கொக்கர கோ ..... கொக்கர கோ ...
சேவலின் கொக்கரிப்பு சத்தமும், குயில்களின் சங்கீதமும் ,விடிவெள்ளியின் புதிய தோற்றமும் ஒரு புதிய காலை புலர்ந்தமையை கட்டியங் கூறியது.
இரவு முழுக்க யோசித்து ,யோசித்து தூக்கமின்றி போன கேசவன் அதிகாலை பொழுதிலே சற்று கண்ணயர்ந்து விட்டான்.
கேசவன் நான்கு பெண் பிள்ளைகள் , கடைசியாய் ஒரு ஆண் என்று மொத்தம் ஐந்து பிள்ளைகளின் தந்தை. பத்து வருடத்தை மத்தியக்கிழக்கில் கழித்த கேசவன் மூன்று மாதத்தின் முன்பே தாய் நாடு திரும்பி இருந்தான்.
வெளிநாட்டு பணம் கையிலிருக்கும் மட்டும் அடிக்கடி வீடு வந்த சொந்தங்கள் படிப்படியாய் தற்போது அவன் வீடு தேடி வருவதை குறைத்து கொண்டார்கள். நடுத்தர வாழ்க்கை எனும் படியில் இருந்து கேசவன் குடும்பத்தின் வாழ்க்கை தரம் ஏழை குடும்பம் எனும் நிலைக்கு தள்ளப்பட்டது.
அப்பா எனக்கு நாளைக்கு எப்படியும் எக்ஸாம் பீஸ் தந்துடுங்க , எல்லா பிள்ளைகளும் கட்டிட்டாங்க நான் மட்டும் தான் இன்னும் மிச்சம் வெட்கமாய் இருக்கு அப்பா .என்று 9 ம் வகுப்பு படிக்கும் மகள் இரவு சொன்னதை அப்படியே யோசித்து கொண்டு கிடந்தவனுக்கு நேரம் சென்றே தூக்கம் போனது.
என்னப்பா இன்னும் எளும்பலியா? தேத்தனிக்கு சீனி கூட இல்லை வெளியே போயிட்டு கடனுக்கு சரி சீனி வாங்கி வாங்களேன் என்ற மனைவியின் கோரிக்கை தான் அவனை எழுப்பியது.
அவசரமாய் எழுந்து முகம் அழும்புவிட்டு கதிரேசன் ஐயா கடையை நோக்கி நடந்தான் கேசவன் .
வாடா கேசவா , என்ன இந்த பக்கம் புதுசா ? அதுவும் காலை நேரத்திலேயே என்ற கதிரேசன் ஐயாவின் பேச்சிலே ஒரு குத்தல் தொனித்தது.
ஐயா , எனக்கு ஒரு கிலோ சீனி தாங்க , பின்னேரம் சல்லியை தாரேன் என்றவனின் பேச்சு முடியும் முன்பே கதிரேசன் ஐயா கூறினார் வெளிநாட்டு சல்லி இருந்தால் பெரிய கடைகளுக்கு போவீங்க கையிலே ஒன்னும் இல்லாட்டி தான் எங்களை நாடுவீங்க என்ற கதிரேசன் ஐயா வேண்டா வெறுப்பாக ஒரு கிலோ சீனியை கொடுத்தார்.
அதை கொண்டு போய் மனைவியிடம் கொடுத்து விட்டு திரும்பியவனிடம் மகளின் பார்வை என்னமோ செய்தது , இன்று மட்டும் போய் வாங்க மகள் நாளைக்கு அப்பா எப்படியும் உங்களின் சல்லியை கட்றேன் என்றான் .மகளும் சரி அப்பா என்று தலை அசைத்தாள்
''அப்பா எனது சைக்கிள் இனி மிதிக்க ஏலாது , அதை கொஞ்சம் செய்து தாங்கப்பா '' என்று உள்ளே இருந்து மூத்த மகளின் குரல் ஒலித்தது . சரிம்மா அதையும் எப்படியாவது செய்வோம் என்று அதற்கும் முற்று புள்ளி வைத்தான்.
இப்படியே எல்லா புள்ளைங்களும் பாடசாலை கிளம்பிய பின்பு மனைவி ஜோதியோடு பேசலானான்.
என்ன வாழ்க்கை இது ? அங்கிருக்கும் போது எல்லோரையும் பிரிந்திருந்தேன் என்ற கவலை இருந்தாலும் பிள்ளைகளின் தேவைகளை சரி நிறைவேற்ற முடிந்தது. இங்கே இப்படி வாழ்க்கை செலவு ச்சே ... என்று அலுத்து கொண்டான்.
