எதுவுமே செய்யாமல் இருக்கும் போட்டியொன்று தென் கொரியாவில் கடந்த வாரம் நடைபெற்றது. மன அழுத்தங்களிலிருந்து விடுபடுவது, மூளைக்கான வேலைப்பளுவை குறைத்தல் ஆகியனவே இதன் நோக்கமாகும்.
தலைநகர் சியோலின் பூங்கா வொன்றில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இப் போட்டியில் சுமார் 60 பேர் பங்குபற்றினர். இவர்கள் மேற்படி பூங்காவில் 90 நிமிட நேரம் இருக்க வேண்டும்.
ஆனால், பேசவோ, சாப்பிடவோ, உறங்கவோ கூடாது. ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக்கில் அரட்டையடிக்கவும் முடியாது.
உண்மையில் எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பயன்படுத்துவதற்கு போட்டியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
“உங்கள் மூளைக்கு ஓய்வளியுங்கள்” எனும் தொனிப்
பொருளில் நடைபெற்ற இப் போட்டி “ஸ்பேஸ் அவுட்” என அழைக்கப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு உள்ளூர் கலைஞர்கள் சிலரினால் ஒரு கலை நிகழ்வாக இந் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தற்போது இது ஒரு போட்டி நிகழ்வாக நடத்தப்படுகிறது. கடந்த ஞாயிறன்று சியோல் நகர சபை அனுசரணையுடன் இப்போட்டி நடைபெற்றது.“ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றிலிருந்து எமது மூளைககு அதிக தகவல்களை அனுப்பாமல் ஓய்வில் இருக்க வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்காக சுமார் 1500 பேர் இணையத்தளம் மூலம் விண்ணப்பித்திருந்தனர். தென் கொரியாவின் 5 கோடி மக்களில் சுமார் 80 சதவீதமானோர் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கின்றனர்.
அங்கு அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவருவது ஒரு பிரச்சினையாக உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென் கொரியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் சராசரியாக தினமும் 4 மணித்தியாலங்கள் டுவிட் செய்தல், அரட்டையடித்தல், இலத்திரனியல் கேம் விளையாடுதல் போன்றவற்றில் செலவிடுகின் றனர் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.


0 Comments