலாயினர். இதனால் எண்பதுகளில் இலங்கை வங்கி 'தேசத்தின் வங்கியாளர்" எனும் வர்த்தக நாமத்திற்குரியதாயிற்று. இது இன்று இலங்கையின் முதற் தர வங்கியாகத் தலைநிமிர்ந்து நிற்கின்றது.
இலங்கையிலுள்ள அனைத்து நிதி நிறுவனங்களிலும் ஆகக்கூடுதலான சொத்துக்கள் (ட்ரில்லியனுக்கு மேல்) ஆகக்கூடுதலான வைப்புகள் (ட்ரில்லியனுக்கு மேல்) ஆகக்கூடுதாலான கடன் வசதிகள் அதி உச்ச இலாபம் என்பனவற்றைக் கொண்டதாக விளங்குகிறது. இதனுடைய இலாபத்தில் கணிசமான அளவு பகுதியைத் தனது சமுதாய நிறுவனப்பொறுப்பை வெளிப்படுத்தும் பல்வேறு நலனோம்பு திட்டங்களையும் முன்னெடுத்து வருவது இதன் இன்னோர் சிறப்பம்சமாகும்.
ஆரம்ப நாட்களில் மனித சக்தியை முழுக்க முழுக்க நம்பியிருந்த நம் வங்கி காலத்திற்கு காலம் உலகியல்ரீதியில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப தன்னை இசைவுபடுத்தி அம்மாற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. பூகோளமயமாதல் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பனவற்றின் சவால்களையும் இதனால் இலகுவாக இலங்கை வங்கி வெற்றி கொண்டது. இன்று வைப்பு புத்தகங்களிலிருந்து டிஜிற்றல் வங்கியியல் வரையிலான தொழில்நுட்ப வளர்ச்சியை இலங்கையர்கள் பயன்படுத்தவும் அதன் மூலம் பயன்பெறவும் வழி சமைக்க முடிந்தது. அது மட்டுமன்றி தொழில்நுட்பத்தின் சமகால வளர்ச்சியின் அடையாளங்களாகத் திகழும் 'சிமாட்சோன்" இணைய வழி வங்கிச்சேவை, மொபைல் வங்கிச்சேவை, சூழலுக்கு பாதுகாப்பான வங்கிச்சேவை போன்ற பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்து வங்கித்துறையில் புரட்சியாளனாக விளங்குகின்றது.
நம் நாட்டை பொறுத்தவரையில் 77 ஆண்டுகள் துடிப்புடன் செயற்பட்டு நின்று நிலைப்பது என்பது சாதாரண ஒரு விடயமல்ல. இதனால் இவ்வேளையில் இருசாராரை நினைவுகூர வேண்டியது எமது கடமையாகும்.
1.எமது முதுகெலும்பாகத்திகழும் எமது பெறுமதி சார் வாடிக்கையாளர்கள்.
2.வங்கிக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்த ஓய்வூதியம் பெற்ற மூத்த வங்கியாளர்கள்..
வாடிக்கையாளர் இன்றேல் நாம் இல்லை. இதனால் நாம் சிறந்த சேவைகளை அவர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க வழங்கி வருகின்றோம். எமது நம்பிக்கை, நாணயம் என்பனவற்றிற்கு மதிப்பளித்து எமக்கு பக்க பலமாய் விளங்குகின்ற எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களை நாம் தலை வணங்கி நன்றி கூறுகின்றோம்.
அதேவேளை இலங்கை வங்கி இந்த அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறதென்றால் அதற்கு அச்சாணியாக விளங்கியவர்கள் எமது மூத்த வங்கியாளர்களேயாவர்
அவர்களின் அர்ப்பணிப்பான சேவைகளும் செயற்பாடுகளும் மதிப்பிட முடியாத பெறுமதிகளாகும்.
இன்று இலங்கை வங்கியில் கடமைபுரியும் 8000ற்கு மேற்பட்ட ஊழியர்கள் தொழில் திருப்தியுடன் கடமைபுரிகின்றனர் என்றால் இதற்கு காரணம் அவர்களின் வழிகாட்டல்கள், ஆற்றுப்படுத்தல், வென்றெடுத்துத் தந்த சலுகைகள் என்பனவே அடிப்படை.


0 Comments