அது தாங்க இப்ப பார்த்தீங்களா நம்மட வீட்ட வந்த ஒங்கட அக்கா தங்கச்சிகளும் , என்னட அண்ணன் தம்பிகளும் இப்ப வாறதை குறைச்சி கொண்டாங்க , எங்கட கையிலையும் பசை இருந்தால் தானுங்க இந்த சமூகம் நம்மை மதிக்கும் என்று எறியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தாள் ஜோதி
சரி ,எல்லாம் எனக்கும் புரியுது எதையாவது போட்டு தா திண்ணு போட்டு ஏதும் வேலைகள் இருக்கா என்று கொஞ்சம் விசாரிப்போம் என்றவன் குளிக்க செல்ல , சமையலறை நோக்கி சென்றாள் ஜோதி .
..
குளித்து விட்டு வந்து , போட்டு வைக்கபட்டிருந்த பாசிப்பயரையும் உண்டு விட்டு வெளியே கிளம்பி கால் போன போக்கிலே நடக்க தொடங்கியவனுக்கு ஒரு தனியார் வைத்தியசாலையில் போடப்பட்டிருந்த விளம்பரம் பார்வையில் பட்டது
''எமது வைத்தியசாலையில் அம்பியுலன்ஸ் ஓடக்கூடிய அனுபவமுள்ள சாரதி ஒருவர் தேவை ''
சென்று பேசியவனுக்கு நாளைக்கே வாருங்கள் என்ற சந்தோசமான செய்தியும் ,கூடவே மாதம் 40 ஆயிரங்கள் சம்பளமும் எனும் தகவலும் கிடைத்தது. உடனே வீடு சென்று மனைவியிடம் சொன்னான். அவளும் மகிழ்ந்து போனாள்.
நல்லவங்களை ஆண்டவன் கை விடமாட்டான் , உங்கள் கவலை எல்லாம் இன்றோடு முடிந்திடும் என்று நம்பிக்கையும் ஆறுதலும் கொடுத்தாள்.
பெண்கள் இப்படி தான் சில நேரம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவார்கள் , பல நேரம் ஆறுதல் சொல்வார்கள் ..
எப்படியோ அன்றைய பொழுது ஓடி மறைந்தது , அடுத்த நாள் நேரத்துக்கு எழுந்தவன் குளித்து புது ஆடை அணிந்து கடவுளை வேண்டியவனாய் , பிள்ளைகள் மனைவி அனைவரிடமும் அன்பாக பேசி அவர்களின் கன்னத்திலே ஒரு முத்தத்தையும் பதித்துவிட்டு புதிய வேலைத்தளம் நோக்கி நகர்ந்தான்.
அன்று ஒன்பது மணிக்கு அவனுக்கு வேலை வழங்கப்பட்டது , அவனுக்கு கொடுக்கப்பட்ட அம்பியுலன்சில் முதல் வேலையே அவசர வேலை ஒன்று தான்..
அவசர சிகிச்சை பெற வேண்டிய ஒரு இளைஞனை கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வேண்டும்...
அம்பியுலன்ஸ் இப்போது சிறகு முளைத்த விமானம் ஆனது , அவனது முழு அனுபவத்தையும் சேர்த்து சென்று கொண்டிருந்தவன் இடையிலே குறுக்கிட்ட ஒரு நாயின் மீது மோதியதையும் பொருட்படுத்தாமல் உரிய நேரத்திற்கு கொழும்பை அடைந்து அந்த இளைஞனை ஒப்படைத்தும் விட்டு அவன் பணி புரியும் வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தான் ...
இங்கே தான் அவனுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது - கேசவா ,கேசவா நீங்கள் செல்லும் வழியில் நாய் ஒன்றை கொன்று இருப்பதால் உங்களை நாம் வேலையில் இருந்து நீக்குகிறோம் .
மனிதனை காப்பாற்ற துடித்தவ்னுக்கு , மிருகத்தை கொன்ற பாவத்தால் வேலை போனது .
மனைவி சொன்ன ஆறுதல் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தது - ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான் ,ஆனால் கை விட மாட்டான்.
வீடு வந்தான் மனைவியிடம் விடயத்தை சொன்னான் , மனைவிக்கு வார்த்தைகள் வெளி வரவில்லை.
அவனின் டயரியை எடுத்து அவன் ஏற்கனவே பணி புரிந்த நாட்டில் இருக்கும் நண்பர்களின் தொலைப்பேசி இலக்கத்தை சுழற்றினான்.
பத்திரமாய் டயரிக்குள் இருந்த பாஸ்போர்ட் அவனை பார்த்து சிரித்தது , நீ இல்லாவிட்டால் நானும் இல்லை என்று சொன்னவனாய் பாஸ்போர்ட்டில் ஒரு முத்தத்தை பதித்தான்..
-Infaas-

0 Comments