மணல் ரோடு, தார்ச்சாலையாக மாறிவிட்டது...
மாட்டுவண்டி, மகிழுந்தாக மாறிவிட்டது...
விளையாட்டுப் பொருட்கள் விஞ்ஞானப் பொருட்களாகி விட்டன.
மனிதன் ரோபாவாக மாறிவிட்டான்.
இப்படி ஒவ்வொரு நாளும் விரல் நுனியில், அறிவியல் உலகத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை ஏதாவது ஒரு நோய் தாக்கிக்கொண்டிருப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அறிவியலோடு அதன் சாதனங்களையும் பயன்படுத்துவதால்தான் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிறோம்.
இதற்கு என்ன காரணம்? முறையான உணவும், சரியான உடற்பயிற்சியும் இல்லாததுதான் என்கிறார்கள் நிபுணர்கள்.
நம் மூதாதையர் வாழ்ந்த காலத்தில் ஆரோக்கியமான உணவும், அதிகமான உடல் உழைப்பும் இருந்தது.
ஆனால், இன்று அது நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
இதற்கு மற்றொரு காரணம்கூட சொல்லலாம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழைய பொருட்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில், நம் உடலை வலிமையாக்குவதாக இருந்தது.
ஆனால், இன்று அவையெல்லாம் நம் வீட்டின் பரணிலோ அல்லது ஏதோ ஒரு மூலையிலோ இருக்கின்றன.
இன்னும் சிலர், அவை எதற்கு என்று பழைய இரும்புக் கடையில் போட்டுவிட்டு இடத்தைக் காலியாக வைத்துள்ளனர்.
இப்படி பலரால் மதிக்கப்படாமல் இருக்கும் ஒரு வாகனம்தான் சைக்கிள். சைக்கிள் ஓட்டும் பழக்கம் நம் தலைமுறையினரிடம் மறைந்து வருகிறது.
சைக்கிள் ஸ்டாண்டுகளாக இருந்த இடங்கள் எல்லாம் இன்று பைக் ஸ்டாண்டுகளாக மாறிவிட்டன.
இந்த நிலையில், மிகவும் எளிமையானதும், எல்லா வசதிக்கும் பெயர்போனதுமான சைக்கிள், தற்போது சில இளைஞர்கள் மத்தியில் புதுப்பொலிவுடன் வரத் தொடங்கியிருக்கிறது.
உடலை ஃபிட்டாக வைத்திருப்பதற்கு சைக்கிளிங் ஓர் எளிய பயிற்சி. சைக்கிளிங் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது.
சைக்கிள் அறிமுகம்
முதன்முதலாக 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமான சைக்கிள், தற்போது உலகம் எங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமாக உள்ளன.
1839-ல் மேக்மில்லன் என்பவரால் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பத்தில், ‘வெளாசிபிட்’ என்று பெயரிடப்பட்டு, பிற்காலத்தில் சைக்கிள் என மாறியது.
பின்னர் டன்லப் என்பவரால் ரப்பர் சக்கரம் கொண்டதாக, சைக்கிள் மாற்றியமைக்கப்பட்டது.
சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம் போன்ற நாடுகளில் சைக்கிள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
போக்குவரத்துக்கும் முதன்மையானதாக உள்ளது.
போக்குவரத்துத் தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளாகவும் சைக்கிள் உள்ளது.
மேலை நாடுகளில் உயர் பதவிகள் வசிக்கும் செல்வந்தர்கள்கூட தினந்தோறும் தங்கள் அலுவலகங்களுக்கு சைக்கிளிலேயே பயணிக்கின்றனர்.
இதனால், அவர்களுடைய ஆரோக்யம் நன்றாக இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.
சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தங்கள் அலுவலகங்களுக்கும், மாணவர்கள் பள்ளிகளுக்கும் சைக்கிளில் செல்வதைத்தான் விரும்புகின்றனர்.
சாலைகளில் இருபுறமும் சைக்கிள் செல்வதற்கு நேர்த்தியாகத் தளம் அமைத்து, சைக்கிளில் செல்வதை ஊக்குவிக்கிறார்கள்.


0 Comments