தேசிய வீரர்கள் தின நிகழ்வில் கலந்துகொள்ள, முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தேசிய வீரர்கள் தின நிகழ்வு ஏற்பாடுகள் குறித்து அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், 'இந்த தேசிய வீரர்கள் தினம் 2016, நாடாளுமன்ற மைதானத்தில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு, 19ஆம் திகதிக்கு மாலை 4 மணிக்கு அஞ்சலி செலுத்துவதுடன் ஆரம்பமாகும்.
ஜனாதிபதி, பிரதமர், அரசியல்வாதிகள், முப்படைகளின் தளபதிகள் மற்றும் வீரர்கள் கலந்துகொள்ள ஆரம்பமாகவுள்ளது. இதில், அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அதேவேளை, முன்னாள் ஜனாதிபதிக்கோ அல்லது அவரது ஆதரவாளர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, சுதந்திர சதுக்கத்தில் 7.30க்கு, ஜனாதிபதி தலைமையில் கலாசார நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. தேசிய வீரர்கள் தின நிகழ்வில், முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெறாது. அதற்குப் பதிலாக கலாசார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நாட்டில், இனங்களுக்கிடையில் நிரந்தர ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். இரண்டு நாடுகளுக்கு இடையில் யுத்தம் நடைபெற்று நாம் வெற்றி பெற்றிருந்தால், யுத்த வெற்றி விழாவைக் கொண்டாடியிருக்கலாம். ஆனால், இலங்கையில் இடம்பெற்றது, இரண்டு இனங்களுக்கு இடையிலான சண்டையாகும். இதில், சகல இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓர் இனத்தை வருத்தப்பட வைத்து, இன்னுமோர் இனம், வெற்றி விழாவைக் கொண்டாடுவது உகந்தது அல்ல. எனவே, வெற்றி விழாக் கொண்டாடங்களில் ஈடுபடாமல், கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்நிகழ்வுகளில், முப்படையினரும் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு வீரர்களும் இணைந்துகொள்வர்' என்றார்.
இன்னுமொரு வெற்றித் தினம், குருநாகலில் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது எனக் கேட்கப்பட்டபோது, அவ்வாறான தகவலைத் தானும் கேள்வியுற்றுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், அவ்வாறான நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்கு, படையினரில் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.


0 Comments