Subscribe Us

header ads

கல்பிட்டி வை.எம்.எம்.ஏ. கிளை கிரிகட் அணி சம்பியன் பட்டத்தை சுபிகரித்து கொண்டது

ரூஸி சனூன்  புத்தளம்
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையினால் நடாத்தப்பட்ட புத்தளம் பிராந்திய வை.எம்.எம்.ஏ. கிளை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித்தொடரில் நடப்பு சம்பியனான புத்தளம் வை.எம்.எம்.ஏ. கிளை அணியினை வீழ்த்தி கல்பிட்டி வை.எம்.எம்.ஏ. கிளை அணி சம்பியனாகியுள்ளதோடு புத்தளம் வை.எம்.எம்.ஏ. கிளை அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
இந்த போட்டி தொடரானது சனிக்கிழமை (26) மாலை புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எம்.டி.எம். நபீல், செயலாளர் எம். முஜாஹித் ஆகியோர் இந்த போட்டி தொடரினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த போட்டி தொடருக்கு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, புத்தளம் ட்ரகன்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் வியாபார நிறுவனங்கள் அனுசரணை வழங்கி இருந்தன.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவைக்குள் இளைஞர்களை உள்வாங்கும் நோக்கில் இளைஞர்களை கவரும் விதத்தில் இந்த போட்டி தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அணிக்கு 05 பேர்களை கொண்ட 05 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டி தொடரில் அனுராதபுரம், பாலாவி, கல்பிட்டி, புத்தளம், ஹுசைனியாபுரம், பாலாவி எருக்கலம்பிட்டி, கெகுனுகல, கஹடகஸ்கிரிய,  கெகிராவ, மொரொகொல்ல, கஹடோவிட்ட ஆகிய வை.எம்.எம்.ஏ. கிளை அணிகள் கலந்து கொண்டன.
விலகல் அடிப்படையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு புத்தளம் வை.எம்.எம்.ஏ. கிளை அணியும், கல்பிட்டி வை.எம்.எம்.ஏ. கிளை அணியும் தகுதி பெற்றன. இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புத்தளம் வை.எம்.எம்.ஏ. கிளை அணி 03 விக்கட் இழப்புக்கு 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
49 ஓட்ட இலக்கில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்பிட்டி வை.எம்.எம்.ஏ. கிளை அணி விறு விறுப்பான இறுதிக்கட்டத்தில் 05 ஆவது ஓவரின் இறுதி பந்தில் 01 ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் இறுதி பந்தில் அந்த ஒரு ஓட்டத்தினை பெற்றுக்கொண்டதால் அவ் அணி ஒரு விக்கட்டினால் வெற்றி பெற்று சம்பியனானது.
இந்த போட்டி தொடரினை புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலிசப்ரி கலந்து சிறப்பித்தார். அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய தலைவர் ஸாதிக் எம். சலீம், தேசிய செயலாளர் மகாரிம் ஏ.தாஹா, தேசிய பொருளாளர் சஹீத் எம் றிஸ்மி, முன்னாள் தேசிய தலைவர்களான சுபைர் ஹசன், எம்.எஸ். ரஹீம், வை.எம்.எம்.ஏ. பேரவையின் விளையாட்டு குழு தலைவர் ரிஸ்வி பாரூக், புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், வை.எம்.எம்.ஏ. பேரவையின் வவுனியா மற்றும் மன்னார் அமைப்பாளர் ஏ.ஜீ. நவாஸ்தீன், புத்தளம் மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஸாம் உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

சம்பியன் மற்றும் ரன்னரப் அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன. சிறந்த களத்தடுப்பாளராக கல்பிட்டி அணியின் நியாஸ், சிறந்த துடுப்பாட்ட வீரராக புத்தளம் அணியின் எம்.ஆர். அஸ்கின், இறுதிப்போட்டியின் சிறந்த வீரராக  கல்பிட்டி அணியின் சுஹைர், சிறந்த பந்து வீச்சாளராக கல்பிட்டி அணியின் சாஜித் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த போட்டி தொடரிலிருந்து  கல்பிட்டி, புத்தளம், பாலாவி மற்றும் கெகுனுகெல ஆகிய நான்கு அணிகள் கொழும்பில் நடைபெறவுள்ள அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. அணிகளுக்கிடையிலான இறுதி போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
-Puttalam online-















Post a Comment

0 Comments