விமல் வீரவன்ச கதை ,திரைக் கதை வசனம் எழுதி இயக்க ,முன்னால் ஜனாதிபதி 70 வயது தாத்தா மகிந்த கதாநாயகனாய் நடிக்க, பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகி லேட்டஸ்டாய் ரிலீஸாகி இருக்கும் படம் தான் " பாதயாத்திரை ".
வழக்கம் போல் மகிந்தவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் உதய கம்மன்பில ஒளிப்பதிவு செய்திருக்கிறார்..பாடல்களை நாமல் ராஜபக்ச எழுத .கதாநாயகியாக 60 வயசு பவுடர் பேபி கீதா குமாரசிங்க நடித்திருக்கிறார்.
அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் மகிந்தவிற்கு ஒரு மெகா ஹிட்டுப் படத்தைக் கொடுத்து தனது டேமேஜான இமேஜை தூக்கி நிறுத்த வேண்டிய காலத்தின் கட்டாய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அவசர அவசரமாய் தயாராகி ரிலீஸாகி இருக்கிறது பாத யாத்திரை.
கண்டி மீராமாக்கம் பள்ளியில் ஒரு டுபாக்கூறு உலமாவின் டகல்பாஜி மகிந்த புராணத்துடன் ஆரம்பாகிறது படம்...தொடக்கமே வெடிச் சிரிப்பு மத்தாப்பு.
அட இது இன்னொரு இம்சை அரசன் புலிகேசியாய் இருக்கும் என்று சீட் நுனியில் உட்காரும் ரசிகர்களை குருடன் யானையைப் பார்த்த கதையாக புரியாத ஒரு ஜந்துவாய் இளிக்க வைத்திருக்கிறது ஒட்டு மொத்த திரைக்கதை..
மகிந்த தோன்றும் காட்சிகளில் அவரது பழைய உற்சாகம் இல்லை..பேசும் வசனங்கள் எல்லாம் எப்போதோ வழக்கொழிந்து போன உப்புச் சப்பில்லாத சக்கைகள்..
ஒரு பொய்லர் கோழி போல் வளர்ந்த உடம்பு, ஏஸியை துறந்து மழையிலும் வெயிலிலும் அலைவதாலோ என்னவோ முகத்தில் முதுமையின் ரேகைகள் ப்ளாஷ் அடிக்கின்றன...அடிக்கடி மேக்கப் கலைந்து தலை கலைந்து விடுகிறது..அரசியல்வாதியின் வேசம் கலைவது போல.....
பத்து வருசம் ஜனாதிபதியாய் இருந்து தோற்றுப் போன ஒரு மனிதன், அதிகாரமோகம்,கொண்டு எந்த வகையிலாவது ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள அடையும் முயற்சிகளே படத்தின் ஹைலைட் என்று சாமானிய ரசிகனுக்குப் புரிந்தாலும் இயக்குனர் விமல் வீரவன்ச வழக்கம் போல் இதில் தேசப் பற்று லேபலை ஒட்டி இருக்கிறார்..
படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்காக்களும்,உயிர்ப்பயத்தில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஜீவன்களும்,இன்னும் எத்தனையோக்களும் அந்தரத்தில் பாதயாத்திரை போகும் காட்சி தென்படுகிறது..
பாத யாத்திரையால் பிடிக்க முடியாது ஆட்சி
பரங்கிமலை ஏறினாலும் உனக்கு கிடையவே கிடையாது மீட்சி
என்று இன்று மாலை படத்தைப் பார்த்துவிட்டு தைரியமாய் ஜனாதிபதி பன்ச் வசனம் பேசலாம்..அந்தளவுக்கு படம் மொக்கை.....
By..ஸபார் அஹமட்...


0 Comments