Subscribe Us

சந்திரிகாவையும், எஸ்.பியையும் ஓரம்கட்ட முயற்சி! மைத்திரியின் கைங்கரியம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் மற்றும் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க ஆகியோரை ஓரம்கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க , பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்தில் அன்றைய ஜனாதிபதி சந்திரிகாவின் செல்லப்பிள்ளையாக இருந்தார்.
அதன் காரணமாக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தர்மசிறி சேனநாயக்க மறைவின் பின்னர் நியாயமாக மைத்திரிக்குக் கிடைக்க வேண்டிய பொதுச் செயலாளர் பதவியை சந்திரிகாவின் ஆசியுடன் தட்டிப் பறித்துக் கொண்டார்.
அதன் பின் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவியதையடுத்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவி பறிபோனதுடன், அந்தப் பதவி மைத்திரியை தேடி வந்தது.
அதே நேரம் எஸ்.பி.யும் சந்திரிகாவும் ஜென்ம விரோதிகளாகவும் மாறிப் போயிருந்தனர்.
ஆனால் மஹிந்தவுக்கு எதிரான காய்நகர்த்தல்களின் போது மத்திய மாகாணத்தில் எஸ்.பி. திசாநாயக்க முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடிய ஒருவர் என்பதால் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியும், தேசிய அரசாங்கத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் அமைச்சுப் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொருளாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து செயலாற்றத் தொடங்கியது முதல் சந்திரிகாவுக்கும் அவருக்குமான நல்லுறவு படிப்படியாக உருவாகத் தொடங்கியதன் காரணமாகவே இவை அனைத்தும் எஸ்.பி.க்கு கிடைத்திருந்தன.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளர் விஸ்வா வர்ணபாலவின் மறைவை அடுத்து அந்தப் பதவி தனக்கு கிடைக்கும் என்று எஸ்.பி. கடுமையான ஆவலுடன் காத்திருந்தார்.
ஆனால் அந்தப் பதவிக்கு மைத்திரியின் நெருங்கிய சகாவான அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டமை எஸ்.பி.க்கு கடும் மனக்கலக்கத்தை ஏற்படுத்தியது.
அதே நேரம் எஸ்.பி. மட்டுமன்றி சந்திரிகாவும் இதன் காரணமாக கடும் அதிருப்தியடைந்தார்.
இதன் காரணமாக அரசாங்கத்தின் போக்கு குறித்தும் சில இடங்களில் பகிரங்க அதிருப்தியை வெளிக்காட்டினார்.
இது மைத்திரிக்கும் அவரது நெருங்கிய சகாக்களுக்கும் பிடிக்கவில்லை. அதன் காரணமாக அவர்கள் டிலான் பெரேரா போன்றவர்களைக் கொண்டு சந்திரிகாவை மட்டுமன்றி அவரது ஆஸ்தான சீடரான எஸ்.பி.யையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
அத்துடன் சுதந்திரக் கட்சியின் முக்கிய நிகழ்வுகளிலும் இருவரையும் தள்ளி வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இது சந்திரிகாவுக்கும், எஸ்.பி. திசாநாயக்கவுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதிலிருந்து விடுபடும் முகமாக சந்திரிகாவின் ஆசியுடன் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவும் முடிவை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க மேற்கொண்டுள்ளார்.
இதையறிந்த ஜனாதிபதி மைத்திரிபால கடந்த புத்தாண்டின் மறுநாள் எஸ்.பி. திசாநாயக்கவின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று அவரை ஆறுதல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
எனினும் எஸ்.பி.யின் மனக்கலக்கம் இன்னும் குறைந்தபாடில்லை என்று கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments