Subscribe Us

header ads

அணிந்து கொள்ளக்கூடிய ரோபாட்டிக் உடை!


சூப்பர் ஹீரோக்களை திரையில் கண்டுகளித்து மகிழ்ந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது இப்போது. மனிதர்கள் தாமே சூப்பர் ஹீரோக்களாக மாற என்னென்ன தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை உருவாக்க முடியும் என்று பல்வேறு ஆய்வுகளை செய்துவருகிறார்கள் உலக ரோபாட்டிக் மற்றும் இதர பல துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள். 

விளைவு, அசாத்திய திறன்கள் கொண்ட அசாதாரண மனிதர்கள் என்பதுதான் இன்றைய உலகின் தாரக மந்திரமாக இருக்கிறது. உலகை மயக்கிய சூப்பர் ஹீரோக்களில் 'அயர்ன் மேன்' அல்லது இரும்பு மனிதனுக்கு மிக முக்கியமான இடமுண்டு. உடை போல அணிந்துகொள்ளக்கூடிய ரோபாட் ஒன்றுக்குள் நுழைந்துகொண்டு ராக்கெட் போல விண்ணுக்கு சீறிப்பாய்ந்து உலகைக் காக்க அயர்ன் மேன் கிளம்புவார். அவர் பயன்படுத்தும் ரோபாட்டிக் உடை போன்ற ஒரு அணிந்துகொள்ளக்கூடிய ரோபாட்டை கண்டு பிடித்திருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான ஹூண்டாய். 

சுவாரசியமாக, ஹூண்டாயின் இந்த அணிந்துகொள்ளக்கூடிய ரோபாட்டை அணிந்துகொள்பவர் நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள பொருட்களை சாதாரணமாக தூக்க முடியும் என்கிறது ஹூண்டாய். இதற்கு முன்னர் அணிந்துக்கொள்ளக்கூடிய நடக்கும் உதவியாளர் என்று அழைக்கப்பட்ட  HLEX எனும் இலகுவான எடைகொண்ட ஒரு ரோபாட்டை கடந்த வருடம் அறிமுகம் செய்திருந்தது ஹூண்டாய். உடை போல அணிந்துக்கொள்ளக்கூடிய இலகுவான HLEX  ரோபாட்டுடன் ஒப்பிடும்போது முழுமையாக எந்திரமயமாக்கப்பட்ட இந்த புதிய ரோபாட்டை நாம் அணிந்துகொள்ள முடியாது, 

மாறாக அதுதான் நம்மை அணிந்துகொள்ளும் என்கிறார்கள். ஆனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கை கால் செயலிழந்தவர்கள் ஆகியோர் பயன்படுத்த ஏதுவாக இலகுவான ஒரு ரோபாட்டை உருவாக்கியுள்ளது ஹூண்டாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

அணிந்துகொள்பவருக்கு சூப்பர் ஹீரோக்களுக்கு  உள்ளது போன்ற கூடுதல் வலிமையைத் தரக்கூடிய இந்த எக்சோஸ்கெளிட்டன் வகை ரோபாட்டானது நூற்றுக் கணக்கான கிலோ எடையுள்ள பொருட்களைத் தூக்க பயன்படும் என்பதால் தொழிற்சாலைகள், ராணுவம் போன்ற இடங்களில் பயன்படுவதோடு உடல் மறு சீரமைப்பில் ஈடுபடுவோருக்கும் உதவிகரமாக இருக்கும் என்கிறது ஹூண்டாய்!  

சுவாரசியமாக, இந்த ரோபாட் உற்பத்தி திட்டத்துக்கு 'அடுத்த நகர்வு' என்று பெயரிட்டு இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் மனிதர்களின் போக்குவரத்து மற்றும் பொருட்களின் நகர்வு ஆகியவற்றுக்கு இந்த புதிய ரோபாட் உடை பெரிதும் பயன்படும் என்கிறது. 

முக்கியமாக, ஹூண்டாய் மட்டுமல்லாமல் லாக்ஹீட் மார்டின், சூட்எக்ஸ் மற்றும் வாரியார் வெப் எனும் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்கள் பயன்படுத்தக்கூடிய ரோபாட்டிக் உடைகளைத் தயாரித்து வரும் அமெரிக்காவின் ராணுவ ஆய்வு நிறுவனமான DARPA   ஆகிய பல்வேறு நிறுவனங்கள் எக்சோஸ்கெளிட்டன் வகை ரோபாட் உற்பத்தியில் களமிறங்கியுள்ளன. எனவே, தற்போது சுமார் 26 லட்சம் ரூபாயாக இருக்கும் இந்த வகை ரோபாட்டின் விலை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது என்று கூறப் படுகிறது.

ரோபாட்டிக் உடை - இதை அணிந்து கொண்டு பல கடினமான வேலைகளை செய்ய முடியும்.

Post a Comment

0 Comments