ஒருவர் உம்ரா செல்ல, அல்லது ஹஜ் செல்ல ஆசைப்படுகிறார் அவரிடம் பணம் இல்லை களவு எடுக்கிறார்… அவரின் ஆசையை நிறைவு செய்கிறார்.
ஒரு இளைஞன் தனது சகோதரியின் திருமணம் செய்ய பணம் வேண்டிய நிலையில் உள்ளான். இதற்கு அவன் தேர்ந்தெடுத்த பாதை கஞ்சா விற்பனை.
ஒரு மாணவன் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். வீட்டிலோ வறுமை தாண்டவம் ஆடுகிறது இதற்கு அவன் எடுத்த முடிவு ஆயுத வியாபாரம்.
தனது கணவன் நோயால் பீடிக்கப்பட்டு படுத்த படுக்கையில் உள்ளார். கேட்பார், பார்ப்பார் யாரும் இல்லை. அவரை மருந்துக்கு கொண்டு செல்லவும் வழி இல்லை. ஆகவே அந்த பெண் எடுத்த முடிவு விபச்சாரம் செய்வது.
இவை அனைத்தையும் நான் சரியான முடிவுகள் என்று சொன்னால் என்னை நீங்கள் அனைவரும் பைத்தியம் என்பீர்கள். அல்லது நாஸ்திகன் என்பீர்கள். ஏன் ? மேலே சொன்ன அனைவரின் நோக்கமும் நல்லது தானே என்று கேட்டால்? நோக்கம் நல்லது தான் ஆனால் செல்லும் வழி பிழை தானே என்று வாதம் புரிவீர்கள்.
சரி மேலே உள்ளது ஒரு கற்பனை கதை, இந்த கதை அப்படியே உங்கள் மனதில் இருக்கட்டும். இப்போது விடயத்திற்கு வருகிறேன்.
சாஹிரா பாடசாலைக்கு பஸ் தேவை அதற்கு தேர்வு செய்த வழி தான் கார்னிவெல் களியாட்டம். மேலே உள்ள கதையுடன் இந்த சம்பவத்தை ஒப்பீடு செய்யுங்கள். தெளிவு பிறக்கும் முதலில் பஸ் தேவையா..? கட்டாயமா..? என்பதே முக்கிய கேள்வியாகும்..? அப்படி தான் அது முக்கியம் என்று விடை வந்தால், அதற்கான வழி இது தானா..? என்பது இரண்டாம் கேள்வியாகும்.
இன்றைய வர்த்தக உலகில் வர்த்தகத்தோடு சார்ந்த எத்தனையோ விடயங்கள் இருக்கும் போது இதனை நமது பாடசாலை நிர்வாகம் தேர்வு செய்தது ஏனோ தெரியவில்லை.
சில கொந்தராத்து பெறுகின்ற அரசியல்வாதிகள் கமிஷனுக்கு ஆடிய நாடகத்தில், படித்தவர்களின் கோவணமும் களவாடப்பட்டுள்ளது போல் தான் விளங்குகிறது.
இப்படி ஒரு வர்த்தக முயற்சி மூலம் பஸ் வேண்டும் எனில் – உதாரணமாய் தென்னிந்தியாவை சேர்ந்த திண்டுக்கல் லியோனி அவர்களை அழைத்து வந்து நமது தொகுதிக்குள் 10 பட்டி மன்றங்களை நடத்தி இருக்கலாம். இது ஒரு அறிவு சார்ந்த விடயமாகவும் ஆண்களுக்கு ஒரு காட்சி, பெண்களுக்கு ஒரு காட்சி நடத்துவது சாத்தியமான ஒன்றாகவும் இருந்து இருக்கும் . இதை போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய கூட பல நிறுவனங்கள் உள்ளது.
இப்படியெல்லாம் யோசிக்காமல் சடவாத சிந்தனைக்குள் சிக்கி பாடசாலைக்குள், ஒரே அமைப்புக்குள், ஒரு பள்ளிக்குள், ஒரே கட்சிக்குள் என்று சமூக ஒற்றுமையை சிதைத்ததும், கருத்து வேறுபாட்டை உருவாகியது மாத்திரம் இல்லாது சமூக தலைமை என்று செயல்பட்ட பெரிய பள்ளியை கூட புறக்கணித்தமை கவலைக்குரியதாகும்.
இதிலும் கேவலம் என்னவெனில் கடந்த காலங்களில் இதை பிறர் செய்யும் நேரம் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் எல்லாம் இன்று ஆதரவு தெரிவிப்பதே ஆகும்.
எனவே, இப்படியான நிகழ்வுகளை கூட்டி கழித்து பார்த்து நமது மக்கள் புறக்கணிக்கவும், அதற்காய் ஒரு ரூபாய் கூட செலவழிப்பதில்லை என்பதிலும் உறுதியாய் இருக்க வேண்டும்.
முடிந்தால் பொது அமைப்புக்கள் சேர்ந்து கார்னிவெல்லுக்கு எதிரான வசூல் என்ற ஒரு வசூலை செய்து அதையும் பஸ் வாங்க கொடுக்கலாம். பாதையும், பயணமும் தெளிவாகவும், நேர்மையானதாவும் இருந்தால் மட்டுமே நமது நோக்கங்கள் நல்ல படியாய் நிறைவேறும் என்பதே எமது கருத்தாகும்.
சிந்திக்க தெரிந்தவர்களுக்கு எமது சின்ன ஆக்கம் சொல்லும் செய்தி இதுவே!


0 Comments