பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் யூசெய்ன் போல்ட் வென்றெடுத்த மூன்று தங்கப் பதக்கங்களில் ஒன்றை இழக்க நேரிடலாம் எனத் தெரிகின்றது.
பெய்ஜிங்கில் ஆண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜமெய்க்கா அணியில் இடம்பெற்ற நெஸ்டா கார்ட்டரின் ஏ மாதிரியில் தடைசெய்யப்பட் ஊக்கமருந்து (மெதிலெக்ஸானாமைன்) கலந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய வீர, வீராங்கனைகள் 454 பேரின் மாதரிகள் மீள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த செய்தி வெளிவந்துள்ளது.
இது குறித்து கார்ட்டரிடமும் அவரது முகவரிடமும் வினவப்பட்டபோது இருவரும் மௌனம் சாதித்துள்ளனர்.
அவரது பி மாதிரியில் ஊக்கமருந்து கலந்திருப்பது நிரூபிக்கப்பட்டால் அவர் தடைக்குட்படும் அதேவேளை, ஜமெய்க்கா அணி வென்ற தங்கப் பதக்கமும் பறிபோகும்.
ஜமெய்க்கா தொடர் ஓட்ட அணியில் இடம்பெற்ற நெஸ்டா கார்ட்டர் தொடர் ஓட்டத்தின் முதல் கட்டத்தை ஓடியதுடன் அவரைத் தொடர்ந்து முறையே மைக்கல் ஃபேட்டர், அசாவா பவல், யூசெய்ன் போல்ட் ஆகியோர் ஓடியிருந்தனர்.
அப் போட்டியை 37.10 செக்கன்களில் நிறைவு செய்து ஜமெய்க்கா உலக சாதனை நிலைநாட்டியிருந்தது. ட்ரினிடாட் டுபாகோ, ஜப்பான் ஆகியன முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்ளை வென்றிருந்தன. பிரேஸில் நான்காம் இடத்தைப் பெற்றிருந்தது.


0 Comments